

*
வெள்ளம் தமிழகப் பதிப்புத் துறையைச் சூறையாடியதோடு, புத்தக விற்பனையை முற்றிலுமாக முடக்கியிருப்பதையும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியிருப்பதையும் வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தது ‘தி இந்து’. கூடவே, இந்தச் சூழலை மாற்றி அறிவுத் துறையினரின் துயர் போக்க புத்தாண்டு அன்று நாம் முதலில் சந்திப்பவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக அளித்து, புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்வதை ஒரு இயக்கமாக முன்னெடுப்போம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் அதிர்வுகளை உண்டாக்கியிருப்பதைக் கடந்த இரு நாட்களாக வாசகர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் உணர்த்துகின்றன. பதிப்புத் துறையின் துயர் போக்க மக்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சியில், தங்களாலான பங்களிப்பை அளிக்க பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமான ‘பபாசி’யும் முன்வந்திருக்கிறது. இதன்படி, தமிழகத்தின் எல்லாப் புத்தகக் கடைகளையும் டிச.31 அன்று இரவு முழுக்கத் திறந்துவைக்கவும் டிச.31, ஜன.1 இரு நாட்களும் 10% தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்கவுமான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ‘பபாசி’ தெரிவித்திருக்கிறது.
நல்ல புத்தகம் ஒரு நல்லாசிரியர்;
புத்தக வாசிப்பு ஒரு அரசியல் நடவடிக்கை!
அறிவியக்கத்தின் துயர் துடைப்போம்;
புத்தகப் பரிசுடன் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வோம்!
- ஆசிரியர்