Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

மனித உயிரின எதிர்கொள்ளல்: ‘ஷேர்னி' காட்டும் வழி

ஆதி மனித இனத்தின் வாழிடமாகவும், நவீன மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவையாகவும் உள்ள காடுகளை - இயற்கை செழித்துள்ள நிலப்பரப்புகளை அடைவதற்கான பெரும் போட்டி இந்த நூற்றாண்டில் தீவிரமடைந்திருக்கிறது. இந்தப் போட்டியில் அனைத்து நவீன ஆயுதங்களுடன் மனித இனமும், இயற்கையின் நிரலுக்கு ஏற்ப வாழும் நிராயுதபாணிகளாகக் காட்டுயிர்களும் எதிரெதிர் நிலையில் நிற்கின்றன. இந்தச் சமமற்ற போட்டியில் முதல் கட்ட இழப்பு நிச்சயமாகக் காட்டுயிர்களுக்குத்தான் அதிகம் இருக்கும். ஆனால், இப்படிக் காட்டுயிர்களையும் காடுகளையும் நிர்மூலமாக்கத் தொடங்கும் செயல்பாட்டின் விளைவு சுபமாக இருக்கப்போகிறதா? இந்தப் பிரச்சினையின் ஆழ அகலத்தைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி திரை ஊடகத்தால் சிறப்பாகச் சொல்ல முடியும். வித்யா பாலன் நடிப்பில், அமித் மசூர்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஷேர்னி’, அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிறது.

நெருக்கடியில் காட்டுயிர்கள்

2018-ல் மஹாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் ஆட்கொல்லிப் புலியாக அடையாளப்படுத்தப்பட்ட அவ்னி என்கிற பெண்புலியை, அரசு ஒப்புதலுடன் தனியார் வேட்டை ஆர்வலர் சுட்டுக்கொன்றார். அந்தப் புலி சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில், இரண்டு 10 மாதக் குட்டிகள் அதற்கு இருந்தன. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே ‘ஷேர்னி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. சரி, ஆட்கொல்லிப் புலிகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

2016-ல் நீலகிரி கூடலூர் பகுதியில் தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்து ஒருவரைக் கொன்ற புலி, அடுத்த 8 நாட்களில் அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது. காட்டுயிர்களின் வாழிடமான காட்டை ஆக்கிரமித்து நீலகிரி மசினகுடி பகுதியில் சொகுசு விடுதி நடத்திவரும் விடுதி உரிமையாளரும் அவருடைய ஊழியரும் யானையின் மீது எரியும் டயரை வீசினார்கள். 2021 ஜனவரியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இரண்டு வார இடைவெளியில் அந்த யானை இறந்தது. 2020 ஜூனில் கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் பன்றிக்கு வைக்கப்பட்ட அன்னாசிப்பழ அவுட்டுக்காயை கர்ப்பிணி யானை ஒன்று கடித்ததில், அது வெடித்து வாய் கிழிந்து பலியானது.

2015 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் யானையுடன் ஏற்பட்ட எதிர்கொள்ளலில் 246 பேர் பலியாகியுள்ளனர் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டக் கேள்வி ஒன்றுக்குத் தமிழக வனத் துறை பதில் அளித்துள்ளது. இதே காலத்தில் 561 யானைகள் பலியாகியுள்ளன என ஒன்றிய வனத் துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். மனிதர்களைப் போல் இரண்டு மடங்கு யானைகள் பலியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டின் ஏழே மாதங்களில் 64 காட்டு யானைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்துப் பலியாகின. இதற்கான காரணங்களைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்றுவருகிறது.

மனித – உயிரின எதிர்கொள்ளலில் இவையெல்லாம் காட்டுயிர்களுக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்ட மிகப் பெரிய அத்துமீறல்கள். உண்மையில் இங்கே யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, காட்டுப் பன்றி போன்றவை நம் கண்ணுக்குச் சட்டென்று புலப்படும் பெரிய பாலூட்டிகள். இவற்றைப் போன்று செய்திகளிலோ கணக்கீடுகளிலோ வராமல் எத்தனையோ சிறிய பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள், சிற்றுயிர்கள் பெருமளவில் பலியாகியும், மனிதர்களால் கொல்லப்பட்டும் வருகின்றன.

விளிம்புக்குத் தள்ளப்படும் உயிரினங்கள்

‘ஷேர்னி’ படத்தின் கதை, இந்தியாவில் புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் உத்தர பிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. காட்டின் எல்லையில் இருக்கும் அந்தக் கிராம மக்களுக்குப் புலி என்பது அந்நிய உயிரினமில்லை. ஆனால், காட்டுக்குள் ஆடு-மாடு மேய்க்க வரும் முதியவரையும், சுள்ளி பொறுக்க வரும் முதிய பெண்ணையும் ஒரு புலி அடுத்தடுத்து தாக்கிக் கொல்கிறது. அதன் பிறகு பிரச்சினை சூடுபிடிக்கிறது. பொதுவாக, ஆண்புலி 60-100 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், பெண்புலி 20 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் வாழக்கூடியவை. தேசியப் பூங்காவாக இருக்கும் அடர் காட்டிலிருந்து, காட்டின் விளிம்புப் பகுதிக்கு அந்தப் புலி வந்திருக்கிறது.

இரட்டைக் குட்டிகளுடன் இருக்கும் அந்தப் பெண்புலியானது வனத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பிறகு அடர்ந்த காடு நோக்கி நகர்வது தெரிகிறது. இப்படி நாள்தோறும் சிறிது சிறிதாக அது நகர்ந்துவரும் பாதையில், பெருமளவில் காடழிக்கப்பட்டு, தாமிரக் கனிமச் சுரங்கமும் மற்றொருபுறம் அதிவேகமாக வாகனங்கள் விரையும் நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டையும் தாண்டி அடர்ந்த காட்டுக்குள் எப்படி அது போக முடியும்?

மேய்ச்சல் - சுள்ளி பொறுக்குவதற்காகக் காட்டைச் சார்ந்துள்ள கிராம மக்கள், வனத் துறையின் முயற்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை; புலிகளோ மனிதத் தொந்தரவற்ற காட்டையே எதிர்நோக்குகின்றன; இரு தரப்புக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் வனத் துறை, புலியைப் பாதுகாக்க முயல்கிறது.

இதற்கிடையே, அனைத்துத் தரப்பினருக்கும் பலனளிக்கும் சுமுகத் தீர்வை நாடுவதைவிட, தங்களுக்கு அதிலிருந்து என்ன லாபம் கிடைக்கும் என்பதையும், சட்டென்று பிரச்சினையை முடித்துவிடவுமே ஆட்சியாளர்களும் உயர் அதிகாரிகள் தரப்பும் முயல்கின்றன. இதன் காரணமாகத் தெளிவற்ற வனத் துறை உயரதிகாரிகள், தனியார் வேட்டை ஆர்வலர், ஆட்சியாளர்கள் - உள்ளூர் அரசியலர்கள் என மூன்று தரப்பினரின் பிடியில் அந்தப் புலி சிக்கிக்கொள்கிறது.

யார் காரணம்?

அறிவியல் புரிதலுக்கும் கற்பிதத்துக்கும் இடையிலான மோதல் இந்தப் படத்தில் நிகழ்கிறது. நிஜ உலகைப் போலவே படத்தின் நிகழ்வுப் போக்கிலும் கற்பிதமே தலைதூக்கி நிற்கிறது. காரணம், “மக்கள் எதை நம்புகிறார்களோ, அதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏன் மறுத்துப் பேசுகிறீர்கள்?” என்று மாவட்ட வன அதிகாரியின் வாயை அடைக்கிறார் அமைச்சர். கரடியால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரை, புலி கொன்றுவிட்டதாகத் தவறாக முத்திரை குத்தி அரசியல் ஆதாயம் தேட முனைகிறார் மற்றொரு அரசியலர். “நான் ஒரு காட்டுயிர்ப் பாதுகாவலர், அதே நேரம் 7 புலிகளையும் 32 சிறுத்தைகளையும் கொன்றிருக்கிறேன்!” என்று பீற்றிக்கொள்கிறார் தனியார் வேட்டை ஆர்வலர்.

இப்படியாக, அதிகாரவர்க்கம் பிரச்சினையை அறிவியல்பூர்வமாகக் கையாளத் தவறி, மனிதர்கள்-உயிரினங்கள்-காடுகள் இடையிலான சமநிலை குலைவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அழுத்தம்திருத்தமாக உணர்த்தப்படுகிறது. ஆட்சியாளர்கள், அவர்கள் முன்னெடுக்கும் ‘வளர்ச்சித் திட்டங்கள்’, பெருநிறுவனங்களுடனான அவர்களுடைய கூட்டு போன்றவை காடுகளையும் உயிரினங்களின் வாழிடத்தையும் சீர்குலைப்பதையும், இந்தச் சீர்குலைவே மனித-உயிரின எதிர்கொள்ளல் தீவிரமடைவதற்கு அடிப்படை என்பதையும் படம் ஆர்ப்பாட்டமில்லாமல் பதிவுசெய்துள்ளது.

அறுபடாத தொடர்பு

இந்தியக் காடுகளில் புலிகளும் யானைகளும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக இயற்கை ஏற்படுத்திய தடைகளைக் கடந்து வெற்றிகரமாக வாழ்ந்துவிட்டன. நவீன காலத்தில் மனிதர்கள் ஏற்படுத்தும் தடைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை திணறிவருகின்றன. காடுகளில் வாழ்ந்துவரும் பழங்குடிகள் முந்தைய நூற்றாண்டுகளில் அரிதாகவே காட்டுயிர்களுடனான எதிர்கொள்ளல், காயமடைதல், பலியாதல் போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்திய பத்தாண்டுகளில் இந்த எதிர்கொள்ளல் அதிகரிக்கிறது என்றால், அதற்கான காரணங்கள் நிச்சயம் புதியவையாகவே இருக்க வேண்டும்.

காடுகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான பிணைப்பு இன்னும் முழுமையாக அறுபட்டுவிடவில்லை. காட்டையும் உயிரினங்களையும் பாதுகாப்பதில் அவர்களுடைய இணக்கமான அணுகுமுறையும் மரபறிவும் நிச்சயம் கைகொடுக்கும். இந்தப் படத்திலும் அவர்கள் மூலமாகவே நம்பிக்கை பிறக்கிறது. “எங்கள் பெயரைச் சொல்லி அந்தப் புலி கொல்லப்படுவதை விரும்பவில்லை” எனக் கூறும் பழங்குடிப் பெண்தான், படத்தின் முடிவில் புலிக் குட்டிகளுக்கு உணவு ஈந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அவற்றை நகர்த்தும் வேலையைச் செய்கிறார். பழங்குடி மக்களைப் போலவே துணிச்சலும், மக்களின் தேவைகள் சார்ந்த புரிதலும் கொண்ட அரசு அதிகாரிகளை ஆட்சியாளர்களும் அரசியல்வர்க்கமும் செயல்பட விடுகின்றனவா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

நமக்குக் கிடைக்கும் தண்ணீர், தூய்மையான காற்று உள்ளிட்ட ஒவ்வொரு இயற்கை வளமும் காடும் காட்டுயிர்களும் இயற்கைச் சுழற்சியில் நமக்கு அளித்துவரும் செலவில்லா சேவைகள். காடுகளை அவற்றின் இயல்பிலிருந்து குலைக்காமல் இருந்தால், வெளி அழுத்தங்களைக் காடுகளில் அதிகரிக்காமல் இருந்தால், எந்த உயிரினமும் வெளியே வரப்போவதோ, மனிதர்களுக்கு ஆபத்தாக மாறப்போவதோ இல்லை என்பதே நாம் உணர வேண்டியது.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x