Published : 20 Dec 2015 09:34 am

Updated : 20 Dec 2015 09:39 am

 

Published : 20 Dec 2015 09:34 AM
Last Updated : 20 Dec 2015 09:39 AM

மூழ்கியது அலட்சியத்தால்!

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடியில் கனமழையால் அடைந்த சேதம் தொடர்பாக வானிலை ஆய்வு நிலைய அதிகாரி ஒரே வரியில் சுருக்கமாகக் குறிப்பிட்டார், “இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சோகம்!”

பொதுவாக வட கிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் 20-ஐ ஒட்டித் தொடங்கிவிடும். இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் புவனகிரி, சிதம்பரம், கடலூர், லால் பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, விருத்தாசலம் உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது. அன்று தொடங்கிய மழை இடை விடாமல் பெய்து தீபாவளி நாளிலும் தொடர்ந்தது. அன்று ஒரு நாளில் நெய்வேலியில் மட்டும் 48 செ.மீ. மழை கொட்டியது. பண்ருட்டி 35 செ.மீ., சே்ததியாதோப்பு, சிதம்பரம் இரண்டிலும் 34 செ.மீ. மழை பெய்தது. பரங்கிப்பேட்டையில் 33 செ.மீ. பெய்தது. இதனால் மாவட்டமே வெள்ளத்தில் மூழ்கியது.


விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின, நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டது, ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள், சவுக்குக் கன்றுகள் வேருடன் பெயர்ந்தன. ஏராளமான உயிரிழப்பு நேரிட்டது. குடிசை வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. மின்மாற்றிகள் கடுமையாகச் சேதம் அடைந்தன.

இதுவரை இருந்திராத வகையில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட கடும் சேதத்துக்குக் காரணம் அரசு நிர்வாகம் பல்வேறு துறைகளில் முறையாகச் செயல்படத் தவறியதுதான். கடந்த 10 ஆண்டுகளாகவே ஆறுகளையும் கால்வாய்களையும் பாசனக் கால்வாய்களையும் குட்டைகளையும் குளங்களையும் ஏரிகளையும் தூர் வாரி, ஆழப்படுத்தி, களைகளை அகற்றி, கரைகளை உயர்த்தி, வலுப்படுத்தத் தவறியதால்தான் பெருவெள்ளம் நூற்றுக்கணக்கானோரைப் பலிகொண்டது.

கடலூர் பாதிப்புகள்

கடலூரின் நில அமைப்பே சுவாரசியமானது. கெடிலம், தென் பெண்ணை, பரவனாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, உப்பனாறு, வெள்ளவாரி உள்ளிட்ட பல ஆறுகள் மாவட்டத்தின் பரப்பைக் குறுக்கும் நெடுக்குமாக ஊடாடிச் செல்கின்றன. வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரி போன்ற பெரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவை தவிர ஏராளமான சிறிய ஏரிகள், குட்டைகள், குளங்கள், வாய்க்கால்கள், பாசனக் கால்வாய்கள் நிறைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

மாநிலத்தின் வளமான மண்ணில் நெல், கரும்பு, நிலக்கடலை, வாழை, காய்கறிகள், குண்டுமல்லி ஆகியவை லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடியாகின்றன. மரவள்ளிக்கிழங்கு சாகுபடியும் நடக்கிறது. ஊடுபயிராக உளுந்து பயிரிடப்படுகிறது. செழிப்பான நஞ்சை நிலங்களுடன் புஞ்சை நிலங்களும் உள்ளன. அவற்றில் முந்திரி, சவுக்கு ஆகிய தோப்புகள் பராமரிக்கப்படுகின்றன. பண்ருட்டியைச் சுற்றிய பகுதிகள் பலாப்பழச்சாகுபடிக்குப் பெயர்போனவை. குள்ளஞ்சாவடி குறிஞ்சிப்பாடி பகுதி நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, வாழைச் சாகுபடிக்காக அறியப்பட்டவை.

கடலோர மாவட்டமாக இருப்பதால் அடிக்கடி புயல் மற்றும் பெருமழையால் பாதிக்கப்படுகிறது. 2004 டிசம்பரில் சுனாமி தாக்கியது; 2005 நவம்பரில் வெள்ளம் சீரழித்தது; 2008-ல் நிஷா 2009-ல் நீலம் என்ற புயல்கள் வீசின. 2011-ல் தாணே என்ற புயல் கடலூரையும் புதுச்சேரியையும் உலுக்கி எடுத்தது.

என்எல்சி மீது குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில்தான் ‘நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’ (என்.எல்.சி.) இருக்கிறது. குறிஞ்சிப்பாடியில் உள்ள நெய்வேலிதான் அதன் தலைமையகம். நெய்வேலியைச் சுற்றியுள்ள இடத்தில் மிகப் பெரிய பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது. இது திறந்தவெளி சுரங்கம். 3 மிகப் பெரிய சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டியெடுக்கப்படுகிறது. நிலக்கரியை வெட்டி எடுப்பதுடன் மின்சார உற்பத்தியும் இங்கேயே மேற்கொள்ளப்படுகிறது. அதன் 4 அனல் மின் நிலையங்களில் மொத்தம் 3,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்குக்கு இந்த மத்திய அரசு நிறுவனம்தான் காரணம் என்று இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நில உடைமையாளர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள், பொறியாளர்கள், சமூக சேவகர்கள், வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோருமே சுமார் 40 கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கும் உயிரிழப்பு மற்றும் இதர சேதங்களுக்கும் முன் எச்சரிக்கை ஏதுமின்றி, நவம்பர் 9-ல் மேல் பரவனாற்றில் திறந்தவெளிச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான் காரணம் என்று கூறுகின்றனர்.

பரவனாற்றில் பாய்ந்த தண்ணீர் பாசனக் கால்வாய்களிலும் இதர வாய்க்கால்களிலும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது. அவை நிரம்பி செங்கல் ஓடை, பெரிய ஓடை, சின்ன ஓடை, கரி ஓடை ஆகியவற்றில் வெள்ளத்தைப் பெருக்கியது. பொதுப்பணித் துறை இந்த வாய்க்கால்களையும் ஓடைகளையும் தூர் வாராமலும் ஆழப்படுத்தாமலும் கரையை உயர்த்தாமலும் கரைகளை வலுப்படுத்தாமலும் களைகளைக் களையாமலும் விட்டதால் இவற்றின் நீர்கொள்ளும் திறன் வெகுவாகக் குறைந்துவிட்டிருந்தது. எனவே வெள்ளம் கரைபுரண்டு பொங்கிப் பிரவாகமெடுத்து கிராமங்களை நாலா புறங்களிலும் சூழ்ந்தது.

உதாரணத்துக்கு கல்குணம் என்ற கிராமத்தில், செங்கல் ஓடை என்ற பாசனக் கால்வாய் அடையாளமே தெரியாதபடிக்குத் தூர்ந்துபோயிருந்தது. அதில் நாணல், தருவை, நெய்வேலி காட்டாமணக்கு என்ற புல் வகைகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன. கல்குணத்தில் மட்டும் 335 ஏக்கர் நிலங்களில் பயிரிட்டிருந்த நெல் பயிர் நாசமாகிவிட்டது. அதிலும் 250 ஏக்கர் நிலங்களில் 2 அடி உயரத்துக்கு வண்டல் படிந்துள்ளது. நெல் வயலில் வாத்து மேய்த்துக்கொண்டிருந்த கணவனும் மனைவியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆறு அடி உயரத்துக்கு வெள்ள நீர் சீறிப் பாய்ந்ததால் நூற்று க்கும் மேற்பட்ட குடிசைகள் சிதைந்து சின்னாபின்னமாகி வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன. தலித்து களின் குடியிருப்புகள் மோசமாக பாதிப்படைந்தன.

இந்தச் சீரழிவுக்கு எது காரணம் என்பதை கல்குணத் தைச் சேர்ந்த விவசாயத் தொழி லாளி டி. சதாசிவம் (57) சுட்டிக் காட்டினார். என்எல்சி வெளியேற்றிய தண்ணீர் பரவனாற்றில் பாய்ந்தது. அந்த ஆற்றுக்கு அணை எதுவும் கிடையாது. இதனால் பரவனாற்றின் வெள்ளம் அப்படியே கல்குணம் அருகில் உள்ள செங்கல் ஓடையில் பாய்ந்தது. செங்கல் ஓடையும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

இந்த ஓடையைத் தூர் வாரி ஆழப்படுத்தும் பணியைப் பெற்ற ஒப்பந்ததாரர் அதைச் சரிவரச் செய்யவில்லை. ஓடையின் கரையருகில் மட்டும் அவர் பொக்லைன் இயந்திரம் மூலம் சிறிதளவு மண் அள்ளியிருக்கிறார். வெள்ளம் பெருக்கெடுத்தபோது அது தாங்கவில்லை. வெள்ளம் வரும்போதெல்லாம் இப்பகுதி இப்படித்தான் சேதப்படுகிறது. பயிர்களுக்கும் வீடுகளுக்கும் சேதம் ஏற்படுகிறது. பரவனாறு, செங்கல் ஓடை ஆகியவற்றின் கரைகளை உயர்த்துவதையாவது என்எல்சி செய்ய வேண்டும் என்கிறார் அவர்.

சோகத்தில் மூழ்கிய கல்குணம்

கல்குணம் கிராமத்துக்குச் சென்றபோது, கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. செங்கல் ஓடை வாய்க்காலில் உடைப்புகளை அடைக்கும் வேலையும் கரையை உயர்த்தும் வேலையும் இப்போது நடந்துகொண்டிருந்தன. வடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வி.எம். சூரியமூர்த்திதான் அந்தப் பணியை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்.

சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “பரவனாற்றில் என்எல்சி வெளியேற்றும் தண்ணீரால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. என்எல்சி வெளியேற்றிய தண்ணீரால் விசூர், பெரிய காட்டுப்பாளையம் மற்றும் அவற்றின் அருகில் உள்ள கிராமங்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுவிட்டது. குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, எல்லப்பன்பேட்டை, கல்குணம், அம்பேத்கர் நகர் ஆகிய கிராமங்களில் பயிர்களுக்கும் சொத்துகளுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்கும் குறிஞ்சிப்பாடி அருகே ரயில் பாதை சரிந்ததற்கும் இந்தத் தண்ணீரே காரணம்; வடலூர், குறிஞ்சிப்பாடி, ஆலப்பாக்கம், பெரியபட்டு பகுதிகளில் சுமார் 40 கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்தது” என்றார் பாலகிருஷ்ணன்.

“திமுக, அதிமுக என்று எந்த அரசாக இருந்தாலும் வெள்ளச் சேதத்திலிருந்து கடலூரைக் காக்க எதையுமே செய்யவில்லை” என்ற அவர், ஆண்டுதோறும் ரூ.1,500 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டும் என்எல்சி நிறுவனம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்படுத்த 50 கோடி ரூபாயைத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “முழுக் கடலூர் மாவட்டத்தையும் அது ஏற்று, சேதங்களைச் சீர்படுத்தி, வெள்ளநீர் வடிகால்களை முறையாக தூர்வாரி, ஆழப்படுத்தி, களைகளை அகற்றிப் பராமரிக்கலாம்” என்று அவர் தெரிவித்தார். பாலகிருஷ்ணன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் ஏற்பட்டுள்ள சேதம் சுமார் ரூ.3,500 கோடியாக இருக்கக்கூடும் என்றார். 1.5 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல், 3 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நிலக்கடலை ஆகியவை முற்றிலும் நாசமாகிவிட்டன. 50,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு அழுகத் தொடங்கிவிட்டது. 40,000 ஏக்கரில் முந்திரி மரங்களிலிருந்து பூக்கள் உதிர்ந்துவிட்டன.

எனவே இவற்றில் முந்திரி இனி காய்க்காது. 10,000 ஏக்கரில் நட்டிருந்த சவுக்கு மரக் கன்றுகள் வேருடன் பெயர்ந்து விழுந்துவிட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் உண்பதற்காகப் பயிரிட்டிருந்த கரும்பும் அழிந்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் வெள்ளத்தில் சிக்கியதால் ஆயிரக்கணக்கில் கோழிகள் இறந்தன. குடிசைகள், காங்கிரீட் வீடுகள் என்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சிக்கி கடும் சேதம் அடைந்தன. ஏராளமான மீன்பிடிப் படகுகள் சேதம் அடைந்தன. ஏராளமான படகுகள் நாசமாகிவிட்டன.

கடலூர் நகரினூடாகப் பாயும் கெடிலம் ஆற்றைப் பார்க்கச் சகிக்கவில்லை. காட்டு மரங்களும் கொடிகளும் புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. இதனால் நீரோட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே ஆற்றில் ஓட வேண்டிய தண்ணீர் பொங்கி பக்கவாட்டில் வழிந்து பல வீடுகளிலும் குடியிருப்புகளிலும் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் 8 முதல் 16 வரையில் பெய்த மழைக்கு 522 ஏக்கர்களில் நெல் பயிர்களும் சிறு தானியங்களும் அழுகிவிட்டன. நிலக்கடலை, பருத்தி, பருப்பு வகைகள் 2,181 ஹெக்டேர்களில் நாசமாகிவிட்டன. 687 ஹெக்டேர்களில் தோட்டக்கலைப் பயிர்கள் பிழைக்கவில்லை. 3,000 குடிசைகள் சேதம் அடைந்தன.

எல்லாப் பகுதிகளிலும் நாசம்

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராமம் விசூர். ஒரு தேசிய வங்கியின் சமூக ஒருங்கிணைப்பாளரான எஸ். செல்வி மேட்டுத் தெருவை எங்களுக்குச் சுற்றிக்காட்டினார். சிமென்ட் சுவரால் கட்டப்பட்ட நல்ல வீடுகளைக்கூட மழை வெள்ளம் கிழித்து சுவர்களைப் புரட்டி வீசியிருக்கிறது. வெள்ளம் அடித்துச் சென்று குவித்த மண்ணில் இந்தச் சுவர்களும் கூரைகளும் பிற கட்டுமானங்களும் சொருகிக் கிடந்தன. வடிவேலு என்பவரின் வீட்டில் அடித்து விலக்கப்பட்ட சுவர்களும் மண் குவியலும்தான் மிச்சம்.

அவருடைய மனைவி வாசுகியும் மகள் கவுசல்யாவும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் குறைந்த பிறகு ஒரு கி.மீ. தொலைவில் அவர்களுடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. வடிவேலுவும் பள்ளியில் படிக்கும் அவருடைய 2 மகன்களும்தான் மிஞ்சினர். மாட்டுக் கொட்டாய்கள் பல மீட்டர் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டுக் கிடந்தன.

எதிர்பாராத வெள்ளம்

இதேபோன்ற அலட்சியமே பெரியகாட்டுப்பாளையத்திலும் துயரத்தை ஏற்படுத்தியது. இங்கு பெரிய ஓடை, சின்ன ஓடை என்ற 2 ஓடைகள் தலித்துகளின் குடியிருப்புக்கு அருகில் ஓடுகின்றன. இங்கு ஒற்றை வீதியில் 136 கான்கிரீட் வீடுகள் உள்ளன.

பெரிய ஓடைக்கும் சின்ன ஓடைக்கும் இடையில் பெரிய மணல் திட்டு ஏற்பட்டது. தண்ணீர் மாலைபோல இதைச் சுற்றி ஓடி பிறகு சேர்ந்துகொள்கிறது. இந்தத் திட்டில்தான் 10 தலித் குடும்பங்கள் குடிசை போட்டு வாழ்கின்றன. நவம்பர் 9-ம் தேதி இரவில் 48 செ.மீ.க்கும் அதிகமாக மழை கொட்டியபோது இரண்டு ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளை அடித்துச் சென்றது. கான்கிரீட் வீடுகள் மட்டுமே ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தன.

தலித்துகள் வசித்த தெருவிலும் பாய்ந்த வெள்ளம் கீழே பாய்ந்து முந்திரி மரங்களை வேருடன் சாய்த்து, கோழிப் பண்ணைகளையும் அடித்துச் சென்றது. மண் திட்டில் இருந்த வீரமணி என்ற தொழிலாளியின் வீட்டிலிருந்த 10 பேரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 500 குடியிருப்புகள் உள்ள இளவரசன்பட்டுக்கும் இதே கதிதான்.

குள்ளஞ்சாவடியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆய்குப்பத்தில் ஒரு காலத்தில் 15.8 மீ. அகலத்துக்கு வாய்க்கால் இருந்தது, இப்போது 3 அடிக்கும் குறைவான அகலத்துக்குக் குறைந்துவிட்டது. பொதுப்பணித் துறைதான் இதைப் பராமரிக்கிறது. அன்றைய தினம் இந்த வாய்க்காலில் ஓடிய 5 அடி வெள்ளத்தில் என். முருகன் என்ற விவசாயி சிக்கினார். ஆனால், உயிர் தப்பினார்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த வாய்க்காலைத் தூர் வாராததுதான் வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டும் முருகன் வாய்க்காலில் தண்ணீர் பாயும் திசைகூட மாறிவிட்டது என்றார். வாய்க்கால் கரையிலும் நிறைய ஆக்கிரமிப்புகள். “எங்களுக்கு இலவசங்களே வேண்டாம்; ஆறுகளையும் வாய்க்கால்களையும் நன்கு தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்திப் பாசனத்துக்கு உதவுவது தடையற்ற மின்சாரம் வழங்குவது, தரமான சாலைகளை அமைத்துத் தருவது போன்றவற்றைச் செய்தாலே போதும்” என்கிறார் விவசாயி முருகன்.

தூத்துக்குடியில் வெள்ளம்

தூத்துக்குடியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் உப்பார் ஓடையில் உடைப்பு ஏற்பட்டுப் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. கடம்பூர், கயத்தாறு, மணியாச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் கன மழை பெய்தது. இந்த மழை நீரும், காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளமும் உப்பார் ஓடையில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தின. உப்பார் ஓடை மட்டுமல்ல; வீரபாண்டியபுரம் ஏரி உள்பட முறையாகப் பராமரிக்கப்படாத பல ஏரிகளின் கரைகளும் உடைந்தன.

எனவே தூத்துக்குடி நகரின் 20 பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அத்திமரப்பட்டி, ராஜீவ் நகர், முல்லைக்காடு, சேவியர்புரம், முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், ஓம் சாந்தி நகர், ஆதி பராசக்தி நகர், ஸ்டேட் பேங்க் காலனி ஆகியவை வெள்ளத்தில் சிக்கின. 3 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தது. செத்து விழுந்த பன்றிகள், பசுக்கள், எருதுகள், பறவையினங்கள் தேங்கிய தண்ணீரில் அழுகி மிதந்தன. உடைந்த கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்து வெளியேறிய தண்ணீர் மழை நீருடன் கலந்ததால் கொள்ளை நோய் பரவக்கூடிய ஆபத்து நேரிட்டது.

சென்னையின் துயரக் கதைகள் இன்னும் தொடர்கின்றன. எல்லா இடங்களிலும் வெள்ளப் பாதிப்புகளுக்கு அடிப்படைக் காரணம் ஒன்றுதான்: தொடரும் அலட்சியம்!


தமிழில் சுருக்கமாக: சாரி, ©: பிரண்ட் லைன்


மழை பாதிப்புதமிழக மழைஅரசு அலட்சியம்ஏரிகள் உடைப்புஅணைகள் திறப்புமழை வெள்ளம்தமிழக அரசு மெத்தனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x