

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மூலவரின் திருநாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும். பார்த்தசாரதியைச் சேவிக்காமல் நீர் அருந்த மாட்டார் அந்தப் பெரியவர். மாடவீதியில் குடியிருக்கிறார். அங்கிருந்து வெளியாகும் கீதாசாரியன் என்ற தத்தவார்த்தப் பத்திரிகையின் ஆசிரியரும் அவரே. வைணவத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது பெயரும் வேங்கட கிருஷ்ணன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைணவத் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். சென்ற ஆண்டு தோழர் நடராஜன் உதவியோடு அவரை அவர் வீட்டில் நானும் முத்துமீனாட்சியும் சந்தித்தோம்.
மதுரையில் நடந்த முற்போக்காளர்களின் கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
கம்பீரமான ஆகிருதி. நெற்றியில் முகம் மறைக்கத் திருமண். மேடையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரைப் பார்வையாளர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். இந்தக் கூட்டத்தில் இவர் எதற்கு என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றிய கருத்தரங்கு அது.
அவரைப் பேச அழைத்தார்கள்.
“உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். மேடையில் என்னைப் பார்த்ததும், நான் சொல்ல வேண்டியதை இங்கு சொல்லாமல் வேறெங்கும் சொல்லிப் பயனில்லை’’ என்று சொல்லித் தன் பேச்சை ஆரம்பித்தார்.
டாக்டர். வேங்கட கிருஷ்ணனின் மூதாதையர் ராம பக்தர்கள். தீவிரமான வைணவர்கள். அவருடைய பாட்டி ஒரு கனவு கண்டிருக்கிறார். ராமர் அவருடைய கனவில் வந்து எனக்குக் கோயில் கட்டு என்று கூறியிருக்கிறார். பாட்டி இதைத் தன் மகன்களிடம் சொல்லியிருக்கிறார். அவருடைய மகன்கள், “ஆகட்டும்! பணம் சேர்ப்போம், பின்னர் கோயில் கட்டுவோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். இது நடந்தது சுதந்திரத்துக்கு முன்பு. ஓரளவு பணம் சேரந்ததும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
ஸ்ரீராமரின் உத்தரவு அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்பதாகும். சரயு நதி தீரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லியிருக்கிறார். மகன்கள் மிகுந்த சிரமப்பட்டு, மாட்டுவண்டி, ரயில் என்று பயணம் செய்து, அயோத்தியை அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதிர்ச்சி.
நதிக் கரையில் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் குடியிருக்கிறார்கள். செய்வதறியாது திகைத்த அவர்களை ஒரு முஸ்லிம் பெரியவர் விசாரித்திருக்கிறார். இவர்கள் தாங்கள் வந்த விஷயத்தைக் கூறியுள்ளனர்.
குடியிருப்பில் உள்ள முஸ்லிம்களை அழைத்துக் கூட்டம் போட்டிருக்கிறார் பெரியவர். அவர்கள் அங்கு ராமர் கோயில் கட்ட இடம் கொடுக்கச் சம்மதித்து, அதற்கான பட்டாவைத் தரவும் தயாராக இருந்தார்கள்.
கோயில் கட்டப்பட்டது. அதற்கான பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள். மாற்றாக, பெருமாளின் கருட சேவையின்போது வீதிவலம் வர தாங்கள்தான் தூக்கி வர அனுமதி கேட்டிருக்கிறார்கள். பல வருடங்களாகக் கருட சேவை நடக்கிறது.
“என் மூதாதையர்களின் விருப்பப்படி நானும் ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி சென்று சேவை செய்துவருகிறேன்” என்று டாக்டர் வெங்கட கிருஷ்ணன் கூறி முடித்தார்.
ஆக, அயோத்தியில் வேறொரு இடத்தில் ராமர் கோயில் கட்டியாகிவிட்டது முஸ்லிம்களின் உதவியோடு.அதைக் கட்டியவன் தமிழன்!
- காஷ்யபன், தொடர்புக்கு: kashyapan1936@gmail.com