Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

மலைவாழ் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?- ‘சுடர்’ எஸ்.சி.நட்ராஜ் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைவாழ் குழந்தைத் தொழிலாளர்களில் இதுவரை சுமார் ஆயிரம் பேரை மீட்டு அவர்களைப் பள்ளிகளுக்கு அழைத்து வந்திருப்பவர் எஸ்.சி.நட்ராஜ். ‘சுடர்’ அமைப்பின் மூலமாகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கான முப்பது சிறப்புப் பள்ளிகளை நடத்தியிருப்பவர். மலைவாழ் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளில் பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து அவருடன் பேசியதிலிருந்து...

பழங்குடியின மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து இயங்கிவருகிறீர்கள். இவ்விஷயத்தை நோக்கி நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி?

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் முழு நேர ஊழியராக வேலைபார்த்தபோது, பெரும்பாலும் அவர்களது சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தான் முக்கியமானதாகக் கருதினேன். அவர்களது பட்டா கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களை எழுதுவது, அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அதிகாரிகளிடம் முறையிடுவது என்பதாகவே எனது பணிகள் இருந்தன. அடுத்து, பழங்குடி மக்களின் மொத்த உழைப்பையும் சுரண்டி, அவர்களது நிலங்களைப் பறிக்கும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டபோதுதான் அவர்கள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

இது 2007-ல் தொடங்கிய பயணம். கடந்த பதினைந்து ஆண்டுகளில் 30 கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறேன். எங்கெல்லாம் பழங்குடியினர் பள்ளிகள் இல்லையோ அங்கெல்லாம் இத்தகைய பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிகள் என்பவை ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களைத் தயார்ப்படுத்தி அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்துவிட வேண்டும். ஆனால், அருகில் அப்படி எந்தப் பள்ளிகளுமே இல்லை என்பதுதான் இதில் முக்கியமான பிரச்சினை. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மலைவாழ் கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத் தொடங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. 30-ல் 10 கிராமங்களில் அரசே பள்ளிகள் தொடங்கியிருக்கிறது. இன்னும் 14 கிராமங்களில் உள்ள குழந்தைகளை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்த்துவிட்டோம். இப்போது 6 கிராமங்களில் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவை விரைவில் பூஜ்ஜியமாக வேண்டும். மூடுவதற்காகவே இந்தப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. கூடிய விரைவில் மூட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதாவது, குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு.

இந்தப் பெருந்தொற்றுக் காலம் மலைவாழ் குழந்தைகளை எப்படிப் பாதித்திருக்கிறது?

குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் கோடை முகாம் நடத்துவோம். ஆடல், பாடல், காட்டுக்குள் பயணம், ஓரிகாமி, மண்பாண்டப் பயிற்சி ஆகியவற்றுடன் இடையிடையே கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவோம். ஒரு மாத கால இடைவெளியின் தொடர்ச்சியாக அவர்கள் பள்ளிக்கு வருவது நிரந்தரமாக நின்றுவிடக் கூடாது என்பதுதான் இந்தக் கோடை முகாம்களின் முக்கிய நோக்கம். வழக்கமான நாட்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் காட்டு வேலைகளுக்குச் சென்றுவிட்டால், வீட்டுக்கே சென்று பெற்றோர்களிடம் கலந்து பேசி, அவர்களைப் பள்ளிக்கு அழைத்துவரவும் வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில் முழுமையான கோடை விடுமுறையைக்கூடக் கொடுப்பதில்லை. அப்படியிருக்கையில், அவர்களைப் பார்த்தே ஒன்றேகால் வருடமாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. என்றாலும், உள்ளூர் ஆசிரியர்கள் வாரத்துக்கு ஒரு முறை மாணவர்களை வீட்டுக்கே சென்று பார்த்துப் பேசிவிட்டு, முட்டை, சுண்டல் போன்றவற்றைக் கொடுத்துவிட்டுத்தான் வருகிறார்கள். மலைவாழ் பகுதிகளில் சாதாரண நாட்களிலேயே அந்நியர்கள் உள்ளே செல்வதில்லை. பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் இன்னும் அதைக் கடுமையாக்கிவிட்டன. எனவே, அங்கிருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, பள்ளிகளை நடத்தலாம். அரசு இது பற்றியும் யோசிக்க வேண்டும். மீட்டு வந்த குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள் என்று கேட்கையில் வேதனையாக இருக்கிறது.

ஓராண்டு காலமாகப் பள்ளிக்கூடமே திறக்கவில்லை, பாடங்கள் நடக்கவில்லை. தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. சமவெளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. மலைவாழ் மாணவர்களோ கரும்பு வெட்டும் வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவர்களை மீட்டுவருவது பெரும் சிரமம். பள்ளிக்கு வந்த பிறகு, இந்தப் பாடங்களை அவர்களுக்கு மீண்டும் சொல்லிக்கொடுப்பதும் கஷ்டம். மலைவாழ் மாணவர்களின் கற்கும் வேகம் குறைவானது. அவர்களின் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

அரசு நடத்தும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது முக்கியமான பிரச்சினை. காலிப் பணியிடங்களில் ஆசிரியர்கள் உடனுக்குடன் நியமிக்கப்படுவதில்லை. பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கிவரும் அந்தப் பள்ளிகளைக் கல்வித் துறையின் கீழ் இணைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. கடந்த ஆட்சிக் காலத்திலும் வலியுறுத்திப் பார்த்தோம். நடக்கவில்லை. இப்போதாவது நடக்கிறதா என்று எதிர்பார்த்திருக்கிறோம்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தங்களது கள அனுபவங்களின் அடிப்படையில் முன்வைக்கும் தீர்வுகள்?

குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும்போது அந்தக் குழந்தைகளின் குடும்பங்கள் ஏதாவது ஒரு வருவாய் ஈட்டிக்கொள்வதற்கு அரசு உதவ வேண்டும். கடந்த ஜூன் 12 அன்று குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது. நானும் ஒரு காலத்தில் அந்த நாளை முன்னிட்டுப் பேரணிகளையும் கருத்தரங்கங்களையும் நடத்தியவன்தான். ஆனால், அதனால் பெரிதும் எந்தப் பயனும் இல்லை. அதற்குப் பதிலாக, மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களையும் பெற்றோர்களையும் அந்த நாளில் அழைத்து, கல்வி ஊக்கத்தொகை கொடுக்க முயன்றுவருகிறேன். கொஞ்சமேனும் அதற்குப் பயன் இருக்கிறது. குடும்பங்களின் வருமானத்துக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு இருந்தால், பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள்.

பள்ளிக்கூடங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்பது அதைவிடவும் முக்கியம். மலைவாழ் குழந்தைகளைத் தொடர்ச்சியாகப் பள்ளிக்கூடங்களுக்கு வரவைப்பதற்கும் அவர்களைத் தக்கவைப்பதற்கும் சிறப்புக் கவனம் கொடுக்க வேண்டும். பொதுப் பள்ளிகளில் ஒரு பாடத்திட்டம் இருக்கிறது, மாணவர்கள் அதைப் படிக்கிறார்கள். ஆனால், குழந்தைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வகுப்பறை பிடிக்கவில்லை, புத்தகங்கள் பிடிக்கவில்லை, மொழி பிடிக்கவில்லை. இப்படிப் பல காரணங்களால் அவர்கள் பள்ளியை விட்டு வெளியே போய்விடுகிறார்கள்.

மலைவாழ் குழந்தைகளில் பலர் ரயிலைக்கூடப் பார்த்தது இல்லை. அவர்களை ரயில்களில் கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்வதைக்கூட நாங்கள் கல்விச் செயல்பாடாகத்தான் கருதுகிறோம். கற்றுக்கொடுக்கும் பாடங்களைக் காட்டிலும் கல்வி மீதான ஆர்வத்தை உருவாக்குவதே முக்கியமானது. அதற்கான திட்டங்களைச் சூழலுக்கேற்ப ஆசிரியர்களே வகுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தீப்பொறியைத் தூண்டிவிட்டால் போதும். சுடராக நின்று அவர்களின் வாழ்வில் வெளிச்சம் கொடுக்கும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x