அப்புறம் என்னாச்சுன்னா... - இப்போ இல்லாட்டி எப்போ?!

அப்புறம் என்னாச்சுன்னா... - இப்போ இல்லாட்டி எப்போ?!
Updated on
3 min read

“விவேகானந்தர் இளைஞர்களைப் பார்த்து என்ன சொன்னார்?” என்று எங்க காலேஜ் பிரின்ஸிபல் ஆரம்பிச்சதுமே பூராப்பேரும் சிதறிட்டாங்க. நான் மட்டும் புல்லரிச்சிப் போய்க் கைத்தட்ட, பின்னால் இருந்த சீனியர் என் தோள்ல கை வெச்சார். “தம்பி! நீ ஃபஸ்ட் இயரா? நம்ம காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எலெக்‌ஷனே நடத்தக் கூடாதுன்னு யுனிவர்சிட்டிக்கு ரெக்கமெண்ட் பண்ணுன ஆளு இவருதாம், தெரியுமில்ல?”ன்னார் ஒரு மாரி சிரிச்சுக்கிட்டு.

‘லத்தி’ சொல்லித்தந்த பாடம்!

நெல்லை அரசு மாணவர் விடுதியில, சோறு சரியில்லைன்னு சொன்ன பயல்கள சிம்புவின் ‘பீப் சாங்’ மாதிரி மோசமா திட்டிட்டாரு சமையல்காரர். கோபத்துல சோத்துத் தட்டோடு ரோட்டில் உட்கார்ந்துட்டாங்க பசங்க. பத்திரிகையாளர் நடராஜுக்குப் பதில் ஐபிஎஸ் நட்ராஜ் மேல நடவடிக்கை எடுத்த அதிமுக மாதிரி, மறியல் செஞ்சவங்கள விட்டுட்டு ஓரமா நின்ன என்னைய விளாசிட்டாரு ஒரு எஸ்ஐ. நொண்டிக்கிட்டே ஓடுற வழியில ஒரு பஸ்ஸை மறிச்சி, ‘என்னைய போலீஸ் அடிச்சிருச்சி, மறியலுக்கு வாங்க’ன்னு கதறுனேன். ஒரு பயலும் எந்திரிக்கல. ‘நம்ம காலேஜ் பையனை போலீஸ்காரங்க அடிச்சிட்டாங்களாம். பூராப்பேரும் இறங்குங்க’ன்னு கத்தினேன். மளமளன்னு இறங்கிட்டாங்க.

அந்த ஒரு பஸ்ஸை நிப்பாட்டுனது மட்டும்தான் நான். மிச்ச பஸ்கள எல்லாம் யார் நிறுத்துனா? எப்பிடி முன்னூறு நானூறு பேரு குவிஞ்சாங்கன்னு ஏதும் தெரியாது. பெரிய போராட்டமாகி, அரைப் பக்க செய்தியாகி எங்க ஆஸ்டலே மாறிப்போச்சு.

“கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வாத்தியார்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சங்கம் இருக்கு. தனியார் கல்லூரி முதலாளிகளுக்குக்கூட சங்கம் இருக்கு. ஆனா, யாருக்காகக் கல்லூரி நடத்துறாங்களோ அந்த மாணவர்களுக்காகச் சங்கம் இல்ல. இருந்திருந்தா நீயெல்லாம் அடிவாங்குற நிலைமை வந்திருக்குமா?”ன்னு அதே அண்ணன் கேட்டாரு.

லிங்டோ கமிட்டி தெரியுமா?

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கல்லூரியில தேர்தல் ஆணையம் நடத்துன விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நிருபராகப் போயிருந்தேன். கூட்டத்தில் பேசுன கலெக்டர், “இளைஞர்கள் அரசியலை விட்டுத் தள்ளி நிற்கக் கூடாது. மாற்றம் வேண்டும் என்றால் வாக்களிக்க வர வேண்டும்” என்று பேச, என்னைய மாதிரியே சில அப்பாவிப் பயல்க கைதட்டுனாங்க. எனக்குச் சிரிப்பு வந்திருச்சி.

இன்றைய மாணவர்களுக்கு சீனியரா ஒண்ணு சொல்லட்டுமா? மாணவர் பேரவைத் தேர்தல்ங்கிறது காலேஜுக்கான பொதுத் தேர்தல் மாதிரி. படிப்புல மக்கா இருந்தாலும், ஆளுமைத் திறமையில பட்டையக் கிளப்புற பசங்கள அது தலைவர்களா மாத்தும்.

தமிழ்நாட்டை மாதிரியே கேரளாவிலும் மாணவர் தேர்தலுக்கு இடைஞ்சல் வந்தபோது, பிரச்சினைய சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டுபோனாங்க. மாணவர் தேர்தலை ஒழுங்கு படுத்துறதுக்காக ஓய்வுபெற்ற இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஜெ.எம்.லிங்டோ தலைமையில் ஒரு கமிட்டி போட்டுது கோர்ட்டு.

2006-ல அறிக்கைய தாக்கல் பண்ணுனாரு லிங்டோ. சும்மா சொல்லக் கூடாது, ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனத்தையும் வருங்கால தேசமாகவே நினைச்சி எழுதுன அரசியல் சாசனம்போல இருந்துச்சி அந்தப் பரிந்துரை. எல்லா கல்லூரி, பல்கலைகளிலும் மாணவர்கள் பூராப்பேரும் பங்கேற்கிற தேர்தலைக் கட்டாயம் நடத்தணும்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லியிருந்தார் லிங்டோ.

இந்தப் பரிந்துரைகளை நிறைவேத்தும்படி யுஜிசிக்கும், மனித வள மேம்பாட்டுத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு 9 வருஷம் ஓடிப்போச்சு. முக்காவாசிப் பேரு அத நிறைவேத்தல. யுஜிசி குடுக்கிற மானியத்த பல்ல இளிச்சுக்கிட்டு வாங்குற பல்கலைக்கழகங்கள், யுஜிசி உத்தரவை மட்டும் குப்பையில் போட்டுட்டாங்க. சில தன்னாட்சிக் கல்லூரிகள் மட்டும் யுஜிசியை ஏமாத்துறதுக்காக நியமன முறை தேர்தலை(?) நடத்துறாங்க. நல்லாப் படிக்கிற, சொன்னதைச் செய்ற பசங்கதாம் நிர்வாகிங்களாம். புரியும்படி சொல்றதுன்னா, அந்தப் பசங்க அமைச்சர்கள், கல்லூரி நிர்வாகிகள்தாம் மக்களின் முதல்வர்!

பக்கத்து மாநிலத்தைப் பாருங்க...

பஸ் டிக்கெட், பால் விலைன்னு எதுக்கெடுத்தாலும் பக்கத்து மாநிலங்களோட தமிழ்நாட்டை ஒப்பிடுற அரசாங்கம், இந்த விஷயத்துல மட்டும் கண்ணை இறுக்க மூடிக்குது.

வெள்ளக்காரன விரட்டுன அதே மாணவர் சக்திதாம், பின்னால காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பிட்டு திமுகவுக்கு மகுடம் சூட்டுச்சி. அப்புறம் கருணாநிதிக்கு டாட்டா காட்டிட்டு எம்ஜிஆரை முதல்வராக்குனதுலயும் இந்தப் பொடியன்களுக்குப் பங்குண்டு. இனிமேலும் இந்தத் ‘துயர வரலாறு’ தொடரக் கூடாதுன்னுதான் மாணவர் தேர்தலை முடக்குறாங்களோன்னு சந்தேகம் வருது. இவங்க கட்சியிலயும் மாணவரணி இருக்கேன்னு கேட்கலாம். இளைஞரணிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தமோ, அதே சம்பந்தம்தான் மாணவரணிக்கும் மாணவர்களுக்கும் இருக்குது.

கேள்வி கேட்பார்களே?

தேர்தலை நடத்தாததுக்கு அரசாங்கம் மட்டும் இல்ல; கல்வியாளர்களையும் சேர்த்துத்தான் குத்தம் சொல்லணும். கல்லூரிகளும் அதை விரும்புறதில்ல. மாணவர்களுக்கு அதிகாரம் குடுத்தா, ‘பாத்ரூம்ல தண்ணி வரலை’ங்கிறதுல ஆரம்பிச்சி, ‘ஏன்யா காசு வாங்கிட்டு பேராசிரியர்களை வேலைக்கு எடுக்கீங்க. அவங்களுக்குப் பாடமே நடத்தத் தெரியல’ங்கிறது வரைக்கும் கேள்வி கேட்பாங்களேங்கிற பயம் அவங்களுக்கு.

அடிமைகளுக்கு இருக்கிற ஒரே சந்தோஷம், தங்களுக்கும் அடிமை இருப்பதுதான? மாநில அரசு, பல்கலைக்கழகம், கல்லூரிகள் என்ற அடிமை வரிசையில கடைசியா இருக்கிற பேராசிரியர்கள், ‘நமக்கும் ஒரு அடிமை சிக்கிருச்சி’ என்ற மனோபாவத்தோட மாணவர்களை நடத்துறாங்க. ‘சொல்றத மட்டும் கேளு, அமைதியா இரு, காலேஜ் முடிஞ்சதும் ஸ்கூல் பசங்க மாதிரி ஒழுங்கா ஓடிப்போயிரு’ இதுதான் அவங்களோட போதனை. லீடர்ஷிப் டிரெய்னிங் என்று இவங்க நடத்துற பாடமும் அப்படித்தான் இருக்கு.

மாணவர்களுக்கு ஒரு அறிவுரை

ஆளுமைத் திறமையுள்ள பிள்ளைகளைப் பூராம் ‘நல்ல’ காலேஜ்களுக்கு அனுப்பிட்டு நம்ம வீட்டுப் பெரிசுங்க என்ன பேசுறாங்க தெரியுமா? “ச்சே, தமிழ்நாட்டு அரசியல்ல பெரிய வெற்றிடம் இருக்குய்யா. இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வே இல்லை. பூராப்பேரும் சினிமாக்காரங்களுக்குக் காவடி தூக்குறாங்க. போற போக்கப்பாத்தா, சிம்புவையும் சிஎம் ஆக்கிருவாங்க போல”ங்கிறாங்க. விதை நெல்லை அவிச்சித் தின்னுட்டு, அறுவடைக்கு கறுக்கருவாளோட போறோமே என்ற குற்ற உணர்ச்சியே அவங்களுக்கு இல்ல.

சாதிச் சண்டை முத்திரை குத்தி மாணவர் தேர்தலை ரத்து பண்ணி 17 வருஷம் ஓடிருச்சி. “எங்கேயோ நாலஞ்சி இடத்துல பசங்க சண்டை போட்டாங்கன்னு மாணவர் தேர்லையே ரத்து பண்ணுனீங்களே, எம்பி, எல்எல்ஏ தேர்தல்ல எத்தனை கொலை விழுந்திருக்கு? அதை மட்டும் ஏன்யா ஒட்டுமொத்தமா தடை பண்ணல?”ன்னு கேட்க வேண்டிய தருணம் இது. வெள்ள நிவாரணப் பணிகள்ல உங்க சேவையைப் பாத்து உலகமே வியந்துபோயிருக்கு. இதுதான் தருணம். மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வையுங்க.

தேர்தலை நடத்தவெச்சா மட்டும் போதாது, அது பாதி வெற்றிதான். தேர்தலை அமைதியா நடத்த ஒத்துழைக்கிறதுதாம் முழு வெற்றி. மறுபடியும் ஒரே பஸ் ரூட், ஒரே டிபார்ட்மெண்ட்னு கோஷ்டிச் சண்டை போட்டீங்கன்னா, அதையும் சாதிச் சண்டைன்னு சொல்லி, உங்க உரிமைகளை மறுபடியும் பரணுக்கு அனுப்பிருவாங்க. ஜாக்கிரதை!

- கே.கே. மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in