Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

சமூகத் தடுப்பாற்றல்தான் ஒரே வழியா?

ஸ்பென்சர் பொக்கெட்- லிண்டல்

கரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு ‘சமூகத் தடுப்பாற்றல்’தான் (herd immunity) முக்கியமான வழி என்றே சொல்லப்பட்டுவருகிறது. போதுமான அளவு மக்களுக்குத் தடுப்பூசி போட்டால் – அதாவது 60%-லிருந்து 70% வரையிலான மக்களுக்கு – வைரஸால் அதற்கு மேல் பரவ முடியாமல் போகலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், பெருந்தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்ற நம்பிக்கை சமீபத்தில் குறைந்துள்ளது. “சமூகத் தடுப்பாற்றலுக்கான எல்லையை எட்ட முடியாது என்ற கருத்தொற்றுமை அறிவியலர்களிடமும் பொதுச் சுகாதார வல்லுநர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது” என்று ‘தி டைம்ஸ்’ இதழில் அபூர்வா மந்தவில்லி எழுதியுள்ளார்.

மிகவும் கடுமையாகப் பரவும் கரோனா வைரஸின் பி.1.1.7. வேற்றுருவத்தின் வருகைக்கு முன்புதான் சமூகத் தடுப்பாற்றலுக்கான எல்லை வரையறுக்கப்பட்டது. தற்போது அந்தக் கணிப்பு 80%-ஐ நோக்கித் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வேகமாகப் பரவும் வேற்றுருவங்கள் உருவானால், இந்தக் கணிப்பு இன்னும் அதிகரிக்கும்.

தடுப்பூசித் தயக்கம்

தடுப்பூசி செலுத்தப்படாத பகுதிகளில் கட்டுப்படுத்தப்படாமல் இந்த வைரஸ் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு அது புதுப்புது அவதாரங்கள் எடுக்க வழி ஏற்படும். தற்போது, உலகளாவிய தடுப்பூசி விநியோகம் மிகவும் ஏற்றத்தாழ்வான நிலையிலேயே உள்ளது. உலக அளவில் போடப்படும் டோஸ்களில் 0.3%-தான் குறைந்த அளவு வருமானம் கொண்ட நாடுகளில் போடப்படுகின்றன.

இந்த எல்லாக் காரணிகளும் சேர்ந்து கரோனா வைரஸை உலக அளவில் ஒழிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக ஆக்குகின்றன: நோய்த் தடுப்பாற்றல் வல்லுநர்கள், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் வல்லுநர்கள் போன்ற 100 பேரிடம் ‘நேச்சர்’ இதழ் ஜனவரியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது; இனிவரும் காலங்களில் கரோனா தொற்று சீரான அளவில் உலகெங்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும் என்று 90% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் இயல்பு வாழ்க்கை என்பது திரும்பவே திரும்பாதா? அப்படி இல்லை. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு சமூகத் தடுப்பாற்றலை மட்டுமே நம்பி இருப்பது தவறு என்று ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அப்ரார் கரண் உள்ளிட்ட வல்லுநர்கள் பலரும் தற்போது கூறுகிறார்கள்.

சமூகத் தடுப்பாற்றல் வரலாறு

முந்தைய பெருந்தொற்றுகளின் வரலாறு நமக்கு இங்கே உபயோகமாக இருக்கலாம்: 1918-ம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூவின்போது தடுப்பூசி ஏதும் இல்லை. அந்தப் பெருந்தொற்றின்போது மனிதர்களுக்கு சமூகத் தடுப்பாற்றலும் ஏற்படவில்லை. எந்த நோய்க்குமே சமூகத் தடுப்பாற்றல் எட்டப்பட்டதில்லை என்று யேல் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பேராசிரியர் ஹோவர்டு ஃபோர்மன் என்று கூறுகிறார். 1918 வைரஸுக்கு அதிக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி தோன்றவே, அந்த வைரஸ் பரிணாமமடைந்தது, இன்றும் காணப்படும் வைரஸ்களிடம் தனது வலுவற்ற வடிவங்களை அது கடத்தியது என்றும் இதழாளர் ஹெலன் பிரான்ஸ்வெல் கூறுகிறார். “உண்மை என்னவென்றால் பெருந்தொற்றுகள் எப்போதுமே ஒரு முடிவை அடைந்துவிடுகின்றன” என்கிறார் பிரான்ஸ்வெல்.

சமூகத் தடுப்பாற்றல் என்பது எட்ட முடியாத ஒன்று என்றால் வேறு எதுதான் இலக்கு? “இன்னும் கொஞ்ச காலத்துக்கு, நன்றாகத் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் வைரஸை ஒழிக்க முடியலாம் அல்லது அம்மைபோல கட்டுப்படுத்தப்பட்ட அச்சுறுத்தலாக ஆக்கலாம்” என்று ‘தி வாஷிங்டன் போஸ்ட்’டில் ஆஷிஷ் கே.ஜா எழுதுகிறார். மக்கள்தொகை அடர்த்தி, காற்றோட்டம், முகக்கவசம் அணிதல் போன்றவையும் பெருந்தொற்று வெடிப்புகளுக்கு எதிராக ஒரு சமூகம் தடுப்புக் கவசம் கொண்டிருப்பதைத் தீர்மானிக்கும்.

தடுப்பூசி கிடைப்பதில் ஏழை நாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளியைக் குறைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தடுப்பூசிக் காப்புரிமைகளுக்குத் தடைவிதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது ஆதரவு தெரிவித்துவருவது அந்தத் திசையில் முக்கியமான நகர்வாகும். அதற்கு உலக வர்த்தக நிறுவனம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள் கரணும் பார்சானெட்டும்.

ஏற்கெனவே சாதாரண ஜலதோஷம் போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கும் நான்கு கரோனா வைரஸ்களைப் போல, வரும் ஆண்டுகளில் தற்போதைய கரோனா வைரஸானது பரிணாமம் அடையும். இந்த வைரஸ்கள் மக்களுக்கு அடிக்கடியும் திரும்பத் திரும்பவும் தொற்றினாலும் மிக அரிதாகவே தீவிர உடல்நலக் குறைபாட்டுக்குக் காரணமாகின்றன. குழந்தைகளுக்கு இந்த வைரஸ்கள் தொற்றும்போது அவர்களுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு அவர்கள் பெரியவர்களாகும்போது தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்கிறது.

உசிதமான எதிர்பார்ப்பு

“நமக்கு சமூகத் தடுப்பாற்றல் கிடைக்காது என்று சொல்வது எந்த வகையிலும் மரண தண்டனைத் தீர்ப்பு போலாகாது” என்கிறார் உயிரியல் ஆய்வாளர் ஜென்னி லேவைன். “அப்படி என்றால் அது எப்போதும் இருக்கப் போகிறது என்று அர்த்தம். அப்போது அது தீவிரம் குறைந்த அளவில் எப்போதும் இருக்குமா அல்லது தீவிரமாக எப்போதும் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது? தீவிரம் குறைந்த அளவில் எப்போதும் இருக்கும் என்பதுதான் என் கணிப்பு. அதுதான் நடக்கும் என்று உண்மையில் தோன்றுகிறது” என்கிறார் லேவைன்.

அது ஒரு உசிதமான எதிர்பார்ப்பு. அதுவே மோசமான சூழல் என்றால் எப்படி இருக்கும்? பெரும்பாலான வைரஸ்கள் மாற்றுவடிவம் அடைய அடைய அவற்றின் தீவிரம் குறையும்; ஆனால், கரோனா வைரஸ் விஷயத்தில் அந்த உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது. பி.1.1.7 வேற்றுருவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதன் தொற்றுத்திறன் மட்டும் அல்ல இறப்பு ஏற்படுத்தக்கக்கூடிய திறனும் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. தற்போது உள்ள தடுப்பூசிகள் பலவும் அந்த வேற்றுருவத்தை எதிர்த்து நன்கு போராடக்கூடியவை என்றாலும் தடுப்பூசி அளிக்கும் கேடயத்தைத் தகர்க்கக்கூடிய வேற்றுருவங்கள் உருவாகலாம்.

இன்னும் உருவாகாத வேற்றுருவங்களுக்கும் எதிராக மக்களுக்குத் தடுப்பு சக்தி அளித்து அவர்களைக் காக்கக்கூடிய தடுப்பூசி ஒன்றை ஒருவாக்குவதற்குப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பந்தயமானது பெருந்தொற்று முடிவதற்குள் ஒரு வெற்றிகரமான தடுப்பூசியை நமக்குத் தரும் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபாஸி கூறுகிறார்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x