Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

இனி தீவிரமாகுமா பருவமழைப் பொழிவுகள்?

புவிவெப்பமாதல் இந்தியாவின் பருவமழைக் காலத்தை மேலும் அதிக மழைப்பொழிவு மிக்கதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் மாற்றும் என்று தெரிகிறது.

பருவமழைக் காலத்தைப் புவிவெப்பமாதல் ஒழுங்கற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவியலர்கள் வெகு காலமாக அறிந்திருக்கிறார்கள். கார்பன் டையாக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்களின் காரணமாகப் புவிவெப்பமும், வெப்பமான வளிமண்டலத்தில் ஈரப்பதமும் அதிகரித்திருக்கின்றன; இதனால் கோடைக் காலத்திலும் மழைப் பொழிவு அதிகரிப்பதுடன் பருவமழைக் காலங்களில் கணிக்க முடியாத விதத்திலும் மிக அதிகமாகவும் மழைப் பொழிவு ஏற்படும் என்று கணினி மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட கடந்த கால ஆய்வுகள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.

இது தொடர்பாக ‘சயன்ஸ் அட்வான்ஸஸ்’ என்ற இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் வெளியானது. 10 லட்சம் ஆண்டு காலத் தரவுகளில் ஆய்வுசெய்து மேற்கண்ட கருத்துகளை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தியிருக்கிறது.

தெற்காசியாவில் பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அது இந்தப் பகுதியின் வேளாண் பொருளாதாரத்துக்கு உயிர்நாடியான அதிக அளவிலான மழைப் பொழிவைக் கொண்டுவரும். பயிர்களுக்குச் செழிப்பூட்டுவது அல்லது அவற்றை நாசப்படுத்துவது, பேரழிவான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவது, உயிரிழப்பு ஏற்படுத்துதல், மாசுபாட்டைப் பரப்புதல் என்று உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகையின் வாழ்வில் இந்த மழைப் பொழிவுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருவநிலை மாற்றத்தால் உருவான மாற்றங்கள் இந்தப் பிரதேசத்தை மாற்றியமைக்கும்; வரலாறானது அந்த மாற்றங்களுக்கு ஒரு வழிகாட்டி என்று புதிய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வாளர்களிடம் கால இயந்திரம் ஏதும் கிடையாது. ஆகவே, அவர்கள் அதற்கு அடுத்ததாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பான விஷயத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள், அதாவது சேற்றை. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியான வங்காள விரிகுடாவில் மாதிரிச் சேற்றைத் துளையிட்டு எடுத்தார்கள். இந்தக் கடல் பகுதியில்தான் துணைக் கண்டத்தின் பருவமழை ஓடிவந்து கலக்கிறது.

இந்த உருளை வடிவ மாதிரிகள் 200 மீட்டர்கள் நீளமுடையவை, பருவமழைப் பொழிவைப் பற்றிய நல்ல தரவுகளை அவை தந்தன. ஈரப்பதம் மிகுந்த பருவகாலங்கள் நிறைய நன்னீரை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பின, இதனால் மேற்பரப்பில் உப்புத் தன்மை குறைந்தது. மேற்பரப்பில் வாழும் பிளாங்க்டன்கள் உயிரிழந்து கீழே உள்ள படிவில் மூழ்கிவிடும், ஒவ்வொரு அடுக்காக இது நிகழ்கிறது. உருளை வடிவ மாதிரிகளைக் கொண்டு அறிவியலர்கள் பிளாங்க்டன்களின் படிமக் கூடுகளை ஆராய்ந்து பார்த்தனர். அவை வாழ்ந்தபோது காணப்பட்ட நீரின் உப்புத் தன்மையைக் கண்டறிவதற்காக ஆக்ஸிஜன் ஐஸோடோப்புகளை அளவிட்டனர். வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன் டையாக்ஸைடு காணப்பட்டபோதும், உலக அளவில் உறைபனி குறைவாகக் காணப்பட்டபோதும், இந்தப் பிராந்தியத்தில் ஈரப்பதம் கொண்ட காற்று அதிகரித்தபோதும் அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டு, வங்காள விரிகுடாவில் உப்புத் தன்மை குறைந்ததை அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது மனிதச் செயல்பாடுகள் வளிமண்டலப் பசுங்குடில் வாயுக்களை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதால், அதே மாதிரியான பருவமழைப் போக்குகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் புவி, சுற்றுச்சூழல், கோள் அறிவியல் பேராசிரியர் ஸ்டீவன் கிளெமண்ஸ்தான் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர். “கடந்த 10 லட்சம் ஆண்டுகளின் தரவுகளைச் சரிபார்த்து, எப்போதெல்லாம் வளிமண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு அதிகரித்ததோ அப்போதெல்லாம் தெற்காசியப் பருவமழையின்போது மழைப் பொழிவு குறிப்பிட்ட அளவு அதிகரித்திருக்கிறது என்பதைக் கூற முடியும்” என்கிறார் கிளெமண்ஸ். பருவநிலை தொடர்பான மாதிரிகளெல்லாம் “கடந்த10 லட்சம் ஆண்டுகளின் தரவுகளுடன் அற்புதமாகப் பொருந்திப்போகின்றன” என்கிறார் அவர்.

ஜெர்மனியின் போட்ஸ்டாம் மையத்தின் பருவநிலை அமைப்பின் இயங்கியல் துறைப் பேராசிரியர் ஆண்டர்ஸ் லெவெர்மன் இந்த ஆய்வுக் கட்டுரையுடன் தொடர்பில்லாதவர் என்றாலும்பருவமழை தொடர்பான மாதிரிகளை உருவாக்கியவர். தற்போதைய கண்டுபிடிப்புகளைப் பற்றி அவர் கூறும்போது “இந்த ஆய்வு உண்மையிலேயே தகவல் சுரங்கம்தான். நம் புவிக் கோளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளைப் பிரதிபலிக்கும் உண்மையான தரவுகளைப் பார்ப்பதற்கும், நாம் தினமும் உணரும் இயற்பியல் விதிகள் தங்கள் கால்தடங்களைத் தரவு வளம் மிக்க இந்தத் தொல்பதிவுகளில் விட்டுச்செல்வதைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் அவர்.

இதன் விளைவுகள் இந்தியத் துணைக் கண்டத்துக்கு மிகக் கடுமையாக இருக்கும் என்று லெவெர்மன் கூறியுள்ளார்; பருவமழையானது ஏற்கெனவே பெரும் பொழிவுகளைக் கொண்டதாக இருப்பதால் “அது எப்போதும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்கிறார் அவர். பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் பருவகாலங்கள் கடுமையாக மாறிக்கொண்டிருக்கின்றன; பருவகாலங்கள் காலம் தவறிவருவதும் பேராபத்தாகமாறிக்கொண்டிருக்கிறது. “உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டை, பல வகைகளிலும் மிகவும் சவாலைச் சந்திக்கும் ஜனநாயக நாடான இந்தியாவை இது மிகவும் பாதித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் அவர்.

டாக்டர் கிளெமண்ஸும் பிற ஆராய்ச்சியாளர்களும் தங்கள் ஆய்வுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட, ஜோய்டஸ் ரெஸலூஷன் என்ற எண்ணெய்த் துரப்பணக் கப்பலில் இரண்டு மாதம் ஆய்வுகளை மேற்கொண்டனர். 2014 நவம்பரில் அறிவியலர்கள் 30 பேர் உட்பட 130 பேர் பயணம் மேற்கொண்டனர். “கிறிஸ்துமஸ் சமயத்தில் நாங்கள் வீட்டில் இல்லை. குடும்பத்தை விட்டு அவ்வளவு காலம் விலகி இருப்பது கடினமாக இருந்தது” என்று நினைவுகூர்கிறார் கிளெமண்ஸ். “நாங்கள் இந்த விஷயத்தைப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து பார்த்து, இறுதியில் இந்தத் தரவுத் தொகுப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஒருவழியாக வெளியானது திருப்தியாக இருக்கிறது” என்கிறார் கிளெமண்ஸ்.

© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x