

டிசம்பர் ஒன்றாம் தேதி அலுவலகம் செல்லாமல் கனமழை பெய்வதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
தெருவில் நீர்மட்டம் உயரும் வேகம் பிரம்மிப்பாக இருந்தது. ஏன் நகருக்குள் இவ்வளவு நீர் வருகிறது என்று குழப்பமாக இருந்தது. நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் அலைபேசியில் பேசினேன். ‘‘செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றித் திறந்துவிட்டார்கள். உடனே காலிசெய்துவிட்டு ஏதாவது பாதுகாப்பான இடங்களுக்குக் கிளம்பும்படி சொல்கிறார்கள்’’ என்றார். மேலும், ‘‘உடனே போங்க போங்கன்னு சொல்றாங்க. ஆனா, எங்கே போறதுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க’’ என்றார். எங்கே போவது என்று எனக்கும் தெரியவில்லை. மனதுக்குள் பயமாக இருந்தாலும் தெருவில் இரவுக்குள் இடுப்பளவு நீர் வருமென்று எதிர்பார்த்தேன்.
நள்ளிரவு சரியாக இரண்டு மணிக்கு வீட்டுக்குள் வெள்ளம் வந்தது. சில நிமிடங்களில் இரண்டடி உயரம் ஏறிவிட்டது. நீருடன் கரப்பான், பூரான் இன்னும் என்னென்னவோ தெருவில் மிதந்துவந்தன. உடனே, நான், எனது மனைவி, அம்மா மூவரும் வீட்டைப் பூட்டிவிட்டு, முதல் தளத்தில் குடியிருப்பவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். மறுநாள் விடிந்ததும் எல்லாரும் மொட்டை மாடி சென்று பார்த்தோம். எங்களைப் போல எல்லாரும் அவரவர் வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். கீழே தெரிந்த தெருக்களைப் பார்த்து மிரண்டு நின்றோம்.
காலை 10 மணிக்கு மேல் நானும் முதல் தளத்தில் வசிப்பவரும் ஆற்காடு சாலையைச் சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து கீழே இறங்கினோம். எங்கள் தெருவில் கழுத்தளவு நீர் இருந்தது. சில வீடுகள் முதல் தளம் வரைக்கும் பல வீடுகள் தரைத்தளம் வரைக்கும் மூழ்கின.
என்ன நடக்கிறது இங்கே என்று குழப்பமாக இருந்தது. ரஷ்ய நாவல்களில் போர்க்கால நகரங்கள் பற்றிய வர்ணனைகள் வரும். ஆற்காடு சாலை அப்படி இருந்தது. ஆறுபோல நீர் ஓடியது. கையில் இருந்த செல்போன் கேமராவில் எதிர்ப்படும் இடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்தேன். சில நிமிடங்களில் புகைப்படம் எடுக்கக்கூடத் தோன்றவில்லை. மக்கள் கும்பல் கும்பலாக எங்கோ நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மனிதர்கள் வெளிறிப்போன முகங்களுடன் சாலையில் நடந்துகொண்டிருந்தார்கள்.
கடைகளில் கிடைத்த பொருட்களை வாங்கினார்கள். ஒரு மெழுகுவத்தி 50 ரூபாய். ஒரு தண்ணீர்கேன் 120 ரூபாய். டார்ச்லைட் எந்தக் கடையிலும் இல்லை. பால் இல்லை. மறுநாள் வெள்ளம் வடியவில்லை. மூன்றாவது நாளும் வடியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள் ஆங்காங்கு சிறுசிறு குழுக்களாகத் திரண்டு மாநகராட்சி அலுவலகம் வந்தார்கள். அவர்களின் கோபம் கண்ட அதிகாரிகள் மிரண்டுபோனார்கள். ஒரு அதிகாரி மறியல் செய்தவர்களிடம் எங்களை என்ன செய்யச் சொல்றீங்க? நாங்க என்ன ஸ்ட்ரா வெச்சா உறிஞ்ச முடியும் என்று கோபமாகக் கேட்டார். வளசரவாக்கத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மிகமிக மந்தமாகவே இருந்தன.
சென்னையின் முக்கியமான சாலைகளில் ஒன்று வளசரவாக்கத்தில் இருக்கும் ஆற்காடு சாலை. தெற்கே போரூர் சந்திப்பையும், விருகம்பாக்கம் சந்திப்பையும், வடபழனி சந்திப்பையும் தொட்டு வடக்கிலுள்ள கோடம்பாக்கம் வரை செல்லும் முக்கிய சாலை. போரூரிலிருந்து வடபழனி செல்ல வேறெந்தச் சாலையும் இல்லை. ஆனால், இந்தச் சாலையும், பகுதியுமே அதிகம் புறக்கணிப்புக்கு உள்ளாகுபவை.
இந்தப் பகுதியில் 18 வருடங்களாக வசிக்கிறேன். எத்தனையோ மழைகளைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இடுப்பளவு நீரில்தான் நடக்க வேண்டியிருக்கிறது. காரணம் மர்மம் அல்ல. நீர் செல்லும் வடிகால்கள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாகவும், மேடுகளாகவும் மாறிவிட்டன. தீபாவளிக்கு அடுத்துப் பெய்த மழையில் சாதாரணமாகவே எங்கள் தெருவில் இரண்டு அடி நீர் தேங்க ஆரம்பித்தது. பிறகு, அது கழிவுநீராக மாறியது. மோட்டாரை வைத்தும் கழிவு நீர் லாரியை வைத்தும் போராடிக்கொண்டிருந்தோம். இந்நிலையில்தான் மீண்டும் ஒரு சோதனையாக எங்கள் பகுதிக்குச் செம்பரம்பாக்க நீர் வந்தது.
ஆற்காடு சாலையை அகலப்படுத்த வேண்டுமென்பது இந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. சாலைக்கு இரண்டு புறங்களிலும் முறையான மழைநீர் வடிகால் வசதிகள் வைத்து, அதை ராமாபுரம் வழியாக அடையாற்றுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பது இந்தப் பகுதி மக்களின் யோசனை. வெள்ள நீரை வடிக்கும்போது முதலில் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் நபர்களுடன் பேச வேண்டும். ஏனெனில், அவர்களுக்குத்தான் முன்பு எங்கெல்லாம் வடிகால்கள் இருந்தன. எங்கெல்லாம் குட்டைகள் இருந்தன. எங்கெல்லாம் புதிதாகக் கட்டிடங்களைக் கட்டினார்கள் என்று தெரியும்.
அதிகாரிகளோ அவர்கள் நினைத்ததையே செய்கிறார்கள். இப்போது ஜேசிபி வைத்து ஆற்காடு சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் மழை நீர் வடியும் கால்வாய்களை வெட்டியுள்ளர்கள். இது எதிர்காலத்தில் நிலைமையை மேலும் மோசமாக்கும். இப்போது வரைக்கும் எங்கள் தெருவில் மூன்றடி நீர் தேங்கி நின்றுகொண்டிருக்கிறது. 13 நாட்களாகக் கழிவு நீரில் நடந்து சென்றுதான் நாங்கள் தினமும் எங்கள் வாழ்க்கையை நடத்திவருகிறோம்.
வெள்ளத்தால் ஆற்காடு சாலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாருங்கள், இது தலைநகரம். அரசாங்கம் எங்களுக்குக் கூப்பிடு தொலைவில் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். இயல்பு வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்வியைத்தான் சில நாட்களாக நான் எனக்குள் தீவிரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
தொடர்புக்கு: navina14@hotmail.com