Published : 12 Dec 2015 11:09 AM
Last Updated : 12 Dec 2015 11:09 AM

பால் மடியை அறுத்து ரத்தம் குடித்தல் தகுமோ?

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு



*

தமிழகத்தின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி. கொதிக்கும் கோடையிலும் அதில் கால் நனைக்கும் அளவுக்காவது தண்ணீர் சலசலக்கும். காலம் காலமாக இப்படி ஓடிய நதியை முற்றாக வற்றச் செய்து பாவத்தைத் தேடிக் கொண்ட தலைமுறை நம்முடையது. தினமும் ஆற்றில் குளித்துப் பழகிய நெல்லைவாசிகள் அன்றைக்கு நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்கள். வறண்ட ஆற்றின் மண்ணை வாரித் தூற்றினார்கள். என்ன நடந்தது?

1970-ம் ஆண்டில் இருந்தே தூத்துக்குடி தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை தாமிரபரணிதான் பூர்த்தி செய்துக்கொண்டிருக்கிறது. வைகுண்டம் அணையின் வடகால் வழியாக ஏரல், ஆறுமுகமங்கலம் குளத்துக்குத் தண்ணீர் சென்றது. அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தினசரி 30 லட்சம் கனஅடி தண்ணீர் தூத்துக்குடி தொழிற்சாலைகளுக்குச் சென்றது. இதற்கே விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இதனால் பெரிதாக பாதிப்பு இல்லை என்பதால் விவசாயிகள் அமைதி காத்தார்கள். தவிர, கால்வாய் வழியாக தண்ணீர் சென்றதால் வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. விவசாயமும் செழித்தது. ஏரல் வெற்றிலையும் ஆறுமுகமங்கலத்தில் வாழையும் பிரசித்தி பெற்றன.

ஆனால், இரு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக நிறுவப்பட்ட அந்நிய குளிர்பான நிறுவனங்களுக்கும் ஆற்றில் இருந்து தண்ணீர் அளிக்க முடிவு செய்தார்கள். இதற்குக் கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டது. வணிக வெறியில் தாயை மறந்தார்கள். அதுவரை தாயிடம் பால் குடித்தவர்கள், பால்மடியை அறுத்து ரத்தம் குடிக்க வெறிகொண்டார்கள். அணையில் நதியின் மடியிலேயே ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. மோட்டார்கள் வைத்து மொத்தமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டது. அதிர்ந்துப்போனது ஆறு. ஒரே மாதம்தான்... யுகம் யுகமாக வற்றாமல் சுரந்த தாய்மடி 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்முறையாக வற்றிப்போனது. ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் கொதித் துப்போனார்கள். ஏராளமான போராட் டங்கள் நடந்தன. ஆனால், தொழிற் சாலை இயந்திரங்களின் இரைச்சலில் அமுங்கிப்போனது விவ சாயிகளின் கதறல்.

இது இப்படி என்றால் இன்னொருப் பக்கம் அணையை தூர் வாரும் சாக்கில் மணலை கொள்ளையடித்தார்கள். ஸ்ரீவைகுண்டம் அணை தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு. தற்போது அணையின் மொத்தக் கொள்ளளவான 8 அடியில் சுமார் 6 அடி ஆழத்துக்கு சேறும் மணலும் குவிந்துக்கிடக்கிறது. இதனால் தோழர் நல்லகண்ணு, நயினார் குலசேகரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்திமதிநாதன் மற்றும் மதிமுக-வினர் அணையைத் தூர் வார தொடர் போராட்டங்களை நடத்தினர். மதிமுக-வின் சார்பாக ஜோயல் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அணையை தூர் வார தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தூர் வாருவதைக் கண்காணிக்க தோழர் நல்லகண்ணு, நயினார் குலசேகரன், காந்திமதிநாதன், வழக்கறிஞர் தவசிராஜன் ஆகியோர் கொண்ட குழுவையும் தீர்ப்பாயம் நியமித்தது. பொதுப்பணித் துறையினர் அணையைத் தூர் வார தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்கள். ஒப்பந்ததாரரிடம் இருந்து சுமார் ரூ.9 கோடி முன் வைப்புத் தொகை பெறப்பட்டது. அரசு சார்பில் தூர் வாருவதற்கு ரூ.5 கோடியே 93 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கு பின்பு நடந்ததுதான் அக்கிரமம்.

இதுபற்றி காந்திமதிநாதன் சொல்வதைக் கேட்போம். “தூர் வாரும் பணியை சாதகமாக்கிக்கொண்ட சில மணல் மாஃபியாக்கள் மணலை அள்ளத் திட்டமிட்டன. இதனால், முன்கூட்டியே ‘கண்காணிப்புக் குழுவினரின் தலையீட்டால் அணையில் தூர் வாரும் பணிக்கு இடையூறு ஏற்படும்’ என்று தீர்ப்பாயத்தில் சொல்லி குழுவை இடைநீக்கம் செய்துவிட்டார்கள்.

அணையைத் தூர் வார அரசு ஆணை வெளி யிடுவதற்கு முன்பே சுப்பிரமணிய புரத்தில் ஆற்றுக்குச் செல்ல தனியா ருக்கு அவசரமாக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது. அங்கே உள்ளூர் காரர்கள் உள்ளே நுழைய தடைவிதிக் கப்பட்டது. அணை தொடங்கி ஆதிச்ச நல்லூர் வரை ஆற்றை 7 பகுதிகளாகப் பிரித்து தூர் வார தீர்ப்பாயம் உத்தர விட்டிருந்தது. அதன்படி முதல் பகுதியான அணையில் இருந்து பணியைத் தொடங்க வேண்டும். ஆனால், ஏராளமான மணல் குவிந்திருக்கும் 7-ம் பகுதியான ஆதிச்சநல்லூர் அருகே தூர் வாரினார்கள். நாள் ஒன்றுக்கு 500 லாரிகள் வீதம் இரண்டு மாதங்களில் ஆற்றில் இருந்த மணலை எல்லாம் அசுர வேகத்தில் அள்ளிவிட்டார்கள். சுமார் 5 ஆண்டு காலம் ஆறு சேமித்து வைத்த மணல் எல்லாம் போய்விட்டது. மீண்டும் தீர்ப்பாயம் சென்றோம். மறு உத்தரவுக்குப் பின்பு அணையில் இருந்து தூர் வாரத் தொடங்கினார்கள். இப்போது மழை பிடித்துக்கொண்டது. பணியையும் நிறுத்திவிட்டார்கள்” என்கிறார்.

கேரளா மற்றும் ஆந்திராவில் நடைமுறையில் இருப்பதுபோல அணையில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு தூர் வாரக்கூடாது என்பதுதான் நல்லகண்ணு உள்ளிட்டோரின் வாதமாக இருக்கிறது. இயந்திரங்கள் கொண்டு தூர் அள்ளுவதால் மணல் அதிகளவு அள்ளப்படுவதுடன் ஆற்றின் பல்லுயிர் சூழலும் பாதிக்கப்படுகிறது. பாரம்பரிய முறையில் தூர் வாரினால் ஏராளமான கிராம மக்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்கிறார்கள்.

ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாருவதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 5 கி.மீ முன்பாக இருக்கிறது கொங்கராயன்குறிச்சி. தாமிரபரணியின் ஆற்றிலேயே அதிக மணல் இருப்பது இங்குதான். சுமார் 4 கி.மீ தொலை வுக்கு இங்கே மணல் பரப்பு விரிகிறது. ஆனால், அணை தூர் வாரப்பட் டால், நீரின் வேகத்தில் கொங்கராயன் குறிச்சியின் மணல் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு அடித்துச் செல்லப்பட்டுவிடும். இதனால், தூர் வாரியது வீணாகப் போய்விடும் என்று கவலைப்படுகிறார்கள் விவசாயி கள். இதற்கு தீர்வாகத்தான் நயினார் குலசேகரன், ஸ்ரீவைகுண்டம் அணைக்கு முன்பாக ஆதிச்சநல்லூரில் ஒரு தடுப்பணையைக் கட்ட வேண்டும் என்கிறார். அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

நல்லது செய்வதற்கு சட்டத்தில் இடம் தேவையில்லை, மனதில் இடம் இருந்தால் போதும்!



தோழர் நல்லகண்ணுவின் முயற்சியால் தாமிரபரணியில் மணல் அள்ள 5 ஆண்டுகள் தடை விதித்து 2010, டிசம்பர் 2-ம் தேதி அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு கடந்த 2-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. தடை உத்தரவு அமலில் இருந்த காலகட்டத்திலேயே நதியில் ஆங்காங்கே திருட்டுத்தனமாக மணல் அள்ளினார்கள். வைகுண்டம் அணையைத் தூர் வாரும் சாக்கிலும் மணல் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது தடை காலாவதியாகிவிட்ட நிலையில் மீண்டும் இங்கே மணல் குவாரிகளை அமைக்க பரபரக்கின்றன மணல் மாஃபியாக்கள். எனவே, தாமிரபரணியைக் காப்பாற்றுவது நெல்லை மக்களின் கையில்தான் இருக்கிறது.



(நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x