Last Updated : 18 Dec, 2015 09:56 AM

 

Published : 18 Dec 2015 09:56 AM
Last Updated : 18 Dec 2015 09:56 AM

நூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும்

ஒரு நகரின் கட்டமைப்பு என்பது தக்க மழைநீர் வடிகாலையும் உள்ளடக்கியதே

நவம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையின் அளவு 1,219 மில்லிமீட்டர். இது நவம்பர் மாதம் பொழிகிற சராசரி மழையான 407மி.மீயைவிட மூன்று மடங்கு அதிகம். டிசம்பர் 1-ம் தேதி தாம்பரத்தின் மழைமானி காட்டிய அளவு 494 மி.மீ. ஒரு மாத சராசரி மழையைவிட இந்த ஒரு நாள் மழை அதிகமானது. கடந்த நூறாண்டுகளில் இப்படிக் கொட்டியதில்லை மழை.

நூறாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழையளவை நீரியல் நிபுணர்கள் நூறாண்டு-மழை (100-year rain) என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே பத்தாண்டு-மழை, ஐம்பதாண்டு-மழை, இருநூறாண்டு-மழை என்பனவும் உண்டு. ஒரு நகரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடுவார்கள். நூறாண்டு-மழையானது நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருமென்று எடுத்துக்கொள்ள முடியாது. இடையிடையேயும் வரும்.

ஹாங்காங் உதாரணம்

சென்னையில் பெய்த மழை நூறாண்டு-மழையாக இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த மழையாகவும் இருக்கலாம். எனில், வளர்ந்த நகரங்கள் பலவற்றில்கூட நூறாண்டு-மழைக்கான வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக ஹாங்காங்கில் சாலையோர மழைநீர் வடிகால்கள் ஐம்பதாண்டு-மழையைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. அதாவது, 50 ஆண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகப்படியான மழையை இவை உடனடியாகக் கடத்திவிடும். அதே வேளையில், இந்த வடிகால்கள் போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்கள் இருநூறாண்டு-மழையை எதிர்கொள்ளும் ஆழமும் அகலமும் கொண்டவை. இப்போது ஹாங்காங்கில் நூறாண்டு-மழையொன்று பெய்தால், சாலைகளில் மழைநீர் தேங்கவே செய்யும். ஆனால், சில மணி நேரங்களில் அவை அளவில் பெரிய பிரதான வாய்க்கால்களில் வடிந்துவிடும்.

ஹாங்காங் பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் சென்னைப் பெருநகரத்தோடு ஒப்பிடத்தக்கது. கடந்த சில தசாப்தங்களில் ஹாங்காங் அதிவேகமாக நகர்மயமாகியது. ஒரு ஊர் மென்மேலும் நகர்மயமாகிறபோது கூடுதல் மழைநீர் வடிகால்களும் வாய்க்கால்களும் வேண்டிவரும்.

மண் தரையும் குறைவான வீடுகளும் மரம் செடிகளும் உள்ள கிராமப்புற நிலத்தில் பெய்கிற மழையில் 40% நீர் ஆவியாகும், 40% நீரை நிலம் ஈர்த்துக்கொள்ளும், 20% நீர் நிலத்தின் மீது ஓடும். மாறாக, நெருக்கமான கட்டிடங்களும் சாலைகளும் மிகுந்த நகர்ப்புறத்தில் 30% ஆவியாகும், 10% நிலத்தடியில் போகும், 60% நீர் சாலைகளில் மிகுந்து நிற்கும். அதற்கேற்றார்போல் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும்.

அடுத்தடுத்து வந்த வெள்ளப் பிரச்சினைகளைத் தொடர்ந்து 80-களில் ஹாங்காங்கின் மழைநீருக்கும் கழிவுநீருக்குமான பிரதானத் திட்டம் வகுக்கப்பட்டது. 1989-ல் இதற்கான தனித் துறை ஏற்படுத்தப்பட்டது. அப்போதிருந்த சாலை வடிகால்களின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, அவை ஐம்பதாண்டு-வெள்ளத்தைக் கடத்தி விடும்படியாக மேம்படுத்தப்பட்டது. நகரம் வெகுவாக விரிவாகிவிட்ட பகுதிகளில் அப்படி மேம்படுத்துவதில் சிரமம் இருந்தது. அவ்வாறான பகுதிகளில் சில நவீன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அவற்றில் இரண்டு திட்டங்கள் குறிப்பிடத்தக்கன.

ஹாங்காங்கில் மலைப்பாங்கான பகுதிகளும் சரிவுகளும் அதிகம். இவற்றில் பெய்கிற மழை தாழ்வான சாலைகளுக்கு விரைவாக வந்துவிடும். அவை நகரின் பிரதான சாலைகளாகவும் அமைந்துவிடும்போது பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று கருதப்பட்டது. அதனால், இப்படியான சாலைகளை வந்தடைவதற்கு முன்னரே மழைநீர் 43 இடங்களில் மறிக்கப்பட்டு, அவை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப் பாதைக்குள் கடத்திவிடப்பட்டது. இந்தச் சுரங்கங்கள் நீரை நேராகத் தென்சீனக் கடலில் கொண்டுபோய்க் கொட்டிவிடும். லை-சீ-காக், சுன்-வான், நகர் மேற்கு ஆகிய மூன்று பகுதிகளில் சுமார் 20 கிலோமீட்டர் நீளத்தில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. இவை மெட்ரோ ரயில் சுரங்கங்களைப் போன்றவை. சாலைப் போக்குவரத்தைப் பாதிக்காமல் நிலத்தடியில் தோண்டப்பட்டன.

இன்னொரு புதுமையான திட்டம் தை-ஹாங் என்கிற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்புக் கிடங்கு. கவ்லூன்-டாங், மாங்-காக் போன்ற வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஐம்பதாண்டு-வெள்ளத்துக்கு ஏற்றார்போல் வடிகால்களை மேம்படுத்துவதில் மேற்கூறிய சிரமங்கள் இருந்தன. இங்கு சேகரமாகும் கூடுதல் மழைநீர் தற்காலிகமாக இந்தக் கிடங்குக்குக் கடத்திவிடப்படுகிறது. பிற்பாடு இவை படிப்படியாகப் பிரதான வாய்க்கால்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாதாளக் கிடங்கு மூன்று கால்பந்தாட்டப் பரப்பளவிலானது. இதன் கொள்ளளவு ஒரு லட்சம் கனமீட்டர் (35 லட்சம் கன அடி).

சென்னையின் சவால்கள்

சென்னையின் வெள்ள வடிகால் திட்டம் வேறு விதமான சவால்களைக் கொண்டது. கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் முதலானவை மழை நீரைக் கடலில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. முறையே எண்ணூர், அடையாறு முகத்துவாரம், நேப்பியர் பாலம், முட்டுக்காடு ஆகிய இடங்களில் இவை கடலில் சங்கமிக்கின்றன. வங்காள விரிகுடா அலைகள் மிகுந்தது. ஒரே நாளில் அலைகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். தாழ்வான அலைகள் இரண்டடியும் உயர்வான அலைகள் நான்கடியும் எழும்பும். உயர்வான அலைகளின்போது ஆற்று நீர் கடலில் கலப்பதில் தாமதம் ஏற்படும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அலைகள் பத்தடி வரைகூட உயரும். அப்போதெல்லாம் வெள்ளம் வடியாமல் ஆற்றிலும், கால்வாயிலும் சாலையிலும் தேங்கி நிற்கும். இந்த இடங்களில் ஹாங்காங்கைப் போலச் சுரங்கங்களை அமைத்து வெள்ளத்தை நேரடியாகக் கடலில் கடத்திவிட முடியுமா என்று நிபுணர்கள் ஆலோசிக்கலாம்.

ஹாங்காங்கைப் போன்ற புதிய பாதாளக் கிடங்குகளை சென்னையில் கட்டவேண்டி வராது. அந்தப் பணியை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் ஏரிகளையும் குளங்களையும் தூர்வாரவும் ஆழப்படுத்தவும் வேண்டும்.

எப்படிச் செய்யலாம்?

தமிழகத்தின் பொதுப்பணித் துறை, நெடுஞ் சாலைத் துறை, சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, சி,எம்.டி.ஏ முதலான அரசு நிறுவனங் களும் ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களும் பராம்பரியம் மிக்கவை. அனுப வமும் திறமையும் கொண்ட பொறியாளர்களையும் நிபுணர் களையும் கொண்டவை. இவர்களில் தக்கவர்களைக் கொண்டு ஒரு புதிய நிறுவனத்தை அமைக்கலாம். இந்த நிறுவனம் நீரியல் துறையில் அனுபவம் மிக்க பொறியாளர் களின் ஆலோசனைகளையும் பெறலாம். இந்த நிறுவனத்துக்கு வடிகால் திட்டங்களை வடிவமைக்கவும் நடைமுறைப்படுத்தவுமான பொறுப்பை வழங்கலாம்.

முதல்கட்டமாக ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் படுகைகள்- இங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளைச் சட்டரீதியாக அகற்ற வேண்டும். மேலும், நீர்வழிப் பாதையில் கழிவுநீர் கலப்பதையும், திடக்கழிவுகள், குப்பைக் கூளங்கள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும். மக்களுக்கு இது குறித்தான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

சென்னை நகரின் மழையளவு குறித்து விரிவாக ஆராய்ந்து, சாலையோர வடிகால்களும் பிரதானக் கால்வாய்களும் எத்தனை ஆண்டு வெள்ளத்தைக் கடத்திவிட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். சென்னை நகரம் மிகுதியும் சமதளத்திலானது. நீர் வேகமாக வடிந்துவிடாது. இப்போதைய சாலையோர வடிகால்களின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, அவை மேம்படுத்தப்பட வேண்டும். பல இடங்களில் புதிய ஆழ்குழாய்கள் வேண்டி வரலாம்.

ஒரு நகரின் உள்கட்டமைப்பு என்பது சாலைகள், பாலங்கள், குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு என்பன மட்டுமல்ல. தக்கதாய மழைநீர் வடிகாலும் அதில் அடங்கும். அதை உணர்த்தியிருக்கிறது இந்த மழை.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x