Published : 01 Jun 2021 06:13 AM
Last Updated : 01 Jun 2021 06:13 AM

தடுப்பூசிதான் நமது ஒரே ஆயுதம்

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் 200 கோடிக்கும் மேற்பட்ட அலகுகள் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பருக்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று இந்திய அரசு மே 14, 2021 அன்று அறிவித்தது. அரசாங்கத்தை அதன் நோக்கத்துக்காகப் பாராட்டலாம்: 100 கோடி இந்தியர்களுக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி போடுவது கருத்தளவில் இந்தியாவுக்கு சமூகத் தடுப்பாற்றலை வழங்க வேண்டும். ஆனால், 210 கோடி தவணைகள் என்ற எண்ணிக்கையானது நமக்குப் புரிபடுவதைப் போல, மற்ற விஷயங்கள் புரிபடுவதில்லை. தடுப்பூசிகள் (மட்டும்) உயிர் காப்பதில்லை; விரைவான, பெருந்திரள் மக்களுக்கான, திரும்பத் திரும்பப் போடப்படும் தடுப்பூசிகளே உயிர் காக்கின்றன.

போர்க்கால நடவடிக்கை வேண்டும்

2019 பொதுத் தேர்தலில், வெறும் ஐந்தே வாரங்களில் 1 கோடி தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் இருந்த 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 61 கோடி இந்தியர்கள் வாக்களித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் முடுக்கிவிட முடியும் என்றால், 100 கோடி இந்தியர்களுக்கு 5 வாரங்களில் இந்தியாவால் தடுப்பூசி போட முடியாது என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. போர்க்கால அடிப்படையில் 75% மக்களுக்கு ஐந்து மாதங்களில் அல்ல, ஐந்து வாரங்களில் இந்தியா தடுப்பூசி போட வேண்டும்.

மே 23 வரை மக்கள்தொகையில் 10.9% பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டது; வெறும் 3% பேருக்கு மட்டுமே இரண்டு தவணைகளும் போடப்பட்டிருக்கின்றன. ஜனவரி 16-ல் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 லட்சம் இந்தியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவந்திருக்கிறது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் வரை 210 கோடி அலகுகள் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்றால், இந்தியாவுக்கு உற்பத்தி மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் 1.44 கோடி அலகுகளையாவது நிர்வகிப்பதும் அவசியம். ஆனால், தடுப்பூசிகளை நிர்வகிக்கும் கட்டமைப்பு போதிய அளவில் இந்தியாவிடம் இல்லை. இதில் ராணுவத்தை ஈடுபடுத்தவில்லை என்றால், இந்த முக்கியமான பணியில் இந்தியா தோல்வியடையும். மருத்துவமனையில் பணிபுரியாத ஒவ்வொரு மருத்துவப் பணியாளரும், ஒவ்வொரு மருத்துவ மாணவரும், மருத்துவ உதவிப் பணிகளுக்கான மாணவரும், செவிலியர் மாணவரும் தடுப்பூசியை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசியினாலோ சமூகத் தடுப்பாற்றலாலோ காக்கப்படாதவரை இந்தியாவுக்குப் பாதுகாப்பே இல்லை.

உருமாறும் வைரஸ்

பரவும் வைரஸ்கள் வேற்றுருவம் அடைபவை. அந்த வைரஸ்கள் தம்மைத் தாமே நகலெடுத்துக்கொள்வதையும் வேற்றுருவம் அடைவதையும் தடுக்க வேண்டுமென்றால், அவை பரவியுள்ள உடலின் நோய்த் தடுப்பாற்றல் அந்த வைரஸ்களைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நோய்த் தடுப்பாற்றல் இரண்டு வழிகளில் மட்டுமே பெறப்பட முடியும் – ஒன்று, இயல்பான நோய்த் தொற்று; இரண்டாவது, தடுப்பூசி மூலம் பெறப்பட்ட தடுப்பாற்றல். தற்போது தடுப்பூசி போடப்படும் வேகத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், தடுப்பூசி போடப்படாமலும் அல்லது குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டும் இருக்கும் மக்கள்தொகையில் வைரஸானது பரவிக்கொண்டிருக்கிறது; தன்னைத் தானே நகலெடுக்கிறது, வேற்றுருவம் அடைகிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசி போடவில்லை என்றாலும், தடுப்பூசி போடப்படும் வேகத்தை முடுக்கிவிடவில்லை என்றாலும் இந்தியாவில் வேற்றுருவ வைரஸ்களின் பெருந்தொற்றானது சுழற்சி முறையில் தோன்றி, அதிகரித்து, பின் குறைந்து உயிரிழப்புகள், வாழ்வாதார இழப்புகள் என்று மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இன்ஃப்ளூயென்சாவைப் போல கரோனா வைரஸும் நீடித்து நிலைக்கப்போகிறது. இந்த வகை கரோனாவால் இல்லை என்றாலும் அதன் மற்றுமொரு துணை இனத்தால் (Strain) தொற்றுகளின் மற்றுமொரு அலை உருவாவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது. இன்னும் நிறையப் பேர் பாதிக்கப்படுவார்கள். பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு விரைவாகவும் தொடர்ச்சியாகவும் தடுப்பூசி செலுத்தி, பெருந்தொற்றை அவ்வப்போது ஏற்படுவதும், தொற்று விகிதம், நோயின் கடுமை, இறப்பு விகிதம் போன்றவை குறைவாகக் கொண்டிருப்பதுமான உள்ளூர்த் தொற்று என்ற அளவில் ஆக்குவதுதான் லட்சியம். இதனால், பொதுமுடக்கங்களிலிருந்து பாதுகாப்பாக வெளிவரவும் பொருளாதாரத்தை இயக்கத்தில் வைத்திருக்கவும் முடியும்.

ஒற்றை நிகழ்வல்ல தடுப்பூசி

ஒட்டுமொத்த நாட்டுக்கும் தடுப்பூசி செலுத்துவதென்பது ஒற்றை நிகழ்வல்ல என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் பலரும் மறந்துவிடுகிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. இந்த மாபெரும் காரியத்தை ஒவ்வொரு பருவமும் திரும்பத் திரும்ப மேற்கொள்ள வேண்டும். மேம்படுத்தப்பட்டதும் செறிவூட்டப்பட்டதுமான தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். புதிய வேற்றுருவங்களால் உருவாகும் அடுத்த பெருந்தொற்றுச் சுழற்சியை அதன் மூலம் தடுக்க வேண்டும்.

எல்லாத் தடுப்பூசிகளும் இணையான திறன் கொண்டவை அல்ல – அதிக திறனும் அதிக லாபமும் ஒன்றுக்கொன்று இணையானவை. தடுப்பூசி உற்பத்தியாளர் ஒருவர் தடுப்பூசி ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முதன்மையான காரணம் குறிப்பிட்ட காலவரம்புக்குள் அதிக அளவிலான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறன் அல்ல; சக துறையினரின் மதிப்பாய்வு, தடுப்பூசியைப் பற்றிய கட்டுரைகள், தடுப்பூசி அறிமுகம் போன்றவற்றின் அடிப்படையில் தடுப்பூசியின் திறன்தான் இதற்குக் காரணம். அதைப் போல புதிய துணை இனங்கள், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய வேற்றுருவங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பத் தடுப்பூசிகளை மாற்றியமைத்து, மேம்படுத்தும் திறனும் முக்கியமானது.

தடுப்பூசி ஏற்றத்தாழ்வு

இந்தியர்கள் அனைவரும் பாதுகாக்கப்படாவிட்டால் நம்மில் யாருமே பாதுகாக்கப்படுவதில்லை. 210 கோடி தவணை தடுப்பூசிகளை ஐந்து மாதங்களில் போடப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. எல்லா மாநிலங்களுக்குமான கொள்முதலையும் உற்பத்தியையும் மத்திய அளவில் செய்யும் முகமை எதைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இது தடுப்பூசிகளைப் பொறுத்தவரை சீர்மையின்மையையே ஏற்படுத்தும். இது இந்தியாவில் மருத்துவத் துறையில் ஏற்கெனவே காணப்படும் பாரபட்சத்தையும் அநீதியையும் அதிகப்படுத்தும். ஏழை-பணக்காரர், கிராமப்புறம்-நகர்ப்புறம், இணையவசதியில் ஏற்றத்தாழ்வு போன்ற பிளவுகளுடன் தற்போது தடுப்பூசி ஏற்றத்தாழ்வையும் நாம் இப்போது சேர்ப்பதுபோல் தோன்றுகிறது.

இந்தியா தனது மிக மோசமான தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும். தனது பெருமிதங்களை அது ஒதுக்கிவைக்க வேண்டும். செயல்படக்கூடிய ஒரே ஆயுதமான தடுப்பூசியின் பின்னால் அது போர்க்கால அடிப்படையில் ஒன்றுதிரள வேண்டும். அளவிட முடியாத, ஆனால் தடுத்திருக்கக்கூடிய அளவிலான உயிரிழப்புகள், துயரங்கள், பொருளாதார நசிவு போன்றவற்றைப் பெருந்தொற்றின் சுழற்சிகள் விட்டுச்சென்றிருக்கின்றன. நாம் தோற்றுப்போனோம் என்றால், ஏன் நாம் ஒன்றுதிரண்டு சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று இனிவரும் இந்தியர்களின் தலைமுறைகள் கேள்வி கேட்பார்கள்.

- ஜோசப் பிரிட்டோ, லண்டனின் செயின்ட் மேரீஸ் மருத்துவமனையின் இம்பீரியல் கல்லூரியின் முன்னாள் மருத்துவர்.
© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x