

இந்திய அயலுறவுப் பணியில் இருப்பவர்களைப் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிடுவதென்று 1958-ல் நேருவின் ஆட்சியின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு முடிவெடுத்தது.1940-களிலும் 1950-களிலும் வெளியுறவுத் துறையில் இணைந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டிருந்த அந்த நூலைத் தொகுக்கும் பொறுப்பை கே.பி.எஸ்.மேனன் ஜூனியர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வந்த தசாப்தங்களில் இந்தியாவின் வெளியுறவுத் துறையைச் செதுக்கியவர்களெல்லாம் அதில் இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 95.
இந்தப் புத்தகம் காணக்கிடைக்காத ஒன்று. சில நூலகங்களிலும் தனிப்பட்ட புத்தகத் தொகுப்புகளிலும் மட்டுமே இருக்கிறது. ‘அலுவல்ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும்’ என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தக வரிசையின் முதல் தொகுப்பில் இடம்பெற்றிருப்பவர்கள் பெரும்பாலானோர் நேருவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது இதன் தனிச்சிறப்பு.
அரசாங்கத்தின் அந்தக் காலத்து வெளியுறவுக் கொள்கைகள் குறித்த களஞ்சியம் இந்தத் தொகுப்பு. இந்தி மொழி மேம்பாட்டுக்கான சிறப்புப் பணி அதிகாரியாக அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனை வெளியுறவுத் துறை நியமித்ததை இந்த நூலில் அறிகிறோம். நேரு காலகட்டத்தில் வெளியுறவுத் துறை முழுக்கவும் ஆண்களின் கோட்டையாக இருந்ததையும் இந்த நூலில் அறிகிறோம். ஒட்டுமொத்தப் புத்தகத்திலுமே மீரா இஷார்தாஸ் மாலிக், கோனிரா பெல்லியப்பா முத்தம்மா ஆகிய இரண்டு பெண்களின் பெயர்கள்தான் காணப்படுகின்றன. வெளியுறவுத் துறையில் விஜயலட்சுமி பண்டிட்டைத் தவிர அந்த இரண்டு பெண்கள்தான் அப்போது பணியாற்றியிருக்கிறார்கள் என்கிறார் நட்வர் சிங்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய நட்வர் சிங், இந்திரா காந்தியின் வெளியுறவுச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரி போன்று பிற்காலத்தில் பிரபலமாகவிருந்த பலரையும் இந்தப் புத்தகத்தில் காண முடிகிறது.
இந்தப் புத்தகத்தில் மேனன்கள், நாயர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்தப் புத்தகத்தில் மட்டும் மொத்தம் 11 மேனன்கள். தவிர, ஹஸ்கர் குடும்பத்திலிருந்து மூன்று பேர்கள். இந்த அதிகாரிகளில் பலரும் பன்மொழித் திறன்களைக் கொண்டிருந்தார்கள். ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்ய மொழி போன்றவற்றைப் பலரும் கற்றிருந்தார்கள். பர்மீஸ், அரபி, பஹாஸா இந்தோனேஷிய மொழி போன்றவற்றைக் கற்றவர்களும் இருந்தார்கள். இந்தத் தொகுப்பு செப்டம்பர் 1, 1958-ல் வெளியிடப்பட்டது.
© ‘தி இந்து’, தமிழில்: ஆசை