Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

இது எதிர்மறைக் காலமா?

ஒவ்வொரு பேரழிவும் முன் ஊகிக்கத்தக்கதாக இருக்கும் அதே வேளையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. எரிமலை வெடிப்பிலிருந்து பருவம் தவறுதல் வரை நம்மால் எதிர்காலத்தைப் பெருமளவு கணிக்க முடிந்தாலும், நாம் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளில் கோட்டைவிடுபவர்களாக இருக்கிறோம். மனித அறிவு எல்லையற்றதாக இருக்க, நமது முயற்சிகளின் ஒருங்கிணைப்பில் இன்னுமே பின்தங்கியவர்களாகவே தொடர்கிறோம் என்பது ஒரு முரண். நாம் இப்போது முற்றிலும் எதிர்மறையான ஒரு காலத்தில் வாழ்கிறோம் என்பது ஓர் உண்மை. உலகளாவிய சிக்கலான கரோனா பெருந்தொற்று எல்லாத் திசைகளிலும் எதிர்மறைக் காற்றையே நிரப்பியுள்ளது. நாம் மூச்சுத் திணறுகிறோம். நமது அரசுகள், அமைப்புகள் மூச்சுத் திணறுகின்றன. நமது முக்கியத்துவங்கள், முன்னுரிமைகளின் பட்டியலில் அனைத்துமே வரிசை மாறி, உயிர்பிழைத்தல் மட்டுமே முன்னணியில் நிற்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது?

மனித வரலாற்றில் எப்போதாவது நேர்மறைக் காலமென்று ஒன்று இருந்ததா? இதற்கான பதில் நிச்சயமாக சந்தேகத்துக்கு உரியது. வேட்டையாடி உணவருந்திய காலம் முதலாக விவசாய, தொழில் சமூகமாகத் திரண்ட காலகட்டம் வரையிலும் ஒவ்வொரு வகையில் அழிவை எதிர்கொண்டு, பேரளவில் இழப்புகளைச் சந்தித்தே மனித இனம் உயிர் பிழைத்திருக்கிறது. உதாரணத்துக்கு, தொழிற்புரட்சியின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பருத்தி ஆலை மையங்களில் வாழ்ந்தவர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 17 வருடங்களாக இருந்திருக்கிறது. சாதாரண வயிற்றுப்போக்கால் நாம் இங்கே பல உயிர்களை இழந்திருக்கிறோம். கைக்குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழத்தல், காச நோய் போன்றவற்றால் நாம் அநாமதேயமாகப் பல உயிர்களை இழந்திருக்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் சமூகமும் பல்வேறு வகையில் நிகழ்ந்த உயிரிழப்புகளை உள்வாங்கியே மீண்டிருக்கிறது.

கடந்துவந்த பஞ்ச காலம்

நோயைக் காட்டிலும் கொடிய பஞ்ச காலங்களைத் தமிழகமேகூட சந்தித்திருக்கிறது. தாது வருடப் பஞ்சம் எனக் குறிப்பிடப்படும் 19-ம் நூற்றாண்டுப் பஞ்சம் பல லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டியது. நவீன மதிப்பீடுகள் 82 லட்சம் மக்கள் வரை இறந்திருக்கலாம் என மதிப்பிடுகின்றன. இயற்கைப் பேரழிவை விடுங்கள், உணவுப் பஞ்சம் பெரும்பாலும் செயற்கையானது. மனிதத் தவறால், விநியோகத்தில் நிலவும் குளறுபடிகளால் நிகழ்வது. நாம் முழுமுற்றான பஞ்ச கால நிலையைக் கடந்திருக்கிறோம். உணவுப் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவிலாவது நமது நிர்வாக முறைகளால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆயினும், இன்னுமே உணவில்லாமல் உறங்கச் செல்லும் அல்லது உறக்கம் வராமல் தவிக்கும் ஏழைகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை எதை ஓர் அளவுகோலாகக் கொண்டாலும் அளவிடப்படுவதற்கு பெரும் எண்ணிக்கை கிடைத்துவிடும்.

நாம் இன்னும் மத்திய கால ஐரோப்பாவைச் சீரழித்த பிளேக் நோயை, இரு உலகப் போர்கள், தேசப் பிரிவினை, குறும் போர்கள், மதக்கலவரங்களைப் பற்றி விவாதிக்கவில்லை. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில்தான் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த ஸ்பானிஷ் ஃபுளூ பற்றி அறிந்தோம். ஒவ்வொரு பேரழிவைச் சந்திக்கும் காலத்திலும் மனித வரலாறு அதற்கொரு முன்னுதாரணத்தை விட்டுச் சென்றிருக்கிறது. மனித வாழ்வின் அடிப்படைகளில் எதுவுமே புதியதில்லை. அதுவும் ஒரு கரோனா வைரஸைப் போல தன்னைச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்திருக்கிறது.

மனித இயல்பு

அறிவியலின் அடிப்படையில் சொல்லப் போனால், நாம் உண்மையில் வைரஸ்களின், பாக்டீரியாக்களின் உலகில்தான் வாழ்கிறோம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் வகைகளும் மனித இனத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானவை. நாம் அவற்றோடு இடைவிடாத தொடர்பில் இருக்கிறோம். நமது உடல் பல்வேறு நுண்ணுயிர்களின் வாழிடமாகவும் இருக்கிறது. தூய்மையான மனித உடலென்று ஒன்று இல்லை. நாம் பல்வேறு உயிரினங்களைப் போலவே பல்வேறு உயிரினங்களின் கலவையால் ஆன உடலைக் கொண்டவர்கள். ஆனாலும், பெருந்தொற்றுக் காலத்தின் இழப்புகளால் நாம் ஏன் மனச்சோர்வு அடைகிறோம்? நம்பிக்கை இழக்கிறோம்? அது மனித இயல்பின், உயிரினங்களின் இயல்பான எதிர்வினை. நம்பிக்கை இழப்பும் மனச்சோர்வும் இயல்பானவை. நமது மனம் மகிழ்ச்சியாக இருக்க மட்டுமே உருவான, ஓயாது இயங்கும் ஓர் இயந்திரமல்ல. அதன் இயல்பிலேயே விலகலையும் செயலின்மையையும் விரும்புவது.

கண் முன்னே நம் குடும்ப உறுப்பினர்கள் வயது வேறுபாடின்றி மரணிக்கிறார்கள். நம் மீது ஓயாது மோதும் தகவல் அலைகளில் நோய்மையும் மரணச் செய்தியுமே நிரம்பியிருக்கின்றன. நாம் இவற்றை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தீயவற்றைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருக்கலாம். ஆனால், தீயவற்றால் தாக்குறாமல் நம்மால் ஒருநாளும் இருக்க முடியாது. வாழ்வின் அடிப்படையிலேயே நிச்சயமின்மை ஒரு நிரந்தர முடிச்சாக அவிழ்க்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. பெருந்தொற்றுக் காலம் மெல்ல விலகும். உலகு இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்படக்கூடும். நாம் இழப்புகளோடு சேர்ந்தே ஒரு புதிய விடியலைக் காண்போம். மனிதர்கள் தாமாக முன்வந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதைக் காண்கிறோம். உணவு, மருந்து, பொருள் உதவி என வலிமையான அரசு அமைப்பைக் காட்டிலும் தனிமனிதர்கள், நண்பர்கள், உறவினர்கள் அளித்துக்கொள்ளும் பரஸ்பர நம்பிக்கையும் உதவிகளும் அற்புதங்களுக்கு நிகரானவை. இந்த எதிர்மறைக் காலத்தில் மனிதர்கள் பலர் தங்களது சிறப்பான குணங்களை வெளிப்படுத்துகிறார்கள். இதுவும் மனித இயல்பின் ஒரு பகுதிதான்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன் பிறக்கும் குழந்தைகளில் ஒன்றிரண்டாவது இறப்பது என்பது சாதாரணம். அப்போதையே உணர்ச்சிகர எதிர்வினை இப்போதிருப்பதைப் போல கடினமானதாகவும் இருக்கவில்லை. நம் காலம் நம்மை மகிழ்ச்சியின் அடிமைகளாக மாற்றியிருப்பதால், இழப்புகளைக் கண்டு பேரளவில் அச்சமும் மனநெருக்கடியும் கொள்கிறோம். முன் சென்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் சிறப்பானவர்கள் அல்ல; அவர்கள் சந்திக்காத எந்தச் சவாலான நிலைமையையும் புதிதாகச் சந்திப்பவர்கள் அல்ல. எதிர்மறைக் காலம் என்பது நம்மோடு எப்போதுமே உடன் இருப்பது; நேர்மறைக் காலமோ நாம் உருவாக்க விரும்புவது. இவ்விரண்டு நிலைகளுக்கு இடையேதான் வாழ்வு நகர்கிறது.

- பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tweet2bala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x