Published : 11 Dec 2015 09:33 AM
Last Updated : 11 Dec 2015 09:33 AM

களத்தில் தி இந்து: மெதுவாக நிமிர்கிறது சென்னை

உதவும் கரங்கள் ஒன்று சேர்கின்றன

*

மெதுவாக நிமிரத் தொடங்கியிருக்கிறது சென்னை. சாலைகளில் உலர்ந்த ஈரம் மக்கள் நெஞ்சங்களில் ஊற்றெடுத்துப் பொங்குகிறது. தமிழகமெங்கும் இருந்து ‘உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்று நீளும் ஆயிரமாயிரம் கரங்களால் நலிந்த மக்கள் நம்பிக்கைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக உதவிகளோடு எதிர்கால வாழ்வாதாரம் குறித்தும் பரிசீலிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்த பயம் ஓரளவு நீங்கியிருக்கிறது.

‘தி இந்து’ மழை வெள்ள நிவாரண முகாமில் அசராமல் ஒரு பக்கம் உதவிகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம், அந்த உதவிகள் நிச்சயமாக தகுதியானவர்களுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என்பதில் ’தி இந்து’ உறுதியாக இருக்கிறது. இதற்காக நகரின் மூலை முடுக்கெல்லாம் கார்களில், இரு சக்கர வாகனங்களில், படகுகளில், மிதி வண்டிகளில், சில இடங்களில் நடந்து என எப்படியெல்லாம் செல்ல சாத்தியம் இருக்கிறதோ அப்படி எல்லாம் சென்று பாதிப்புகளை துல்லியமாக கணக்கெடுக்கிறார்கள் நமது தன்னார்வலர்கள்.

அதன்படி பொருட்கள் வகை பிரிக்கப்பட்டு, தேவைப்படும் மக்களைக் கண்டறிந்து அவர்கள் வீடுகளுக்கே சென்று நேரில் கொடுக்கப்படுகிறது. இடையே அரசியல் பிரமுகர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உட்பட யார் குறுக்கிட்டாலும் அவர்களிடம் பொருட்களை தருவதில்லை. அவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் கேட்டு நேரில் கொண்டு சென்றே பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பாதிக் கப்பட்ட இடங்களில் இருந்து வருகிற கோரிக்கைகளையும் ஒரு குழு பரிசீலித்து, தேவையான நிவாரணப் பொருட்களோடு, பாதிக்கப்பட்ட மக்களின் கைகளில் பொருளை சேர்ப்பதற்கு ஒரு தன்னார்வ குழுவையும் அனுப்பி வைக் கிறது.

மார்ட்டின் குழுமத்தின் மகத்தான உதவி!

கோவையில் இருந்து காலையிலேயே ஒரு கண்டெய்னர் முழுக்க நிவாரணப் பொருட்களோடு வந்துவிட்டார்கள் கோவை எஸ்.மார்ட்டின் குழுமத்தின் நிர்வாகிகள். 400 பாய்கள், 500 டவல்கள், 900 லுங்கிகள், 900 டி-ஷர்ட்ஸ், 600 நைட்டிகள், பால் பவுடர், தண்ணீர்ப் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள், மெழுகுவத்தி, மருந்துப் பொருட்கள் நமது நிவாரண முகாமில் வழங்கப்பட்டது, “தொழிலை ஒரு வாரம் ஒதுக்கிவெச்சிட்டு, முழுக்க முழுக்க இந்த நிவாரணப் பணிகளைத்தான் செஞ்சிக்கிட்டிருக்கோம். அடுத்து என்ன உதவிகள் வேணும்னு சொன்னீங்கன்னா எங்க இயக்குநர் செய்ய தயாரா இருக்கார்…” என்றார்கள் கோவை எஸ்.மார்ட்டின் குரூப் நிறுவன நண்பர்கள்.

களத்தில் இளைய கரங்கள்

பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும் மடிப்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மதிபாரதி, நேசமணிகண்டன், ஹேன்சன், மேகநாதன், ஆகாஷ், பிரபாத் ஆகிய 6 பேர் தன்னார்வலர்களாக மூட்டைகளைத் தூக்கி வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். “எங்க பகுதிகளும் இந்த மழையில ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. ‘தி இந்து’ நிவாரண முகாம் அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யறதா பேப்பர்ல படிச்சோம். அதான் நாங்களும் நண்பர்களோட வந்துட்டோம்…”என்கிறார் மதிபாரதி.

சளைக்காத காவல்துறையின் மனிதநேயம்

நிவாரணப் பணிகளில் காவல் துறையினரின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை பெருநகர ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் வரிசையாக நின்று, நிவாரணப் பொருட்களை வண்டிகளில் இருந்து இறக்கி வைக்கிறார்கள். காவல் ஆய்வாளர் அன்பழகன் தலை மையில் 30 ஆண் காவலர்கள், 10 பெண் காவலர்கள் என தொடர்ந்து வெள்ள நிவாரண மீட்புப் பணிகளைச் செய்தவர்கள், இப்போது நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

“எனக்கு சொந்த ஊரு மதுரை. மழை வெள்ள மீட்புப் பணியிலே சைதாப்பேட்டை, எழும்பூர், பெரம்பூர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்டு வெளியே கொண்டு வந்தோம். கழுத்தளவு தண்ணீரில் உள்ளே சென்று மீட்டு வந்தோம். நான் காவல்துறையில் பணியில் சேர்ந்ததற்கு இப்பதான் அர்த்தமே கிடைச்சிருக்கு.…” என்றார் காவலர் பூபாலன்(25). காவல் துறையினரைப் போலவே தெற்கு ரயில்வே அதிகாரிகளும் தன்னார்வ தொண்டர்களாக வந்து பணிபுரிந்தனர்.

பேருதவியில் பெண்கள்!

மயிலாப்பூரில் இருந்து குடும்பத் தலைவி ரம்யா(50) தலைமையில் மூன்று கல்லூரி மாணவிகளும் கடந்த மூன்று நாட்களாக தினமும் வந்து தன்னார்வலராக பணி செய்கிறார்கள். எம்.எஸ்.சி., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் துளசி(21), எம்.பி.ஏ. படிக்கும் கோமளா(21), பிளஸ் 1 படிக்கும் ஜெய(16) மூவரும் ஓடியோடி வேலை செய்கிறார்கள்.

“ஒரு வாரமாவே என் பையன் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு வந்து வேலை செய்யிறாப்புல. எனக்கும் வீட்டில இருக்க முடியலே. அதான் நான் கிளம்பினவுடனே பக்கத்து வீட்டில இருக்கிற எங்க சொந்தக்காரப் புள்ளைகளும் நாங்களும்கூட வர்றோம்னு கிளம்பி வந்துட்டாங்க…!” என்றார் ரம்யா.

பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உதவி

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ளி மழை வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட் டிருக்கிறது.

அந்தப் பள்ளியில் படிக்கும் 160 குழந்தை களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் கேட்டு பள்ளி உதவி ஆசிரியை ரெத்தினவள்ளி வந்திருந்தார். அவர் மூலமாக நிவாரணப் பொருட்கள் உடனடி யாக ஒரு வாகனத்தில் அனுப்பப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் என்.ராஜேந்திரன்(30) நெற்குன்றம் அபிராமிநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான நிவாரணப் பொருட்கள் கேட்டு வந்திருந்தார். அந்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்றைய தினம் முடிச்சூர், இரும்புலியூர், மீஞ்சூர், சூளைமேடு, சத்யா நகர், ஓட்டேரி, படப்பை, தரமணி, மணலி புதுநகர் உட்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 16,000 குடும்பங்களுக்கு போர்வை, பாய், அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகிக் கப்பட்டன.

உறங்காத விழிகளும்.. தொடர்ந்த பயணமும்..

திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. கல்விக் குழுமங்களின் சார்பாக சேலை, வேட்டி, பெட்ஷீட், குழந்தைகளுக்கான உடைகள்-2, பாய்-2, தண்ணீர் பாட்டில் என ஒரு குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் அடங்கிய 540 பெட்டகங்கள் ‘தி இந்து’ மழை வெள்ள நிவாரண முகாமுக்கு கொண்டு வந்து வழங்கினர். எஸ்.ஆர்.வி. கல்விக் குழுமங்களின் இணைச் செயலாளர் சத்திய மூர்த்தி, பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், ஞானமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாழ்த்துகள்

’தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம், மரியம் ராம், ’தி இந்து’ குழும இணைத் தலைவர் என்.முரளி, ‘தி இந்து’ குழும இயக்குநர்கள் ரமேஷ் ரெங்கராஜன், விஜயா அருண், பத்திரிகையாளர் சாய்நாத், ‘தி இந்து’ வாசக ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் ‘தி இந்து’ மழை வெள்ள நிவாரண முகாமின் பணிகளைப் பார்த்து, தன்னார்வலர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x