

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அசாம் பாஜக சட்டமன்றத் தலைவராகவும், அம்மாநில முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா. மறைந்த தருண் கோகாய், சர்பானந்த சோனோவால் இருவரின் ஆட்சிகளைத் தொடர்ந்து தலைமைப் பதவிக்கு வந்திருக்கிறார். அபாரமான அரசியல் சாதுர்யத்துடன் வெற்றிகளைத் தன்வசம் இழுத்திருக்கும் 52 வயது சர்மாவுக்கு, இது அவருடைய பரந்துபட்ட அரசியல் வாழ்க்கையின் உச்ச தருணமாகும். சோனோவாலுக்குப் பதிலாக சர்மாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது என்பது குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் போன்ற விஷயங்களில் பாஜகவுக்கு ஆபத்பாந்தவனாக சர்மா இருந்தார் என்பதால் மட்டுமல்ல; அசாமின் சுகாதார மற்றும் நிதி அமைச்சராக கரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக சமாளித்தார் என்பதற்காகவும்தான்.
குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் சர்மா. பயிற்சி பெற்ற வழக்கறிஞர். காட்டன் கல்லூரியின் பொதுச் செயலாளர், அனைத்து அசாம் மாணவர் சங்கம் என மாணவ அரசியலில் தீவிரம் காட்டியவர். 1990-களில் காங்கிரஸில் இணைந்தார். 2001-ல் அசாம் கண பரிஷத்தின் ப்ரிகு புகனைத் தோற்கடித்து, ஜாலூக்பாரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். அன்றிலிருந்து 2016 வரை காங்கிரஸ் சார்பாக ஜாலூக்பாரி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சர்மா, 2016-லிருந்து இன்று வரை பாஜகவுடன் பயணிக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகளில் அமைச்சராக இருந்திருக்கிறார். தருண் கோகாய் அரசில் செயலூக்கமிக்க பதவிக்கு உயர்ந்திருக்கிறார். அசாமில் 2011-ல் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கான முதன்மையான காரணம் சர்மாதான்.
இவ்வளவுக்குப் பிறகும், காங்கிரஸிலிருந்து சர்மா விலகியதற்குக் காரணம் என்னவென்றால் கோகாய்க்கும் சர்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான். கோகாய்க்கு அடுத்து அந்தப் பதவியில் தான் அமர வேண்டும் என்று சர்மா நினைத்திருந்தபோது, மக்களவை உறுப்பினரும் தன்னுடைய மகனுமான கௌரவ் கோகாய்க்கு அந்த இடத்தைத் தர கோகாய் திட்டமிட்டார். இதனால், கோகாய்க்கும் சர்மாவுக்கும் இடையிலான இடைவெளி நீண்டுகொண்டே போனது. காங்கிரஸ் தலைமையால் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யவும் முடியவில்லை; அதற்குத் தயாராகவும் இல்லை. எனவே, பாஜக பக்கம் தாவிவிட்டார் சர்மா. இதற்கும் சில மாதங்களுக்கு முன்புதான் லூயிஸ் பெர்கர் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி சர்மா மீது பாஜக தாக்குதல் நடத்தியிருந்தது.
காங்கிரஸுடன் இருந்த காலங்களில் தேர்தல் விஷயங்களில் சர்மா அசாத்திய தேர்ச்சி பெற்றிருந்ததாலும், அவருடைய அரசியல் புத்திகூர்மையாலும் பாஜக வளர்வதற்கு உதவினார். அசாமில் மட்டுமல்ல; வடகிழக்கு முழுவதிலுமே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பாலமாக இருந்தார் அவர். மிகச் சரியான நேரத்தில் போடோலாந்து மக்கள் முன்னணியுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியை சர்மா முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சியுடன் இணைந்தது என்பது இந்தத் தேர்தலில் மிக முக்கியமான வியூகமாக அமைந்தது.
சோனோவாலின் பதவிக் காலம் முழுவதும் இரண்டாம் இடத்தில் தொடர்ந்தது சர்மாவுக்கு ஒரு மனக்குறையாக இருந்தது என்பதை பாஜக தலைமை நன்றாகவே உணர்ந்திருந்தது. அதனால்தான், நடப்பு முதல்வரான சோனோவாலின் தலைமையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக மறுத்துவிட்டது. மாறாக, கூட்டுத் தலைமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்ற சர்மா, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவையும் பெற்றார்; இத்தனைக்கும் சோனோவால் மீது அன்பு கொண்டிருப்பவர் மோடி.
தி இந்து, தமிழில்: த.ராஜன்