Published : 11 May 2021 10:00 PM
Last Updated : 11 May 2021 10:00 PM

''எவ்வுயிரும் என்னுயிர் போல்'' - முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு: அனுபவப் பகிர்வு

‘எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை....
எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்” - பெரியார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கடந்த 18 மாதங்களாக கரோனா பேரூழிக்கால சிகிச்சை முறைகளைக் கட்டமைத்துள்ளனர். சில மாற்றங்களை மாநில சுகாதாரத் துறையே வழிகாட்டு நெறிமுறைகளை அமைத்துள்ளது.

கரோனா பேரிடர் காலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் களத்தில் நின்று பணிபுரிந்தவர்களின் அனுபவப் பாடங்களுக்கு இணையாக எந்த மருத்துவ நூல்களும் சொல்லித்தரப் போவதில்லை. இவர்கள் போன்று களத்தில் நின்று களமாடுபவர்களின் அனுபவக் குரல் அதிகாரத்தின் மேல்நிலையைச் சென்று அடைகின்றதா என்ற கேள்வி சாதாரண மக்களுக்கு ஏற்படுவதில்லை.

இவ்வகை குரல்களுக்குப் புதிய அரசு செவிசாய்க்கும்போது பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க ஒருங்கிணைந்த பேரிடர் துரித நடவடிக்கை அறை (War Room) தொடங்கப்பட்டது. மருத்துவமனையில் நிகழ்கால (Real-time)படுக்கை காலி இடங்கள் உடனுக்கு உடன் தெரிவதால், மருத்துவமனை தேடி காலம் கடத்தாமல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்ற வருட கோவிட்-1ஐ விட, தற்சமயம் ஏற்பட்டுள்ள கோவிட்-2 நிறைய சவால் விடுத்துள்ளது. சென்ற வருடம் கோவிட்-1ன் போது, கரோனா நோயாளிகளில் 10-20 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதென்றால், கோவிட்-2ல், 20 -30 சதவீத கரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. கோவிட்-1ன் போது வீட்டில் 5 பேர் இருந்தால் -இருவருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் கோவிட்-2வில் வீட்டில் உள்ள அனைவருமே பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் மருத்துவமனை நாடும் மக்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இருவகையான நிலை ஏற்படுகின்றது.

முதலாவது, வீட்டில் கரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இரண்டாவதாக மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரித்தும் உள்ளது. முதலாவது காரணியும், இரண்டாவது காரணியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எப்படி என்பதைப் பார்ப்போம்...

கோவிட்-1இன் போது , வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர். நோயாளிகளுக்கு தினம் ஒருமுறை உடலின் ஆக்சிஜன் செறிவு நிலையை (O2 Saturation) கண்காணித்தனர். ஏதேனும் நோய் அறிகுறி முற்றினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்போது உள்ள கோவிட் 2இல் இதேபோன்ற அணுகுமுறையில் சிறுமாறுதல் செய்தால், பல உயிர்களைக் காப்பாற்றலாம் .

வீட்டில் கரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களில் ஆக்சிஜன் செறிவு நிலையை தினமும் கண்காணிக்கும்போது - ஒன்று மற்றும் நான்காம் நாளில் எளிய ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் - நோயாளியின் உடலில் வைரஸின் தாக்கம் , செயல்பாட்டின் தீவிரம் அறிய முடிகின்றது. இதன் மூலம் திவிரமடையும் நோயின் தன்மைக்கேற்ப மருத்துவமனைக்கோ அல்லது கோவிட் கண்காணிப்பு மையத்திற்கோ அனுமதிக்கப்படலாம். எளிய இரத்தப் பரிசோதனையில் - இரத்த அணுக்களின் எண்ணிக்கை, ஈ.எஸ்.ஆர், சி.ஆர்.பி ( ESR & CRP), டீடைமர் (DDimer) இவை அனைத்தும் - நோயின் தன்மை தீவிரம் அடைதலைக் காட்டுகின்றன. வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நேராக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் நிலை, இந்த இரத்தப் பரிசோதனை முறையால் பெரிதும் குறைய வாய்ப்புள்ளது .

இரண்டாவது காரணியாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் சிகிச்சைக்காக பல்லாயிரம் பேர் அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகின்றது . இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்லாடியபோது தமிழகம் சமாளித்து வந்தது. பின்னர் படிப்படியாக பல ஆயிரம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை அருகே சென்று கொண்டிருக்கிறோம். இதிலும் சென்ற ஆண்டு போன்று கோவிட் 1இல் ஆக்சிஜன் செலுத்தும் முறையில் மாறுதல் கொண்டுவர வேண்டியுள்ளது!

மூச்சுக் காற்றிலிருந்து, ஆக்சிஜனைப் பிரித்து - உடலிற்கு வழங்கும் உறுப்பு, நமது நுரையீரல். அதில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணியச் செயல்பாட்டு அலகு - ஆல்வியோலை! கரோனாவின் அதீத பாதிப்பின்போது, நுரையீரலுக்கான இரத்த நாளங்களில் இரத்த உறைதலால் ஏற்படும் நுரையீரல் பாதிக்கப்பட்டு - அதன் செயல் அலகுகளான ஆல்வியோலை, செயல் திறன் இழக்கின்றன! இதனால் ஆக்சிஜனை உடல் உறுப்புகளுக்கு செறிவூட்ட முடியாத நிலையில் மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது - இதுவே உயிருக்கும் ஆபத்தாகி விடுகின்றது.

இதற்கான சிகிச்சைக்காக, “உயர் அழுத்த ஆக்சிஜன் கருவியின்“ (High flow Nasal Oxygen) மூலம் ஒரே நேரத்தில் 45 முதல் 60 லிட்டர் ஆக்சிஜன் நுரையீரலுக்குள் செலுத்தப்படுகின்றன. இதனால் பலர் பயன்பெற்றாலும் , நுரையீரலின் செயல் அலகு ஆல்வியோலை அதிஅழுத்த ஆக்சிஜனால் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

தற்சமயம் கோவிட்-2வின்போது, இக்கருவிகளின் பயன்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். செயற்கை சுவாசம் வென்டிலேட்டர் வழியாகவே 10 லிட்டர் ஆக்சிஜன் - தொடர் முன் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை (CPAP) செலுத்தும்போதும், ஆக்சிஜனேட்டர் வழியாக 10 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தும்போதும் - மேற்குறிப்பிட்ட உயர் அழுத்தக் கருவி போன்று, ஆறு மடங்கு அதிக ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும், நுரையீரல் பாதிப்பு இல்லாமலும் சிகிச்சை அளிக்க முடிகின்றது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு களத்தில் முன்நின்று , களப் பணியாளர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் அவசியம் . நோயாளிகள் இல்லாத படுக்கையில் ஆக்சிஜன் வெளிப்பாதையினை மூடுதல், கசிவுப்பாதையை மூடுதல், நோயாளி படுக்கையை விட்டுக் கழிவறைக்குச் செல்லும்போதும், உணவு உண்ணும் போதும் - தேவை இல்லா ஆக்சிஐன் வெளிப்பாதையை மூடுதல், முக்கியமாக நோயாளியின் உறவினர்களை உள்ளே அனுமதிக்க கட்டுப்பாடு அவசியம். இதுபோன்ற சிறு செயலும் -மற்றொரு உயிரினைக் காக்க உதவும்.

களமாடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை பல மாதங்களாய் - கத்தி மேல் நடப்பது போன்ற நிலை தொடர்கின்றது. மனதளவில் பாதிக்கப்பட்டாலும், உடல்நிலை பாதிப்பு அடைந்தாலும் - இவர்கள் சிறு புன்னகையுடனே களத்தில் நிற்கின்றனர். பல முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.

இதைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், ”எத்தனை பெரும் போரிலும், ஒரு கர்ப்பிணி இராணுவப் பெண் வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டு போரிட முடியாது . ஆனால் எட்டு மாத சிசுவை சுமந்துகொண்டு, மருத்துவர் சண்முகப்பிரியா உயிர்த் தியாகம் செய்திருக்கிறார். பேரூழிக் காலத்தின் பெருந்தியாகமென போற்றி வணங்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், சமூக அக்கறை கொண்ட, சமீபத்தில் திருமணமான இளம் மருத்துவர், மனம் நொந்து, இளைஞர்கள் கரோனாவால் உயிர் இழப்பதைத் தவிர்க்க இயலவில்லை என்று அழுகையுடன் பொது தளத்தில் பகிர்ந்து இருந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டது அறியாமல் கரோனா பணிகளை மேற்கொண்டார் - உடல் இயலாத நிலையில் கரோனா தொற்று உறுதியான நிலையில் என்னை அழைத்தபோது,”உடனே உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்ந்து கொள்!” என்றேன். அதற்கு அவர்,” அந்தப் படுக்கை வேறொருவரின் உயிரைக் காப்பாற்றும்!“ என்று கூறி வீட்டிலேயே இருந்துவிட்டார் .

இரவு 10 மணிக்கு குறுஞ்செய்தி, அனுப்பி இருந்தார், ‘அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலெயே நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’ என்று. அங்கு பணியில் இருந்த மருத்துவ நண்பர்களுக்கு , இளம் மருத்துவரை கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தேன். பின்னிரவு 2 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்,’தந்தை இல்லாத குடும்பத்தில் , என்னை நம்பி பலர் இருக்கின்றனர் - பயமாக உள்ளது!’என்று !!

முன்களப் பணியாளர்கள் பலர் இதுபோன்ற நிலையில்தான் பணி ஆற்றுகின்றனர். பேரூழிக் காலத்தின் மன அழுத்தத்தால், தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து மனதிற்கு இதமான ஊக்கமளிக்கக் கூடிய வார்த்தைகளையே எதிர்பார்க்கின்றனர் . உண்மையாக வேலை செய்பவர்களிடையே பாகுபாடு பார்த்து இன்னலுக்கு ஆளாகும் பல முன்களப் பணியாளர்கள், மனம் நொந்த நிலையில் வாழ்வைக் கழிக்கின்றனர். சக மனிதனை மனிதனாக எண்ணும் எண்ணம் சிறு வயதிலிருந்து தோன்றினாலன்றி , அதிகாரத்தினால் வராது. அது போன்றே தங்களை நம்பி வரும் ஏழை மக்களுக்கு முன்களப் பணியாளர்கள் பணியாற்றுவதும், முழுமுதற் கடமை. பல முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு , முதல் தலைமுறையின், சமூக நீதிக்கான வெற்றி !

“அறத்திற்கே அன்பு -சார்பென்ப அறியார்’’! சினம் , நகராற்றல் ( kinetic energy)கொண்டது! மேலிருந்து காட்டப் படும் சினமானது, கடைசியில் ஏழைகளின் தலையிலேயே விடியும் .

‘ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ... வெந்து தணிந்தது காடு !” - பாரதியின் பாடல் , இப்பேரூழிக்காலத்தில் கோபம் -நெருப்பைப் போல் பரவி அப்பாவி மக்களின் தலையிலேயே விடியும் !

“முன்களப் பணியாளர் என் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்’’ என்ற மருத்துவத்துறை அமைச்சரின் அறிவிப்பு - ஆறுதல் வார்த்தைகள் .

“ புகழுரை , பொய்யுரைகளைக் கேட்க விரும்பவில்லை ; அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும்’’ என்ற முதல்வரின் விடிவெள்ளி வார்த்தைகள் - முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கை துளிர்க்கின்றது !!

“கடந்து வந்தபின்பே கண்டு உணர்கிறோம் - நம்மைக் கலங்கடித்த காலமெல்லாம், கடுமையான காலம் அல்ல. நம் வாழ்வை வடிவமைத்த காலமென்று’’ - அந்தக் காலத்திற்காக காத்திருக்கும் முன்களப் பணியாளர்கள்!!

-மரு. திரு விடை .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x