கல்யாணம்: ஒரு காந்திய வாழ்வு!

கல்யாணம்: ஒரு காந்திய வாழ்வு!
Updated on
2 min read

கல்யாணம் என்ற ஆளுமை, எளிமையின் உருவம். அவர் காந்தியின் உயர்ந்த நோக்கங்களை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்துவந்தார். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார். அவரது உடைகளை அவரே துவைப்பார். தனக்குத் தானே முடி வெட்டிக்கொள்வார். தனது உணவைத் தானே சமைப்பார். பாத்திரங்களைத் தானே துலக்குவார். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு உணவளித்து அவர்களின் தட்டையும் அவரே சுத்தம் செய்வார். வீடு ஒரு கலைக்கூடம்போல இருக்கும். எந்த மூலையிலும் ஒரு தூசுகூட இல்லாமல் துடைப்பார்; வீடு என்பது அவருக்கு அவர் வாழும் தளத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல. வீட்டின் லிப்ட், படிக்கட்டு, பக்கச் சுவர்களையும் தூசிகளின்றி துடைப்பார். படிக்கட்டுகளைப் பெருக்குவார். வீட்டுக்கு வெளியே நடைபாதையையும் துடைப்பானால் பெருக்குவார். தன் வீட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான செடிகளை வளர்த்து அவற்றுக்கு ஒரு குழந்தைக்குப் பாலூட்டுவதைப் போல தண்ணீரை விடுவார். காய்ந்த செடி இலைகளை பொறுக்கி உரமாக்குவார்.

சிறு வயதிலிருந்தே காந்தியின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த கல்யாணம் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழில் ஆசிரியராக இருந்த காந்தியின் புதல்வரான தேவதாஸ் காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார். அப்போது காந்தி சிறையில் இருந்தார்; விடுதலையான காந்தியைச் சந்தித்த பிறகான சில மாதங்களிலேயே காந்தியோடு பயணிக்கலானார்.

காந்தியின் தனிப்பட்ட உதவியாளராக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து காந்திக்கு வரும் கடிதங்களை மொழிவாரியாகத் தொகுத்து காந்தியிடம் காட்டி, அதற்குப் பதிலும் அனுப்புவார். வரும் கடிதங்களின் வெற்றுப் பகுதிகளை விரயம் செய்ய மாட்டார். அதில் காந்தி கூறும் செய்திகளை தட்டச்சு செய்து கோப்பில் சேர்ப்பார். கல்யாணத்தின் அம்மா தயாரித்த தமிழ்நாட்டு உணவான இட்லியை காந்தி பல தருணங்களில் சுவைத்திருக்கிறார்.

காந்தி இறப்பதற்கு முந்தைய நான்கு வருடங்களில் அவரது தனிச் செயலராக பணியாற்றிய கல்யாணம், காந்தி சுடப்பட்டபோது அவரது வெகு அருகில் சில அங்குல தூரத்தில் நின்றவர். காந்தி மரணித்தபோது ‘ஹே ராம்’ என்று சொல்லவில்லை என்று கல்யாணம் கூறியது சர்ச்சையானது. ஒரு கூர்மதியான பத்திரிகையாளரின் ஊகத்திலான செய்தி அது என்றார் கல்யாணம்.

காந்தி இறந்த பின், பஞ்சாபில் இயங்கிய கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் குழுவில் எட்வினா மவுன்ட் பேட்டனோடு பணியாற்றினார் கல்யாணம். புது டெல்லியிலும் எட்வினா மவுன்ட் பேட்டனோடு சேர்ந்து அகதிகள் நிவாரணப் பணியிலும் அவர்களின் மறுவாழ்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பணியிலும் ஈடுபட்டார். அதன் பின், ரிஷிகேசத்தில் மீராபென் நடத்திய பசுலோக் ஆஸ்ரமத்தில் ஒரு வருடம் பணியாற்றினார். தொடர்ந்து சர்வோதய இயக்கத்தில் வினோபாவேயுடனும், ஜெயபிரகாஷ் நாராயணுடனும், பின்னர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியிலும் பணியாற்றினார். நேரு பிரதமராக இருந்தபோதுகூட அவருக்கு உதவியாளராகச் சில நாட்கள் பணியாற்றியிருக்கிறார். நேருவின் செயலர் எம்.ஓ.மத்தாயின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அங்கிருந்து விலகினார்.

கல்யாணம் 1922 ஆகஸ்ட் 15 அன்று சிம்லாவில் பிறந்தவர். டெல்லியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி எனப் பன்மொழிகள் அறிந்தவர். அவரது மனைவி சரஸ்வதி 30 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். மாலினி, நளினி என இரண்டு புதல்விகள் இத்தம்பதிக்கு உள்ளனர். இன்னும் சில மாதங்களில் நூறு வயதை எட்டவிருந்த கல்யாணம் தன்னுடைய உற்சாகத்துக்கான காரணமாக ஓயாத உடல் உழைப்பயும் எளிய உணவையும்தான் குறிப்பிடுவார். தீவிர சிக்கனத்தைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த கல்யாணம் பல லட்சங்களை ஏழைகளுக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் தானமாக வழங்கியவர். பூரண வாழ்வு என்று சொல்லலாம்; நினைவில் நிலைத்திருப்பார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in