Published : 05 May 2021 03:13 am

Updated : 05 May 2021 03:56 am

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:56 AM

மோடி ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல!- டெரெக் ஓ’பிரையன் பேட்டி

derek-o-brien-interview

வங்கத்தில் 213 இடங்களில் 47.9% வாக்கு வீதத்துடன் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார் மம்தா. சென்ற ஆண்டை ஒப்பிட வெற்றி பெற்ற இடங்களிலும் வாக்கு வீதத்திலும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஏறுமுகமே. இதைக் கடந்த 10 ஆண்டுகளாக அங்கே மம்தா நடத்திய மக்கள்நல அரசுக்கான வெற்றி என்று குறிப்பிடுகிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ’பிரையன். அவருடனான உரையாடலிலிருந்து…

திரிணமூல் காங்கிரஸின் வெற்றிக்குச் சாதகமாக என்னென்ன காரணிகள் அமைந்தன?


திரிணமூல் காங்கிரஸும் எங்கள் தளபதி மம்தா பானர்ஜியும் வங்க மக்களிடம் சொன்னவையெல்லாம் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஆற்றிய பணிகளின் அடிப்படையிலும் எவ்வளவு பேர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற அடிப்படையிலும் எங்களை மதிப்பிடுங்கள் என்றோம். பிறகு, எங்களின் எதிர்த் தரப்பைப் பாருங்கள், கடந்த 6-7 ஆண்டுகளாக அவர்களால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பாருங்கள், எல்லாம் வெற்றுக்கூச்சலும் பொய்களும்தான். பாஜகவின் ஒவ்வொரு விளம்பரப் பலகையிலும் துண்டுப் பிரசுரத்திலும் தொலைக்காட்சி விளம்பரத்திலும் மோடியின் முகம்தான். மோடியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் எதிராக மம்தா பெற்ற வெற்றி இது.

கடைசி மூன்று கட்டத் தேர்தல்களின்போது கரோனா இரண்டாவது அலையின் தாக்குதல் நிகழ்ந்தது. அந்தத் தருணத்தில் திரிணமூல் காங்கிரஸின் செயல்பாடு அதிகரித்ததைக் கண்டோம். இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

இல்லை. தேர்தல் முடிவுகளைக் கவனமாகப் பார்த்தீர்கள் என்றால், எல்லாக் கட்டங்களிலும் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் துவம்சம் செய்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் சுலபமாக வெற்றி பெறலாம் என்று தேர்தலில் போட்டியிட்ட பாஜக எம்பிக்களில் கிட்டத்தட்ட அனைவரும் தோல்வியடைந்திருக்கிறார்கள். பாஜகவுக்கு உதவும் வகையில் தேர்தல் அட்டவணையை எட்டு கட்டங்களாகப் பிரித்துத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் பெருந்தொற்றைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. பாஜகவுக்கு உதவுவதற்காக அவர்கள் விதிமுறைகளை வளைத்தனர். எடுத்துக்காட்டாக, வாக்குச்சாவடி முகவர் அந்த வாக்குச்சாவடி இருக்கும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பாஜகவுக்கு அப்படியான அமைப்பு பலம் இல்லாததால் விதிமுறையைத் தளர்த்தினார்கள். வாக்குச்சாவடிகளில் மத்தியப் படைகளை இறக்கினார்கள். காவல் துறை தலைமை இயக்குநர், கூடுதல் இயக்குநர் போன்ற முக்கியமான காவல் துறை அதிகாரிகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றினார்கள். தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாஜகவின் பணியாளர்கள்போல் செயல்பட்டார்கள்.

பாஜகவுக்கு ஆதரவாக, பாரபட்சமான முறையில் தேர்தல் ஆணையம் நடந்துகொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இப்போது நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இது தொடர்பாக என்ன செய்யப்போகிறீர்கள்?

தேர்தல் ஆணையம் பாரபட்சமான முறையிலெல்லாம் நடந்துகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமே பாஜகவின் ஒரு பிரிவுதான். பாரபட்சம் என்பது மிகவும் மென்மையான வார்த்தை. எல்லா அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் என்ற அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். ஓய்வுபெற்ற மூன்று அதிகாரிகள் சேர்ந்துகொண்டு இந்தியாவின் தேர்தல்களையெல்லாம் இந்த முறையில் நடத்த நாம் அனுமதிக்கலாகாது. நமது ஜனநாயகத்துக்காக இதைச் செய்தாக வேண்டும். இல்லையெனில், இது நம் குடியரசுக்கு மிகவும் ஆபத்தானது.

எதிர்க்கட்சிகள் அணிசேர்வதற்கு மம்தாதான் முக்கியப் பொறுப்பு வகிப்பாரா?

அப்படியொன்றும் எங்களை அறிவித்துக்கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு நன்றாக உழைத்தால் தன்னம்பிக்கை கிடைக்கும் என்ற எண்ணமும், மோடி-ஷாவின் பாஜகவை வெல்ல முடியும் என்ற எண்ணமும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம். மோடி-ஷா ஒன்றும் தோற்கடிக்கவே முடியாதவர்கள் அல்ல. சொல்லப்போனால், 2011-ல் எங்களுக்குக் கிடைத்த வெற்றியைவிட இது பெரியது. மேலும், பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது மம்தாதான். அவர் ஜிஎஸ்டிக்குத் தன் இசைவைத் தெரிவித்தார்; ஆனால், தொடக்கத்திலிருந்தே அதன் அமலாக்கம் தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அவரிடம் நம்பகத்தன்மையும் சீரொழுங்கும் இருந்தன. ஒரு பிராந்தியத்தில் வலுவாக இருக்கும் தேசியக் கட்சி நாங்கள்.

இந்தத் தேர்தல் தேசிய அளவில் எப்படிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது?

இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல், இந்தத் தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவத்தைக் கனகச்சிதமாக உணர்த்துகிறது. அவர் இப்படி அனுப்பினார்: “புறப்படுக, இந்தத் தேர்தலை ‘உங்களுக்காக’ வெல்லுங்கள். புறப்படுக, இந்தத் தேர்தலை ‘வங்கத்துக்காக’ வெல்லுங்கள். புறப்படுக, இந்தத் தேர்தலை ‘நம் அனைவருக்காகவும்’ வெல்லுங்கள்.’

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை


டெரெக் ஓ’பிரையன் பேட்டிடெரெக் ஓ’பிரையன்Derek o brienDerek o brien interview

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x