Published : 02 Dec 2015 10:18 AM
Last Updated : 02 Dec 2015 10:18 AM

நீதிமன்றத்துக்கு உள்ளே... சட்டத்துக்கு வெளியே!

சட்டத் துறைக்குள் அறமும் நம்பகத்தன்மையும் நிலைநாட்டப்பட வேண்டும்

போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதலுக்கு 2009 பிப்ரவரி 19 அன்று சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம் மவுன சாட்சியாக நின்றது. 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல்நிலையம் முழுவதுமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும் தொடர்ந்து இரு வாரங்களாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கண்டனக்குரல் எழுப்பிய சம்பவத்தின் தொடர்ச்சிதான் இது.

வழக்கறிஞர்களின் இந்த ஆர்ப்பாட்டம் அன்றைய திமுக ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடியை உண்டுபண்ணியது. பிரச்சினையை முழுவதுமாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். கிருஷ்ணா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தப் பிரச்சினை தீவிரமடைய முக்கியக் காரணம், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் அடக்க முயன்றதே என கிருஷ்ணா குழு அறிவித்தது. அதே நேரத்தில், சிக்கலை முடுக்கிவிட்டதே வழக்கறிஞர்கள்தான் என்றும் தெரிவித்தது.

2009-ல் வெளியான இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட இன்னும் சில விஷயங்கள் கவனத்துக்குரியவை. “நீதிமன்றத்திலேயே வேலை பார்ப்பதால் எதைச் செய்தாலும் சட்டச் சிக்கலுக்கு ஆளாக மாட்டோம் என்னும் நினைப்பில் இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்” என்றும், “வழக்கறிஞர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்தப் போதுமான நடவடிக்கைகளை பார் கவுன்சில் எடுக்காததால், உச்ச நீதிமன்றம் தன் அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நெறிமுறைகளைப் பட்டியலிட வேண்டும்” என்றும் நீதிபதி கிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார். சட்டத் துறையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, வழக்கறிஞர் சட்டத்தையே திருத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப் பட்டது.

கிருஷ்ணா குழு அறிக்கை வெளிவந்து இத்தனை காலமாகியும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், அதில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாசகமும் தீர்க்கதரிசனம் என்பதைத் தமிழக அனுபவங்கள் தொடர்ந்து நிரூபிக்கின்றன. வேலை நாட்களில் பல நாட்களுக்கு ‘கல்தா’ கொடுப்பதால் எக்கச்சக்கமான வழக்குகள் நிலுவையிலேயே இருக்கின்றன.

2010-ல் ‘தி இந்து’ (ஆங்கிலத்தில்) பிரசுரமான ஒரு அறிக்கையில் 2009-ல் மட்டும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 32 நாட்கள், கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 56 நாட்கள் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 44 நாட்கள் வேலைக்கு வர மறுப்புத் தெரிவித்தனர் என அதிகாரபூர்வமான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 70 நாட்கள் வேலைக்கு வராததால் வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சக வழக்கறிஞர்களிடம் செப்டம்பர் 28-அன்று கேட்டுக்கொண்டனர்.

பேர்போன தமிழக வழக்கு

அரசியலையும் சட்டத்தையும் ஒன்றோடு ஒன்று கலப்பதன் விபரீத விளைவுதான் இது என மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிமுக, திமுக, பாமக போன்ற கட்சிகளைப் பின்புலமாகக் கொண்ட வழக்கறிஞர்கள் பலர் தங்கள் அரசியல் நோக்கங்களை அப்படியே சட்டத் துறையிலும் பிரதிபலிக்கின்றனர். இதனால் சட்ட நிபுணர்களின் சுதந்திரம், வழக்கறிஞர்களின் பணிச் சூழல், இன்னும் பல உண்மையான பிரச்சினைகளுக்காகப் போராடுவதற்கு பதிலாகக் கட்சிகளில் யார் பெரியவன் என்னும் போட்டா போட்டியில் இவை அரங்கேறுகின்றன.

“இம்மாதிரியான போராட்டங்கள் ஜனநாயக முறைப்படி நடப்பதே இல்லை. ‘வெளிநடப்பு செய்வோம்’ எனச் சங்கத் தலைவர் அறிவித்துவிட்டால், அதற்கு யாரும் மறுப்பே சொல்ல முடியாது. எதிர்த்தால் அவர்களுக்கும் எதிராக ‘ஒழிக’ கோஷம் எழும்” என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. அருண் கூறுகிறார்.

வழக்கறிஞர்களின் தரம்

சட்டத் துறைக்குள் அறமும் நம்பகத்தன்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கம். “இரண்டு விதமான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்னும் கருத்து பொதுமக்களிடையே நிலவுகிறது. தன் கட்சிக்காரருக்காகச் சரியாக வழக்காடும் வழக்கறிஞர்கள் ஒரு தரப்பினர். இன்னொன்று, தங்கள் பதவியைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான பல விஷயங்களைச் சாதித்துக்கொள்ளும் வழக்கறிஞர்கள்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.

சட்டத் துறையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலும் விதிகளை மீறும் வழக்கறிஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பிலும் தற்போது இருப்பது இந்திய பார் கவுன்சில்தான். அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து அதனிடம் இந்திய பார் கவுன்சிலின் பொறுப்புகளை ஒப்படைக்கலாமே என அக்டோபர் 6-ல் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

கல்வியாளர்கள், சட்ட நிபுணர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றது நீதிமன்றம். அவர்களிடம் இந்திய பார் கவுன்சிலின் பொறுப்புகளை நிரந்தரமாக ஒப்படைத்துவிடலாம். குறைந்தபட்சம் வழக்கறிஞர்கள் சட்டம் திருத்தப்படும்வரையாவது இந்தக் குழு செயல்படலாம் என்றது. மேலும், முதல் கட்ட நடவடிக்கையாக, மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்பை நிறுத்த வேண்டும். ஐந்து ஆண்டு சட்டப் பட்டப்படிப்பை மட்டுமே இனி தொடர வேண்டும். அப்போதுதான் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புக்கு நிகரான படிப்பாகச் சட்டம் மாறும் என்றது.

இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் உரை இங்கு குறிப்பிடத்தக்கது. “இந்தியாவில் 30% வழக்கறிஞர்கள் போலி பட்டம் வைத்திருக்கிறார்கள். இங்கு வேலை நிறுத்தம் என்பது தொடர் நிகழ்வாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே அதுதான்” என அவர் கூறினார். இந்திய வழக்கறிஞர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 17 லட்சம். வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்துக்குப் பிரசித்திபெற்ற இடமாகத் தமிழகம் இருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தத் தேசத்துக்கும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பலாம். ஏனெனில், இந்தியா முழுக்க எதாவதொரு இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

நிலைநாட்ட வேண்டிய உத்தரவு

மொத்தத்தில், வழக்கறிஞர்களின் இத்தகைய நடவடிக்கையால் அதிகப்படியாகப் பாதிக்கப்படுவது தங்கள் வழக்குகளின் தீர்ப்புக்காகக் காத்துக்கிடக்கும் பொதுமக்களே. வழக்கறிஞர்களைப் போல வேறெந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இப்படி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதில்லை. இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய பார் கவுன்சிலுக்கு இல்லை என்பதையே இது காட்டுக்கிறது.

வழக்கறிஞர்கள் அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வது ஏற்புடையதா என்னும் விவாதம் 2005-ல் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதோ, வேலைநிறுத்தம் செய்வதோ வக்கீல் தொழிலுக்கான லட்சணமல்ல என்றது நீதிமன்றம். கூடவே, நிறைய அறிவுரைகளையும் கூறியது. அனால், இன்றுவரை அவற்றை நடைமுறைப்படுத்த பார் கவுன்சிலோ உச்ச நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அதற்கான காலம் இப்போது வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா © ‘தி இந்து’ (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x