Published : 03 May 2021 03:15 am

Updated : 03 May 2021 05:17 am

 

Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 05:17 AM

மு.க.ஸ்டாலின்: நம்பிக்கைகளின் நாயகர்

mk-stalin

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் தாஜ்மஹாலின் பின்னாலிருந்து குறுகலாய் மெலிந்தோடும் யமுனையைப் பார்த்தபடி நானும் நண்பர் தாமரை செந்தில்குமாரும் நின்றிருந்தோம். தொலைவில் இருந்த ஆக்ரா கோட்டையைக் காட்டி, ஷாஜஹானை ஔரங்கசீப் சிறையெடுத்த வரலாற்றை இருவரும் பேசலானபோது, இயல்பாக தமிழக அரசியல் அந்த உரையாடலுக்குள் நுழைந்தது. “முதல்வராக கருணாநிதி இருந்த காலகட்டத்திலேயே கட்சித் தலைமை அல்லது ஆட்சித் தலைமை இரண்டில் ஒன்றைத் தன்வசம் கேட்டு ஸ்டாலின் பெற்றிருக்கலாம்; ஏன் அப்படிச் செய்யவில்லை?” என்றார் நண்பர். கட்சியில் கணிசமானோர் ஸ்டாலினை ஆதரிப்பவர்களாக அன்றைக்கே இருந்தனர். பொதுவெளியிலும் அறிவுஜீவிகள் பலருமே அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி எழுதினர். ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தால் அதைச் சாதித்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஒரு முதல்வருக்கான தகுதியை ஸ்டாலின் அப்போதே நிரூபித்துக்காட்டியிருந்தார். கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக, சென்னை மாநகரத்தின் மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக என்று அவர் ஏற்ற பொறுப்புகளையெல்லாம் சிறப்பாக நிர்வகித்துப் பாராட்டுகளைப் பெற்றவர் அவர். எனினும், தலைவருமான தந்தையிடம் எந்தப் பதவிகளையும் அவர் வலியுறுத்திப் பெற்றதில்லை; அவரே வழங்கட்டும் என்று வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார். கட்சியில் தன்னையொத்த ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு அவரளித்த மதிப்பாகவே இந்தக் காத்திருப்பையும், ஒரு தலைமுறை மாற்றத்துக்கான சரியான தருணத்துக்காகவுமே அவர் காத்திருந்ததாக இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.


கருணாநிதி தான் வாழும் காலத்திலேயே முதல்வர் பொறுப்பை ஸ்டாலினுக்கு அளித்திருந்தாலும்கூட அதற்கு இத்தனை சிறப்புகள் சேர்ந்திருக்கப்போவதில்லை. அவரது மறைவுக்குப் பிறகு கட்சியை ஒருங்கிணைத்து, அதைத் திறம்பட வழிநடத்தி, தன்னந்தனியராக இந்த வெற்றியை ஸ்டாலின் வென்றெடுத்திருக்கிறார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்ட தொடர் பயணங்கள் மக்களிடம் பெரும் மன எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் அரசைக் குறைகூறும் எதிர்க்கட்சியாக இல்லாமல் தங்களால் இயன்ற உதவிகளைப் பொதுமக்களுக்குச் செய்ய முன்வந்த கட்சியாகவும் திமுக நினைவுகூரப்படும்.

முள் மகுடம்

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இளம் வயதிலேயே முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டாலின் ஏறக்குறைய அரை நூற்றாண்டு பொது வாழ்க்கைக்குப் பிறகே அப்படியொரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். கருணாநிதி முதல்வரான பிறகு கட்சிக்குள்ளான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றால், உட்கட்சிப் பூசல்களை வென்றெடுத்த பிறகே ஜெயலலிதாவால் முதல்வராக முடிந்தது. ஸ்டாலினும் உட்கட்சிப் பூசல்களை எதிர்கொள்ளாமல் இல்லை. ஆனால், அவரது சுட்டுவிரலுக்கு இன்று திமுக கட்டுப்பட்டிருக்கிறது. அதிகாரத்தால் அல்ல, அன்பாலேயே அவர் அதைச் சாதித்துக்காட்டியிருக்கிறார். தந்தையின் காலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், தனது சமகாலத்தவர்கள், உதயநிதியின் வயதொத்த இளைஞர்கள் என்று மூன்று தலைமுறைகளை இணைக்கும் தலைவராக அவர் இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு மட்டுமல்ல, இளைஞர்களான மருத்துவர் எழிலனுக்கும் வழக்கறிஞர் பரந்தாமனுக்கும்கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாகத் தினந்தோறும் பல நூறு பேரைச் சந்தித்த வண்ணம் இருக்கிறார். யாரிடமும் அவர் சுடுசொல் வீசியதாகத் தகவல்கள் வந்ததில்லை.

ஒன்றிய அரசில் வீற்றிருக்கும் கட்சி, எதிர்க் கருத்தியலைக் கொண்டது என்பது ஒருபுறமிருக்க, மாநிலங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. மாநிலத்தின் நிதிநிலையோ கடன்களுக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் சூறாவளியாகச் சுழன்றுவரும் பெருந்தொற்று. இத்தகு சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கு முன்னே காத்திருக்கும் சவால்கள் கொஞ்சநஞ்சம் இல்லை.

ஆயினும் இந்தச் சவால்களை எல்லாம் அவர் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்ற நம்பிக்கையுடனே தமிழக மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தின் இந்தப் பிரச்சினைகளுக்கு அவருக்கு உதவுவதற்கு மூத்த அதிகாரிகள் மட்டுமின்றி பொருளியல் உட்பட ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற தமிழக அறிஞர்களை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காலம் கருதி காத்திருத்தல்

அரசு நிர்வாகத்துக்கு வெளியே தமிழகத்தின் அரசியல் தலைவர் என்ற நிலையிலும் ஸ்டாலினுக்குப் பெரும் பொறுப்புகள் காத்திருக்கின்றன. பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைக் குறிப்பிடும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது திராவிட இயக்கம். பொதுவெளியில் சாதி குறித்துப் பேசுவதையே இழிவாக எண்ணும் எண்ணத்தையும் வளர்த்தெடுத்தது. ஆனால், இன்று தேர்தல் அரசியல் வெற்றிக்கான குறுக்குவழிமுறைகள் தமிழகத்தைச் சாதிவாரியாகப் பிரித்துவைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அண்ணா தொடங்கி ஜெயலலிதா வரையில் தமிழகத்தின் முதல்வர்கள் அனைவரும் வகுப்புவாரி உரிமைக்காக மட்டுமே சாதியைப் பற்றி எழுதவோ பேசவோ செய்தார்கள். ஆனால், இன்று வெளிப்படையாக அந்த வேறுபாடுகள் தேர்தல் கணக்கீடுகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தை இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லும் இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமையும் திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவர் என்ற வகையில் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

முதல்வராக மட்டுமின்றி, ஒரு லட்சிய பிம்பமாகவும் ஸ்டாலினிடம் தமிழகம் எவ்வளவோ நம்பிக்கைகளை வைத்திருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் ஸ்டாலின் ஒளியாகக் கனன்றுகொண்டிருக்கிறார். குடியுரிமைப் பணித் தேர்வில் தனது கடைசி முயற்சிக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் என் இன்னொரு நண்பனிடம் தேர்தலுக்கு முன்பு தொகுதி நிலவரங்களைக் கேட்டறிவதற்காகப் பேசினேன். கட்சிச் சார்புகளிலிருந்து கவனமாக விலகி நிற்பவன் அவன். ‘ஸ்டாலின்தான் வர வேண்டும்’ என்றான் திடமான குரலில். ‘எந்தவொரு உழைப்பும் காத்திருப்பும் வீணாகக் கூடாது!’ என்றான் சற்றே கலங்கிய குரலுடன். ஸ்டாலினின் வெற்றி அவர் ஒருவரின் வெற்றியோ அல்லது அவரது கட்சியின் வெற்றியோ மட்டுமல்ல, எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும்கூட.

தமிழகத்தை இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமையும் திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவர் என்ற வகையில் ஸ்டாலினுக்கு இருக்கிறது!


மு.க.ஸ்டாலின்Mk stalinஸ்டாலின்நம்பிக்கைகளின் நாயகர்திமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x