Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

முதல்வர் 11: பி.வி.ராஜமன்னாரும் ஆர்.எஸ்.சர்க்காரியாவும்

புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஒரு மாநில முதல்வரின் டெல்லிப் பயணம் என்பது மரியாதை நிமித்தமான ஓர் சம்பிரதாயமாக முடிந்துவிடக்கூடியது. மு.கருணாநிதி அத்தகைய ஒரு பயணத்தை இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றிவிட்டது வியப்பானது. டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியபடி 1969-ம் ஆண்டிலேயே ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக தமிழக அரசின் சார்பில் ஒரு குழுவை அவர் நியமித்தார். பி.வி.ராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழு தனது அறிக்கையை 1971-ல் அளித்தது.

மாநில அரசின் அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகள் எழும்போதெல்லாம் ராஜமன்னார் குழுவின் அறிக்கை இன்றளவும் மேற்கோள் காட்டப்படுகிறது. இத்தகைய ஒரு குழுவின் அவசியத்தைப் பற்றி அண்ணா 1967-ல் டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பிலும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திலும் வலியுறுத்தியிருந்தார் எனினும், கருணாநிதியால்தான் அது செயல்வடிவம் கண்டது. உலகப் புகழ்பெற்ற சட்ட அறிஞர்களின் கருத்துகள், நீதிமன்றத் தீர்ப்புகளோடு அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைக் கட்டுரைகள், செய்திக் குறிப்புகள் வரையில் ராஜமன்னார் குழு அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பது அக்குழுவின் கடும் உழைப்பை எடுத்துக்காட்டுகிறது. சட்டமியற்றும் அதிகாரம், நிதியுறவுகள், ஆளுநர், நெருக்கடிநிலை வகையுரைகள், வர்த்தகமும் வாணிகமும் உள்ளிட்ட 21 தலைப்புகளில் அறிக்கை அமைந்திருந்தது.

இன்றைய பொருத்தப்பாடு

மையத் திட்டமிடலும் திட்டக் குழுவும் தொடர்பான அத்தியாயம் இன்று பொருத்தம் இழந்துவிட்டது. மாநிலங்களிடை உறவு மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை நிறைவேற்றப்பட்டுவிட்டது. சட்டமன்றத்தைக் கூட்டியே பெரும்பான்மையைச் சோதிக்க வேண்டும் என்ற பரிந்துரை எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பால் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. தேசிய நெருக்கடிநிலை அறிவிக்கப்படுவதற்கான ‘உள்நாட்டு அமைதியின்மை’ என்ற வரையறை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை 44-வது திருத்தத்தால் சரிசெய்யப்பட்டுவிட்டது. என்றாலும், பெருமளவிலான பரிந்துரைகளுக்கான தேவை இன்றளவும் தொடரவே செய்கிறது.

மக்கள்தொகை எவ்வளவு இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநிலங்களவையில் சமமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற பரிந்துரையைச் செயற்படுத்த வேண்டும் எனில், தற்போதுள்ள மாநிலங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரத்தை மாநில சட்டமன்றங்களின் வசமே ஒப்படைப்பது என்பன போன்ற பரிந்துரைகள் தேர்தல் நடைமுறையில் தற்போதுள்ள குறைந்தபட்ச நம்பகத்தன்மையைக் குலைத்துவிடவும் கூடும்.

மக்கள் மன்றம்

ராஜமன்னார் குழுவுக்கு முன்பே, 1966-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமரானதை அடுத்து ஹனுமந்தையா அந்த ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதிகாரப் பங்கீடு குறித்த அவரது பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜமன்னார் குழுவின் அறிக்கையும் ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் முன்வைக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் தன்னாட்சிக் குரலைச் சட்டபூர்வமான வழியில் தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே அது கருதப்பட்டது. அறிக்கையிலும் சரி, அது குறித்த சட்டமன்ற விவாதங்களிலும் சரி, தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியவாறுதான் மாநிலங்களுக்கான உரிமைகளைக் கோர வேண்டியிருந்தது.

சட்டமன்றத்திலும் மேலவையிலும் தன்னாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதல்வர் கருணாநிதி, மாநிலத் தன்னாட்சிக்காகச் சிறைசெல்லவும் தயாராக இருக்கிறேன் என்றார். சட்டமன்றத்திலும் சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அன்று மாலையே மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டியிருந்தது. சட்டமன்றங்களைக் காட்டிலும் மக்கள் மன்றம்தான் கடைசியில் எல்லாவற்றையும் முடிவுசெய்கிறது. ‘நாளைக்கே தி.மு.கழகத்தைப் பார்த்து, நீ மாநில சுயாட்சி கேட்கிறாய், ஆகவே, உன் அரசாங்கத்தைக் கலைக்கிறேன் என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால், அதைவிட என்னுடைய வாழ்க்கையிலே புனிதமான சரித்திரச் சம்பவம் வேறு எதுவுமே இருக்க முடியாது’ என்று பேசினார் கருணாநிதி. ஒன்றிய அரசு அந்த வாய்ப்பையும் அடுத்த சில ஆண்டுகளில் அவருக்கு வழங்கியது. எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி.யை ராஜாஜி பின்னின்று ஆதரித்தார் என்றால், தன்னாட்சித் தீர்மானம் மீதான முன்னெடுப்புகளில் ம.பொ.சி.யை முன்னால் நிறுத்தினார் கருணாநிதி. தன்னாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் ம.பொ.சி. முன்மொழிந்தபோது, ராஜமன்னார் குழுவைக் காரணம் காட்டி அத்தீர்மானத்தைத் திரும்பப்பெற வைத்ததெல்லாம் கருணாநிதியின் திரைக்கதை வல்லமையாகவும் இருக்கக்கூடும்.

ஜெயலலிதாவின் முழக்கம்

1983-ல் ஒன்றிய அரசு நியமித்த சர்க்காரியா தலைமையிலான ஆணையம், ஐந்து வருட ஆய்வுக்குப் பிறகு 1988-ல் தனது அறிக்கையை ஏறக்குறைய 1,600 பக்க அளவில் அளித்தது. சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிப்பதற்காக 2001-ல் புது டெல்லியில் கூட்டப்பட்ட மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘தேச ஒற்றுமைக்குக் குந்தகம் நேரும் என்ற அச்சம் இனிமேலும் தேவையில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டினார். எழுபதுக்கும் இரண்டாயிரத்துக்கும் இடைப்பட்ட காலமாற்றத்தின் வெளிப்பாடு அது. அண்ணாவின் மாநிலங்களவை உரைகளை மேற்கோள்காட்டி ஜெயலலிதா ஆற்றிய உரை, தமிழகத்தின் தன்னாட்சிக் குரல் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டெல்லியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்திருந்தது.

எஞ்சிய அதிகாரங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என்ற சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரையை மறுத்துப் பேசிய ஜெயலலிதா, அவை மாநில அரசிடமே விடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுப் பட்டியலில் மாநிலங்களின் கருத்துகளே தீவிரமானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. இவ்விஷயத்தில் தமிழ்நாடு அரசின் முந்தைய கருத்துகள் தற்போது மாறுதலுக்கு உள்ளாகிவிட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாநிலங்களில் சட்ட மேலவையை உருவாக்குவதும் கலைப்பதும் மாநிலங்களின் தனிப்பட்ட அதிகாரமாகவும் அவற்றில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்றும் கூறினார். ஆளுநர் பதவியின் தேவை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும், தொடர வேண்டும் என்று மத்திய அரசு கருதினால் மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்தே ஆளுநரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும், மாநில சட்டமன்றம் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே குடியரசுத் தலைவர் ஆளுநரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா அன்று டெல்லியில் ஆற்றிய உரை, முன்பு சர்க்காரியா ஆணையத்தின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில்களைக் காட்டிலும் கூர்மை கொண்டவையாக இருந்தன.

பல்கலைக்கழக வேந்தர்

மாநிலங்களிடை மன்றத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுப் பேசிய விஷயங்களில் மற்றொன்று, பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநரின் அதிகாரம் பற்றியது. ‘ஆளுநர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும்போது, அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும், ஆளுநருக்கு இப்பிரச்சினையில் எந்தத் தனி அதிகாரத்தையும் அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை’ என்றார் ஜெயலலிதா. ராஜமன்னார் குழுவின் அறிக்கையைப் போலவே சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடவில்லை. உடனடியாக அப்படி நடந்துவிடக் கூடும் என்றும் எதிர்பார்ப்பதற்குமில்லை. என்றாலும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான வழக்குகளில் அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் இன்றும் நீதிமன்றங்களால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பில் சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.

2000-ல் வெங்கடாசலய்யா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஆணையம், 2005-ல் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு, 2007-ல் மதன்மோகன் பூஞ்சி தலைமையிலான குழு என்று ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளைக் குறித்து ஆணையங்களும் குழுக்களும் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுவருகின்றன. அவற்றின் விரிவான அறிக்கைகள் மாநிலங்களிடை மன்றத்தின் இணையதளத்தில் வாசிக்கவும் கிடைக்கின்றன. பரிந்துரைகள் பரிசீலிக்கப்படுமா என்பதற்குத்தான் பதிலில்லை.

- செல்வ புவியரசன்

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x