Published : 08 Dec 2015 08:49 AM
Last Updated : 08 Dec 2015 08:49 AM

களத்தில் தி இந்து: ஸ்டெபி.. உன்னால் உலகம் உயிர்ப்போடு இருக்கிறது!

உதவும் கரங்கள் ஒன்று சேர்கின்றன

*

‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாம் நெகிழ்ச்சி...

சென்னையில் ‘தி இந்து’வின் வெள்ள நிவாரண முகாமில் அந்த இளைஞரை பார்த்தபோது அவருக்கு நம் ஊர் முகம்போல தெரியவில்லை. லேசான வடக்கத்தி சாயல். ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். லாரியில் இருந்து மூட்டைகளை முதுகில் சுமந்து வந்து அடுக்குகிறார். இடையே ஓடி வந்த சிறுவன் ஒருவன் கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டான்.

பதறியபடி அவனைத் தூக்கிவிடுகிறார். ஒரு நிமிடம் அவர் ஓய்வாக அமர்ந்ததைப் பார்க்க முடியவில்லை. பொருட்களை எண்ணி சரிபார்த்து பொட்டலம் கட்டி, பெட்டிகளில் அடுக்குவது, தன்னார் வலர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, தேநீர் விநியோகிப்பது என ஓடிக் கொண்டே இருந் தார்.

‘யாராக இருக்கும் இவர்?’ என்ற உந்துதலோடு அவரிடம் சென்று “யார் நீங்கள்? உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டேன். ‘தெரியாது’ என்கிற தொனியில் தலையை ஆட்டினார். தமிழ் புரியவில்லையோ என்கிற சந்தேகத்தில் சைகையிலும் விசாரித்தேன். ‘நெஜிமா தரியாது சார்...” என்றார் உடைந்த தமிழில். அதிர்ச்சியாக இருந்தது.

என் வாழ்நாளில் இதுவரை சந்திக்காத அதிர்ச்சி அது. மீண்டும் மீண்டும் கேட்டேன். அதுதான் பதில். அவருக்கு அவரது ஊரும் தெரியவில்லை, பெயரும் தெரிய வில்லை. தான் யார் என்பதும் தெரியாது. இதை சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க ஓடிவிட்டார்.

திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பீர் முகமது அங்கு வந்தார். “அவர் சொல்லுறது உண்மைதான். 2 மாசம் முன்னாடி பீச் பக்கம் கந்தல் கோலத்தில் மயங்கிக் கிடந்தார். நாங்கதான் மீட்டு கொண்டு இங்க தங்க வெச்சிருக்கோம். அவருக்கு எந்த பழைய நினைவுகளும் இல்லை. ஆனா, போலீஸ்காரங்க உட்பட இந்தப் பகுதியில் யார் என்ன உதவி கேட்டாலும் ஓடிப் போய் செய்வார்.

சேப்பாக்கம் குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நிறையப் பேரை காப் பாற்றியது இவர்தான். ‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாம் ஆரம் பிச்ச நாளில் இருந்து ஒரு நிமிஷம் இந்த இடத்தை விட்டு அவர் எங்கேயும் போகலை. யாரும் கேட்காமலேயே எல்லா வேலையையும் செய்கிறார். இந்த இடத்தில் உங்கள் பொருட்களுக்கு காவலும் அவர்தான்.

அதே போல பணம், பொருள் எது கொடுத் தாலும் வாங்க மாட்டார். மூணு வேளை சாப்பாடு மட்டும் போதும் அவருக்கு. நாங்க அவருக்கு ஸ்டெபி என்று பேர் வெச்சிருக்கோம்” என்றார்.

நன்றி ஸ்டெபி. இவ்வளவு பேரழிவிலும் உங்களைப் போன்றவர்களால்தான் உலகம் இன்னமும் உயிர்ப்பாக இருக்கிறது!

ஒரு தாயின் பிள்ளைகளானோம்!

நேற்றைய தினம் ‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாமில் ஓடிக்கொண்டிருந்த எவருக்கும் இன்னொருவரின் பெயர் தெரியாது. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லை. ஜாதி, மதம், வர்க்கம், ஆண், பெண், வயது அத்தனையையும் கடந்து அவர்களை ஒன்றிணைத்தது சென்னையின் வெள்ளம். எல்லோரும் ஒரு தாயின் பிள்ளை களாயினர்.

சுமார் 200 பேர் ராணுவத்தின் கட்டுக்கோப்புடனும் தெளிவான திட்டத்துடனும் செயலாற்றிய வேகம் பிரமிக்க வைத்தது.

இதில் குடும்பத் தலைவிகள்தான் அதிகம். ஏதோ அவர்கள் வீட்டு வேலையைப்போல இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார்கள். இளைஞர்கள் தங்கள் சொந்த பைக்குகளிலும் கார்களிலும் எங்கெங்கு, என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன? தேவைகள் என்னென்ன? என்கிற ஆய்வுப் பணிகளில் நகரம் முழுவதும் ஈடுபட்டார்கள். தகுதியானவர்களுக்கு நேரடியாக பொருட்கள் சென்று சேர வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

வயது வித்தியாசம் இல்லாமல் 85 வயது மூதாட்டி ஒருவர் காலையில் இருந்து மாலை வரை வேலை பார்த்தார். பெயரைக் கேட்டபோது, ‘பேரெல்லாம் எதுக்குப்பா, வீட்டுல சும்மாதானே இருக்கேன். உபயோகமா ஏதாவது செஞ்சிட்டுப் போறேன்’ என்றார். உதவி ஆணையர் பீர் முகமது தலைமையிலான சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்லியம் டேனியல், மூர்த்தி உள்ளிட்ட காவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு அபாரமானது. வில்லியம் டேனியலும் காவலர் மூர்த்தியும் மூட்டைகளைக்கூட தூக்கினார்கள்.

12 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி

நேற்றைய தினம் திரைப்பட இயக்குநர் சசிக்குமார் 50 அரிசி மூட்டைகள், 250 சமை யல் எண்ணெய் பாக்கெட்டுகள், 250 பருப்பு பாக்கெட்டுகள், 500 தண்ணீர் பாட்டில்கள், பாய்கள், கொசு வலைகள், அமிர்தாஞ்சன், விக்ஸ் உள்ளிட்ட மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசல், திருச்சிற்றம்பலம், வலசக்காடு, துறவிக்காடு, பேராவூரணி சுற்றுவட்டாரக் கிராமங்களில் விவசாயிகள் உள்ளிட்டோரிடம் இருந்து ‘கத்துக் குட்டி’ படத் தயாரிப்பாளர் பி.ஆர்.முருகன், இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை சேகரித்து முகாமுக்கு வந்து அளித்தார்கள்.

‘தஞ்சாவூர் ரோட்வேஸ்’ உரிமையாளர் சரவணன் 2 ஆயிரம் கிலோ அரிசியை 2 கிலோ பாக்கெட்டுகளாகவும், 200 கிலோ பால் பவுடரை 200 கிராம் பாக்கெட்டுகளாகவும் கட்டி அனுப்பினார். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் துணைவேந்தர் வணங்காமுடி, மத்திய அரசின் ஓய்வுபெற்ற ஆடிட்டர் ஜெனரல் இன்னபூரான் என்கிற சவுந்திரராஜன் உட்பட ஏராளமானோர் தன்னெழுச்சியுடன் வந்து பணிகளில் ஈடுபட்டார்கள்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளில் நேற்று மட்டும் 12 ஆயிரம் குடும்பங் களுக்கு ‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாம் மூலம் உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

என்ன வேண்டும்?

அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சேற்றுப் புண் மருந்து, காய்ச்சல், சளிக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பவுடர், பாய், போர்வை, கொசுவலை, கொசு விரட்டி, மெழுகுவத்தி, நாப்கின், புதிய சேலைகள், லுங்கிகள், உள்ளாடைகள், பிஸ்கட்டுகள், ரொட்டிகள் இவை எல்லாம் தேவை. மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

என்ன வேண்டாம்?

சமைத்த பொருட்கள், பால் பாக்கெட்டுகள், பழைய துணிகள், குடிநீர் போதுமான அளவு வந்திருப்பதால் வாசகர்கள் அவற்றை அனுப்புவதைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x