Published : 27 Apr 2021 05:18 AM
Last Updated : 27 Apr 2021 05:18 AM

முதல்வர் 10: நெருக்கடிநிலை என்னும் நெருப்பாயுதம்

இந்தியாவுடன் அதே காலத்தில் சுதந்திரம் பெற்ற நமது பக்கத்து நாடுகள் சிலவற்றில் ராணுவத் தலைமை அவ்வப்போது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறுவதைக் காண்கிறோம். இந்திய ஜனநாயகத்துக்காகத் தற்பெருமிதம் கொள்ளும் தருணங்கள் அவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரசமைப்பின் அடிப்படை. ஆனால், அந்தப் பெருமையை இந்தியாவும்கூட சூடிக்கொள்ள இயலாது. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த அதிகாரமளிக்கும் கூறு 356-ம் நெருக்கடிநிலை என்ற அத்தியாயத்தின் கீழேயே இடம்பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியையும் நெருக்கடிநிலை என்று கணக்கில் கொண்டால், இந்தியாவில் எப்போதுமே எங்கோ ஒரு மூலையில் ஜனநாயகம் தற்காலிகமாக விடுப்பெடுத்துக்கொண்டிருக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.

கூறு 352-ன்படி போர், வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கிய உள்நாட்டுக் கிளர்ச்சி காரணமாகவோ அவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையிலோ தேசிய நெருக்கடிநிலையை அறிவிக்கலாம். 1976-க்கு முன்பு வரை ஆயுதம்தாங்கிய கிளர்ச்சி என்பதற்குப் பதிலாக உள்நாட்டு அமைதியின்மை என்ற வார்த்தைகளே இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டு அமைதியின்மை ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையிலுமே நெருக்கடிநிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1962 அக்டோபரில் சீன ஆக்கிரமிப்பின்போது சுதந்திர இந்தியாவின் முதலாவது நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. 1965-ல் இந்திய - பாகிஸ்தான் சச்சரவு காரணமாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்துவந்த நெருக்கடிநிலை 1968 ஜனவரியில்தான் நீக்கிக்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக டிசம்பர் 1971-ல் மீண்டும் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. இந்த நெருக்கடிநிலை நடைமுறையில் இருந்த சூழலில்தான் உள்நாட்டில் அமைதியின்மை என்ற காரணத்தின் பெயரில் ஜூன் 1975-ல் மற்றொரு நெருக்கடிநிலை அறிவிப்பும் சேர்ந்துகொண்டது. இவ்விரண்டு அறிவிப்புகளுமே 1977 மார்ச்சில் விலக்கிக்கொள்ளப்பட்டன.

உரிமைகளின் இடைநிறுத்தம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் சிலவற்றை நெருக்கடிநிலையின்போது இடைநிறுத்தி வைக்கவும் கூறு 359-ன் கீழ் ஒன்றிய அரசு அதிகாரம் பெற்றுள்ளது. உள்நாட்டு அமைதியின்மையின் காரணமாக 1975-ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலையானது கூறு 359-ஐ முழு அளவில் கையிலெடுத்துக்கொண்டது. மிஸா கொடுமைகளுக்கு அதுவே காரணம். இன்றும் அந்தக் கூறு அரசமைப்புச் சட்டத்தில் தொடரவே செய்கிறது.
நெருக்கடிநிலைக் காலங்களில் மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விஷயங்களின் மீது சட்டம் இயற்றுவதற்கும் ஒன்றிய அரசு அதிகாரம் பெற்றுள்ளது. கூறு 353-ன்படி மாநில அரசுகளின் நிர்வாகம் மற்றும் சட்டம் இயற்றும் அதிகாரங்களை ஒன்றிய அரசு தனது கைகளில் எடுத்துக்கொண்டுவிட முடியும். இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும்கூட நெருக்கடிநிலைக் காலங்களில் மாநில அரசின் அதிகாரம் என்பது பெயரளவுக்குத்தான்.

வானமே எல்லை

நெருக்கடிநிலை அறிவிப்பானது தேசிய அளவில் அல்லாது குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமானதாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களில், நெருக்கடிநிலை அறிவிக்கப்படாத பகுதிகளிலும் நிர்வாக மற்றும் சட்டம் இயற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு. ஓர் உதாரணத்துக்கு, காஷ்மீரிலோ வடகிழக்கிலோ அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலைக்காகத் தமிழ்நாட்டின் நிர்வாக அதிகாரத்திலும் ஒன்றிய அரசு தலையிட முடியும். நெருக்கடிநிலையின்போது நிதித் துறை சார்ந்து முழுமையான அதிகாரத்தை ஒன்றிய அரசு தனது கைகளில் எடுத்துக்கொண்டுவிடும். ஒன்றிய அரசால் விதிக்கப்பட்ட வரிகளை மாநிலங்கள் ஈட்டினாலும் சரி, ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வரிகளானாலும் சரி அனைத்தையும் ஒன்றிய அரசே கையாளும்.

அரசமைப்புச் சட்டத்தில் 1978-ல் கொண்டுவரப்பட்ட 44-வது திருத்தத்தால் தேசிய நெருக்கடிநிலையை ஒன்றிய அரசு தனது விருப்பம்போலப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்திருத்தத்தின்படி, கூறு 352-ல் உள்நாட்டு அமைதியின்மை என்பதற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் கூறு 356-க்குக் கடிவாளம் போடுவதற்கு எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் 1994-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டியிருந்தது.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கு

கூறு 356, அரசமைப்புச் சட்டம் சரிவர இயங்காமையைக் காரணம்காட்டி, மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வகைசெய்கிறது. இக்கூறானது, மாநிலத்தின் நிர்வாகத்தைக் குடியரசுத் தலைவருக்குக் கொடுப்பதோடு அல்லாமல், மாநிலச் சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் நாடாளுமன்றத்துக்கு அளிக்கிறது. கூறு 356-ன் கீழ், மாநில அரசைக் கலைப்பதற்கான குடியரசுத் தலைவரின் அதிகாரம் முழுமையானது அல்ல என்று எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அத்தகைய அறிவிப்பானது நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றது; அதுவரையில், சட்டமன்றத்தை இடைநிறுத்தி வைப்பதற்கு மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறியது. எனவே, மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் குடியரசுத் தலைவரின் அறிவிப்புக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் கிடைக்காவிட்டால், அந்த அறிவிப்பானது இரண்டு மாதங்களிலேயே முடிவுக்கு வந்துவிடும். அதே வழக்கில், கூறு 356-ன் கீழ் குடியரசுத் தலைவரின் அறிவிப்புகள் உச்ச நீதிமன்றத்தின் சீராய்வுக்கு உட்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

பெரும்பான்மை என்பது சட்டமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதையும் அதைத் தீர்மானிப்பவர் ஆளுநர் அல்ல என்பதையும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தியது. இத்தீர்ப்பின் காரணமாக, 1999-ல் பிஹாரில் ராப்ரிதேவி தலைமையிலான அரசைக் கலைக்கும் பாஜக தலைமையிலான அன்றைய ஒன்றிய அரசின் முயற்சி தோல்வியைத் தழுவியது. அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிஹாரில் கூறு 356-ஐப் பயன்படுத்த விருப்பமில்லாதிருந்த நிலையிலும் ஒன்றிய அரசு அதில் தீவிரம் காட்டியது. எனினும், மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்காததால், ராப்ரி தேவியின் அமைச்சரவை ஆட்சியில் தொடர்ந்தது.

தமிழ்நாட்டின் அனுபவங்கள்

1976-ல் திமுகவின் ஆட்சிக் கலைப்புக்குக் காரணம், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகள் என்று காரணம் சொல்லப்பட்டது. எனவே, அதிமுக அந்த ஆட்சிக் கலைப்பை வரவேற்றது. 1980-ல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டபோது, திமுகவும் அதை வரவேற்றது. ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் கூறு 356 பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தவறில்லை என்றார் கருணாநிதி. 2001-ல் கருணாநிதி கைதின்போது கூறு 356 பயன்படுத்தப்பட வேண்டும் என்று திமுக கோரியது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே கூறு 356 காரணமாகப் பாதிக்கப்பட்டவை, இரண்டு கட்சிகளுமே அந்தக் கூறினைத் தொடர்ந்து எதிர்க்கின்றன என்றாலும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தச் சொல்லி, ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மாநில அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் சமர்ப்பித்தால், அந்தக் குற்றச்சாட்டு ஆட்சிக் கலைப்பை நோக்கி இட்டுச்செல்லும் என்பதை அறியாதவை அல்ல இரண்டு கட்சிகளும்.

கூறு 360-ன்படி இதுவரையில் தேசிய நிதி நெருக்கடி அறிவிக்கப்பட்டதில்லை. ஒருவேளை நிதி நெருக்கடி நோக்கி நாம் தள்ளப்பட்டால், மாநிலத்தின் சகல நிதி அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். மேலும், ஒன்றிய அரசு மாநில ஊழியர்களின் ஊதியங்களைக் குறைக்கலாம். மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படுகிற நிதிநிலை அறிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டியதும் கட்டாயம்.

ராஜமன்னார் குழு அறிக்கையின் மீதான சட்டமன்ற விவாதத்தில் கூறு 360 குறித்து ஒரத்தநாடு எல்.கணேசன் பேசியது: ‘கூறு 352, 356 ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் மோசமானது கூறு 360. இப்படியொரு முன்னுதாரணம் 1935-ம் ஆண்டு சட்டத்திலும்கூட இடம்பெறவில்லை. மாநில அரசுகள் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும், அவற்றின்படியே செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியே நான் குறிப்பிடுகிறேன். இந்திய அரசமைப்புச் சட்டம் மிகச் சிறந்த நிதி நிர்வாக விதிமுறைகளைச் சொல்லவில்லை.’ போர்ச் சூழல்கள் மட்டுமின்றி பெருந்தொற்றும்கூட நிதி நெருக்கடிநிலையை நோக்கி நம்மை இட்டுச்செல்லக்கூடும் என்பதை கரோனா உணர்த்தியிருக்கிறது. பிணிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்.

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x