Published : 03 Dec 2015 10:40 AM
Last Updated : 03 Dec 2015 10:40 AM

‘ஹெபடைடிஸ்-சி’ நோயாளிகள் கவனத்துக்கு...

இந்தியாவில் ‘ஹெபடைடிஸ்-சி’ பாதிப்பு உள்ளவர் களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த பாதிப்புக்கான மருந்துகளான சோஃபோஸ்புவிர் மற்றும் லெடிபஸ்விர் மற்றும் டாக்லாடஸ்விர் ஆகிய மருந்துகளின் பொதுப் பெயர் மருந்துகள் நோயாளிகளுக்கு நேரடியாகக் கிடைக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (சி.டி.எஸ்.சி.ஓ.) நடவடிக்கை எடுத்திருக்கிறது. வரும் வாரங்களில் இந்த மருந்துகள் இந்தியச் சந்தைகளில் கிடைக்கும். ‘ஹெபடைடிஸ்-சி’ நோயாளிகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்க மட்டும் பயன்படுத்தப்படும் இந்த வகை மருந்துகளை, நேரடிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வழிவகுத்திருக்கிறது சி.டி.எஸ்.சி.ஓ. நிறுவனம்.

இந்தியாவில் சுமார் 1.2 கோடிப் பேர் ‘ஹெபடைடிஸ்-சி’ வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அதீத செலவுபிடிக்கும் விஷயமாக இதுவரை இருந்துவந்த நிலை இதன் மூலம் மாறும். அமெரிக்காவில் ‘இன்டர்ஃபெரான்-ஃப்ரீ’ சிகிச்சைக்கான கட்டணம் சுமார் ரூ. 59 லட்சம். ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் ரூ. 35 லட்சம். இத்தனை விலையுயர்ந்த மருந்துகள் இந்தியாவில் இனி ரூ. 67,000-க்கு அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மரபுவழி மருந்து தயாரிப்பாளர் களுக்கு இடையிலான போட்டியும் இந்த மாற்றத்துக்கு ஒரு காரணம்.

‘இண்டர்ஃபெரான் - ஃப்ரீ’ சிகிச்சைக்கான மரபுவழி மருந்துகள் கிடைக்கும் மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது.

ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கான சிகிச்சையில் உலகத் துக்கே வழிகாட்டும் வகையில் இந்தியாவில் மரபுவழி மருந்துகளின் பயன்பாடு இருக்கிறது. அதேபோல், ‘ஹெபடைடிஸ்-சி’ சிகிச்சையிலும் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா இருக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றிலிருந்து ‘ஹெபடைடிஸ்-சி’சிகிச்சைக்காக இந்தியா வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

நோயாளிகளுக்கு அளித்துப் பரிசோதிக்கப்படும் மருந்துகளை நேரடியாக விற்பனை செய்யக் கோரி நோயாளிகள் நலச் சங்கங்கள் பல தொடர்ந்து வலியுறுத்திவந்தன. கல்லீரல் நோய் முற்றிய நோயாளிகள், ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள தலசீமியா நோயாளிகள், சிறுநீரகக் கோளாறுடன் ஹெபடைடிஸ்-சி பாதிப்பும் உள்ளவர்களுக்கு டாக்லாடஸ்விர் மற்றும் சோஃபோஸ்புவிர் ஆகிய மருந்துகளின் கலவைதான் பலனளிக்கும். அவர்களால் இண்டர்ஃபெரான் அல்லது ரிபாவிரின் சிகிச்சையைத் தாங்கிக்கொள்ள முடியாது. சோஃபோஸ்புவிர் மருந்தை மட்டும் தனி யாகச் செலுத்திச் சிகிச்சையளிப்பதும் சாத்தியமற்றது.

இந்தியாவில் நோயாளிகளுக்கு மருந்து செலுத்தி நடத்தப்படும் பரிசோதனைகள் மட்டுமல்லாமல் நேரடியாகவும் இதுபோன்ற மருந்துகளைப் பெறு வதற்குக் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. தேசிய நெருக்கடி நிலை, அதீத அவசரம், தொற்றுநோய்ப் பரவல் போன்ற அவசரச் சூழல்களில் மட்டும்தான் இதற்கு விலக்கு அளிக்கப்படும் என்ற நிலை இருந்தது. இதனால், ‘ஹெபடைடிஸ்-சி’ பாதிப்புள்ள வர்களால் நேரடியாக அந்த மருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. இதை நீக்குமாறு அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இந்நடவடிக்கை ‘ஹெபடைடிஸ்-சி’ நோயாளிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x