Last Updated : 08 Dec, 2015 08:08 AM

Published : 08 Dec 2015 08:08 AM
Last Updated : 08 Dec 2015 08:08 AM

எப்படி இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி?

உயிரைக் கொடுத்து அணையைக் காக்கிறார்கள் பொதுப்பணித் துறையினர்

சென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. ஒவ்வொரு நாளும் ஏரியைப் பற்றி ஒவ்வொரு தகவல்கள். ஊடகங்களில் வருவதைவிடவும் சமூக வலை தளங்களில் வரும் தகவல்கள் அதிரவைக்கின்றன. உண்மை யில் இப்போது எப்படி இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி?

சென்னையின் பெரிய ஏரி

ஏரியின் உண்மை நிலை என்ன என்று அறிந்து கொள்வதற்கு முன், அதைப் பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிந்துகொள்வோம். சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளிலேயே மிகப் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர அணைகளுக்கு இணையான கொள்ளளவு கொண்ட ஏரி. வைகை அணையின் கொள்ளளவுடன் (6,143 மில்லியன் கன அடி) ஒப்பிட்டுப் பார்த்தால், இதன் பிரம்மாண்டம் புரியும்.

ஏரிக்கரை எனும் சிங்கக் குகை!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் பாயும் அடையாற்றின் கரையில் வசிப்பதே இன்றைக்குப் பெரும் சவால் என்றாகிவிட்ட நிலையில், அந்த ஏரியிலேயே பணியாற்றுவது எப்படி இருக்கும்? இந்த இக்கட்டான சூழலில் சீறுகிற செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை நேரில் பார்வையிட்டு உண்மை நிலையை அறிய புகைப்படக்காரர் பரத்துடன் சென்றேன்.

அணை பாதுகாப்பாக இருக்கிறது. “நாமல்லாம் தீபாவளி கொண்டாடுன நேரத்துல அவங்க எல்லாம் ஏரிக்கரையிலதாம் இருந்தாங்க. அப்ப ஆரம்பிச்ச மழை நாளுக்கு நாள் தீவிரமானதால, கிட்டத்தட்ட வீட்டையே மறந்துட்டு இங்கேயே தங்கிட்டாங்க. ஏன்னா, போன வருஷம் இதே காலகட்டத்துல ஏரியில இருந்தது ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணிதாம். ஆனா, இந்த வருஷம் மூவாயிரம் மில்லியன் கன அடி தண்ணி இருந்துச்சி. அவங்க பயந்த மாதிரியே டிசம்பர் 1-ம் தேதி பேய் மழை பெஞ்சுது. சென்னையில எல்லாரும் வீடு வாசலை விட்டுட்டு ஓடிக்கிட்டு இருக்கும்போதும், இவங்க பொட்டுத் தூக்கம் இல்லாம மதகுப் பக்கமே நின்னுக்கிட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல அவங்க குடும்பமும் தண்ணீரில் தத்தளித்தது. அவங்க வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. வீட்டில் இருந்தவங்க எல்லாம் மேல் மாடிகளுக்கும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் இடம் பெயர்ந்திருக்காங்க. எல்லாம் தெரிஞ்சும் இந்தப் பணியாளர்கள் மட்டும் ஏரியை விட்டு அகலவில்லை” என்றார்கள் ஊர் மக்கள்.

ஏரியை நேரில் பார்த்தபோது அவர்கள் ஆற்றிக்கொண்டிருக்கும் கடும் பணி நெகிழச் செய்தது. கொட்டும் மழை, கடும் குளிர், மின்வெட்டால் ஏற்பட்ட கும்மிருட்டு, ஆர்ப்பரிக்கும் தண்ணீருடன் தவளை போன்ற ஜீவராசிகளின் ஓயாத சத்தத்துக்கு நடுவே இவர்கள் ஆற்றிய பணியை அவ்வளவு லேசாக வர்ணித்துவிட முடியாது. சென்னையை வெள்ளம் சூழ்ந்த நாட்களில் எப்படிப் பணியாற்றினார்கள் இவர்கள்? பல நேரங்களில் உணவு கிடைக்கவில்லை. மின்தடையால் கதவணையை இயக்குவதிலும் சிக்கல். அந்த இருட்டில் தண்ணீருக்குள் நடந்து மின் வாரிய ஊழியர்களைத் தேடி அழைத்துவந்திருக்கிறார்கள். கொட்டுகிற மழையில் மின்சார வேலை பார்ப்பது ஆபத்தானது என்றாலும், அவர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் போராட்டம் தொடர்ந்திருக்கிறது. ஏரியில் வசித்த பாம்புகள் மழைக்கு இதமாக, நீர்மட்டத்தை அளவிடும் இடத்தில் வந்து பதுங்கிக்கொள்ள உயிரைப் பணயம் வைத்து அங்கு இருந்திருக்கிறார்கள் ஊழியர்கள். பாம்பு பிடிக்கும் தொழிலாளிகளை அழைத்து வரவும் பிரயாசைப்பட்டிருக்கிறார்கள்.

மழையும், வெள்ளப் பாதிப்புகளும் சென்னையில் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலையில் இருப்பதாகவும், உடைந்து விட்டதாகவும் சில ஊடகங்களில் பரவிய செய்திகள் பொதுமக்களை மட்டுமின்றி, கோட்டையில் அமர்ந்து நிலைமைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த உயர் அதிகாரிகளையும் பீதி அடைய வைத்துள்ளது. உண்ணவும் உறங்கவும் நேரமின்றி செம்பரம்பாக்கம் ஏரிக் கரையில் நின்று போராடிக்கொண்டிருந்த பணியாளர்கள் இந்த வதந்திகளால் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கூடவே, சென்னை மாநகரையே புரட்டிப்போட்டு அடையாற்றில் புரண்டு ஓடிய ஒட்டுமொத்த வெள்ள நீரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டதுபோலச் சிலர் பேசியதும் அவர்களை வேதனையடையச் செய்துள்ளது.

குடிநீரா? வெள்ளமா?

பணியில் இருந்த களப் பணியாளர்களிடம் பேசினோம். அந்த ஏரியின் கரையைப் போலவே, அவர்கள் தங்களைத் தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. பெயரெல்லாம் வேண்டாம் சார் என்றுதான் பேசவே ஆரம்பித்தார்கள்.

“அடைமழைக் காலத்துல வரத்துக்கு ஏத்த மாதிரி தண்ணியை வெளியேத்தலைன்னா, ஏரியே உடைஞ்சிரும். அதே நேரத்துல, இது சென்னையோட குடிநீர்ங்கிறத மனசுல வெச்சுக்கிட்டு செயல்படணும். மொத்தமா திறந்துவிட்ற முடியாது. டிசம்பர் ஒண்ணாந்தேதி ஒரே நாள்ல மட்டும் 470 மி.மீட்டர் மழை பதிவாச்சு. டம்ளர்ல ஊத்துன தண்ணி மாதிரி, அம்மாம் பெரிய ஏரி மளமளன்னு ஏற ஆரம்பிச்சிருச்சி. இவ்வளவு வேகமா ஏரி நிரம்புதுன்னா, நீர்வரத்து அபாய கட்டத்துக்கும் அதிகமா இருக்குன்னு அர்த்தம். அதனால ஒரு நிமிஷம்கூட வீணாக்காம, கதவணை (ஷட்டர்) வழியா தண்ணியை வெளியேத்திட்டு இருந்தோம். அதே நேரத்துல தாம்பரம் ஏரியாவுல அதைக் காட்டிலும் அதிகமா மழை பெஞ்சிருக்கு. ஏரியில இருந்து திறந்துவிட்டதைவிட நாலு மடங்கு தண்ணி பல்வேறு பகுதியில இருந்து அடையாறுக்கு வந்திருக்கு. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல தண்ணீரின் அளவு அதிகமாகி, பாதிப்பு அதிகமாகியிருக்கு.

ஆனா, நாங்கதாம் எல்லா அழிவுக்கும் காரணம்ங்கிற மாதிரி பேசுறாங்க. உண்மையில், ஏரியையும் ஏரியையொட்டி வசிக்கும் மக்களையும் காப்பாத்துவதற்காகக் கட்டுப்படுத்தும் முறையில்தான் உபரித் தண்ணீரைத் திறந்துவிட்டோம். தண்ணீர்ல தத்தளிக்கிற எங்க குடும்பத்தைக்கூட மறந்துட்டு, எப்பிடி வேலையில கவனமா இருந்தோம்னு இயற்கைக்கும் இறைவனுக்கும் தெரியும்” என்கிறார்கள் நொந்தபடி.

நீர்நிலைகளை அறிவோம்!

ஆனாலும், தொய்வில்லாமல் வேலையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் அந்த ஊழியர்கள். இத்தனை நாள் நாம் விரோதியாகப் பார்த்த அண்டை வீட்டார்களுடனான உறவைப் புதுப்பிக்க வைத்திருக்கிறது சென்னை மழை. இனி அண்டை வீட்டாரைப் பற்றி மட்டுமல்ல, அருகில் உள்ள நீர்நிலைகளைப் பற்றியும் சென்னைவாசிகள் அறிந்துகொள்ள வேண்டும். அருகில் இருக்கும் ஏரியின் பெயர் என்ன? அதற்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது? அதைத் திறந்துவிட்டால் தண்ணீர் எங்கே செல்லும்? அந்தப் பாதையில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளும் கடமை நமக்கும் இருக்கிறதுதானே!

- வி. தேவதாசன்,

தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x