Published : 06 Dec 2015 11:39 AM
Last Updated : 06 Dec 2015 11:39 AM

நிதி மறுத்த கிழக்கிந்திய கம்பெனி... அள்ளித் தந்த தென்திருப்பேரை விவசாயிகள்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

1950-களில் மணிமுத்தாறு அணையைக் கட்ட நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அன்றைய தமிழக அரசு மறுத்தபோது நிதியைக் கொடுத்தது அன்றைய தூத்துக்குடி விவசாயிகள்தான் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பே நீர் நிலைகளை சீரமைக்க ஆங்கிலேய அரசு நிதி அளிக்க மறுத்தது. அப்போதும் நிதியை வாரி வழங்கினார்கள் நம் முன்னோர்கள்.

மருதூர் அணை கி.பி.1507-ல் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. 1868-ம் ஆண்டு அந்த அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏராளமானத் தண்ணீர் கடலுக்குச் சென்றது. உடைப்பை சீரமைக்க கிழக்கிந்தியக் கம்பெனி நிதி கொடுக்க மறுத்துவிட்டது. அப்போது சீவலப்பேரி கிராம மக்கள் ரூ.10 ஆயிரம் திரட்டி தாங்களே உடைப்பை சரிசெய்தனர். அணையிலும் ஏரிகளிலும் இதுபோல அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் மருதூர் அணைக்கு கீழே ஆத்தூர் கால்வாய், தென் திருப்பேரைக் கால்வாய், கொற்கைக் கால்வாய், கீழ் பிடாகைக் கால்வாய் ஆகியவற்றில் நீர்வரத்து மிகவும் குறைந்தது.

இந்த நிலையில்தான் கேப்டன் ஹார்ஸ்லி என்பவர், மருதூர் அணைக்குக் கீழே ஒரு அணையைக் கட்ட திட்டம் வகுத்தார். ஆனால், அதற்கும் கிழக்கிந்திய கம் பெனி நிதி தர மறுத்துவிட்டது. அதன் பின்பு திருநெல்வேலி ஆட்சியராக பக்கிள் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நில அளவை பதிவுத் துறையில் பணியாற்றியவர். அதனால், அந்தப் பகுதியில் அணையைக் கட்ட வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந் திருந்தார். எனவே, கம்பெனியின் தலைமைக்கு அணையைக் கட்ட வலியுறுத்தி பலமுறை கடிதங்கள் எழுதினார். ஆனால், அசைந்துக் கொடுக்கவில்லை கிழக்கிந்திய கம்பெனி.

அப்போது, கடம்பா ஏரியின் மூலம் பாசனம் பெற்று வந்த தென்திருப்பேரைக் கிராம மக்கள் அணையைக் கட்ட ரூ.20 ஆயிரம் திரட்டிக்கொண்டு வந்து பக்கிளிடம் அளித்தனர். இந்தத் தகவல் லண்டனுக்குச் சென்றது. ரூ.20 ஆயிரம் என்பது அன்றைய நாட்களில் மிகப் பெரிய தொகை. ஏற்கெனவே மக்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு நில வரி கட்டி வரும் நிலையிலும் இந்தப் பணத்தைக் கொடுத்திருந்தார்கள். மக் களின் பங்களிப்பைக் கண்டு நெகிழ்ந் துப்போனார்கள் கம்பெனியின் மேலதிகாரிகள்.

உடனே, “இந்திய மக்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆச்சர்யம் அளிக் கிறது. அவர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. எனவே, அணையைக் கட்ட கம்பெனி அனுமதி யளிக்கிறது. மக்கள் அளித்த நிதியில் ஒரு ரூபாய்கூட வீணாக்கப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செலவிடப்பட வேண்டும். சரியான கணக்கு வழக்கு களை கம்பெனியிடமும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது.

1853-ம் ஆண்டு ஆங்கிலேய பொறி யாளர்கள் இந்த அணைக்கான திட்டங் களை வகுத்தார்கள். 1869-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. கம்பெனி கேட்டுக்கொள்ளாமலேயே ஆயிரக் கணக்கான விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து கட்டுமானப் பணிகளில் ஈடு பட்டார்கள். பாளையங்கோட்டை சுவரின் மதில் இடிக்கப்பட்டு அதில் இருந்த பாறைகளும் அணையின் கட்டுமானத் துக்காகப் பயன்படுத்தப்பட்டன.

அணையின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலம் நன்செய் நிலமாக மாற்றப்பட இருந்தது. இதனால், சுற்று வட்டாரங்களில் இருந்த புறம்போக்கு நிலங்களை விற்று கிழக்கிந்திய கம்பெனி ரூ.60 ஆயிரம் திரட்டியது. 1873-ல் அணை கட்டி முடிக்கப்பட்டது. இதுதான் இது ஸ்ரீவைகுண்டம் அணை. தாமிரபரணி நதியின் கடைசி அணைக்கட்டும் இதுதான். இதன் நீளம் 800 கெஜம்.

அணையின் தென் கால்வாயில் இருந்து கடம்பா குளம், ஆத்தூர் குளம், சேதுக்குவாய்த்தான் குளம், அம்மன்புரம் குளம், நல்லூர் மேலக்குளம், நல்லூர் கீழக்குளம், கானம் குளம், ஆறுமுகனேரி குளம், நத்தக்குளம், நாலாயிரம்முடை யார் குளம், சீனிமாவடி குளம், துலுக்கன் குளம், வண்ணான் குளம், ஆவுடையார் குளம், எல்லப்பநாயக்கன் குளம் ஆகி யவை தண்ணீர் பெறுகின்றன. ஸ்ரீவைகுண்டம் வடக்கு கால்வாயில் இருந்து கொற்கை குளம், ஆறுமுகமங் களம் குளம், பேய்க்குளம், பொட்டைக் குளம், பழையகாயல் குளம், கோரம்பள் ளம் குளம் ஆகியவை நீர் பெறுகின்றன.

இங்கிலாந்தில் இருந்து இங்கே வந்து பணியாற்றிய பங்கிள் துரை, ஆர்தர் காட்டன், பென்னிகுவிக் போன்ற அதிகாரிகள் பலரும் இந்த மண்ணின் மைந்தர்களாகவே மாறிப்போனார்கள். ஆனால், லாபம் ஒன்றையே குறிக் கோளாக கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி அந்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. சரியான நிதி ஒதுக்கவில்லை. அணைகளைக் கட்ட போதுமான தொழில்நுட்பப் பொறியாளர்களை அளிக்கவில்லை.

பெரியாறு அணையைக் கட்ட பென்னி குவிக் தனது சொத்துக்களை விற்றது வரலாறு. இத னால், ஆங்கிலேயர்கள் கட்டிய அணை களில் ஸ்ரீ வைகுண்டம் அணை, தென் பெண்ணையாறு - திருக்கோவிலூர் அணை, பாலாறு அணை ஆகிய அணை கள் தொழில்நுட்பக் கோளாறுகளுடனே கட்டப்பட்டன.

மருதூர் அணையையும் ஸ்ரீ வைகுண்டம் அணையையுமே ஒப்பிடுவோம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்கள் கட்டிய மருதூர் அணையில் இன்றும் மணல் சேர்வதில்லை. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணை, அதன் முழுக் கொள்ளளவான எட்டு அடியில் ஆறு அடி வரை மணலும் சேறுமாக தூர்ந்துக்கிடக்கிறது. அதை அகற்ற நீதிமன்றம் சென்று போராட வேண்டியிருக்கிறது. அணையின் தொழில்நுட்பக் குறைபாட்டால் விளைந்தது அது.

இந்த அணை ஆற்றின் குறுக்கே கீழ்ப்பகுதியில் நீரோட்டத்துக்கு செங்குத்தாக, குறைந்த நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த அணையின் உயரம் மருதூர் அணையின் உயரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. நீளமோ மருதூர் அணையைவிட பல மடங்கு குறைவு. இதனால் எவ்வளவு வெள்ளம் வந்தபோதும் மருதூர் அணைக்கட்டு தாங்கியது. வைகுண்டம் அணையில் வெள்ளம் ஏறியது.

1877-ல் தாமிரபரணியில் பெரு வெள்ளம் வந்தபோது மருதூர் அணைக் கட்டில் 1.02 மீட்டர் மட்டுமே நீர்மட்டம் உயர்ந்தது. ஸ்ரீவைகுண்டம் அணையில் 2.96 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்தது. 1895-ல் மருதூர் அணைக்கட்டில் 1.85 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்தது. ஸ்ரீ வைகுண்டத்தில் 3.66 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்தது. 1923-ல் மருதூரில் 0.48 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் 1.93 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்தது.

அணையில் இப்படி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அணைக்கட்டின் இரு கரைகளையும் மூன்று கி.மீட்டர் நீளத்துக்கு உயர்த்தினார்கள். இதனால், மூன்று கி.மீட்டர் தொலைவுக்கு நிலத்தின் உபரி நீர் ஆற்றுக்கு வருவது தடைப்பட்டது. இதனால், அந்தப் பகுதியின் நில வளமும் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலும் கெட்டுள்ளது. பழந்தமிழருக்கும் ஆங்கிலேயருக்கும் இருந்த வித்தியாசம் இதுதான்!

(நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x