வெள்ளம் கொண்டுபோன பொக்கிஷங்கள்...

வெள்ளம் கொண்டுபோன பொக்கிஷங்கள்...
Updated on
2 min read

சென்னை மழை வெள்ளம் நடத்திய சூறையாட்டத்தில் சீர்குலைந்திருக்கிறது தமிழ்ப் பதிப்புத் துறை. புத்தகக் காட்சிக்காகப் பெருமளவில் புத்தகங்களைத் தயாரித்து, பதிப்பகங்களில் பதிப்பாளர்கள் குவித்துவைத்திருந்த நிலையில், உள்ளே புகுந்த வெள்ளம் பெரும் நாசத்தை விளைவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பதிப்பாளர்கள் பலரிடம் பேசும்போது, அவர்களின் இழப்பும், இழந்ததை ஈடுகட்ட என்ன வழி என்று அறியாமல் துயரம் மேலிடும் பதற்றமும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. இதுவரை இப்படியொரு இயற்கைப் பேரிடரால், ஒரே சமயத்தில் பெரும்பான்மையான பதிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதில்லை. எனவே, இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சென்னை தன் பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டுவிடாத நிலையில் பபாசி, புத்தகக் காட்சியை வரும் ஏப்ரல் மாதத்துக்குத் தள்ளி வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களுக்கு அவர்களின் இழப்புக்கேற்ப நஷ்டஈட்டினை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென்றும் பபாசி கோரிக்கை வைத்திருக்கிறது. இக்கோரிக்கைகள் எல்லாம் அரசின் காதுகளில் விழுமா என்று தெரியாத நிலையில், பதிப்பகங்கள் தங்களின் இழப்பை மீட்டெடுக்க வழியின்றித் திகைத்து நிற்கின்றன.

“வெ.சாமிநாத சர்மா எழுதிய 78 நூல்கள் அடங்கிய 31 தொகுதிகள், மயிலை சீனி.வேங்கடசாமி, சாமி.சிதம்பரனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நூல்கள் 24 தொகுதிகள், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 10 தொகுதிகள் என 20-க்கும் மேற்பட்ட நூல்களின் மொத்தத் தொகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன’’ என்கிறார் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன். தமிழின் மிக முக்கிய இலக்கிய வரலாற்று நூல்களான இந்நூல்களை மறு பிரசுரம் செய்வதென்பதே விற்பனையளவில் மிகச் சவாலானது.

தமிழறிஞர்களின் எழுத்தை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும்படி பெருமுயற்சி எடுத்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொகுதி நூல்களை வெளியிட்டிருக்கும் தமிழ்மண் பதிப்பகத்தின் தி.நகர் புத்தகக் கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களும், சி.ஐ.டி. நகரிலிருந்த புத்தகக் கிடங்கு மொத்தமாக மூழ்கி, ஒன்றே முக்கால் கோடி மதிப்பிலான புத்தகங்களும் சேதமடைந்துவிட்டதாகக் கூறினார்.

சி.ஐ.டி. நகரிலிருக்கும் லியோ புக்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸின் புத்தகக் கடையும், புத்தகக் கிடங்கும் மொத்தமாக நீரில் மூழ்கிவிட்டன.

“ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி, கிராமர் புக்ஸ், தேர்வுகளுக்கான புத்தகங்கள் என சுமார் ஒரு கோடி மதிப்பிலான புத்தகங்கள் மழை நீரில் நாசமாகிவிட்டன’’ என்றார் உரிமையாளர் குமரன்.

“அருந்தமிழ் கற்பிக்கும் முறைகள், ஆங்கிலம்-தமிழ் கலைச்சொல் அகராதி உள்ளிட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் நீரில் மூழ்கி பாழாகிவிட்டன” என்கிறார் நங்கநல்லூர் வனிதா பதிப்பக உரிமையாளர் பெ.மயிலவேலன்.

“முதல் நாள் இரவுதான் புத்தகக் கண்காட்சிக்கான இரண்டு புதுப் புத்தகங்கள் (மனுதர்ம சாஸ்திரம் மற்றும் ஜாதக பாரிஜாதம்) வந்திறங்கின. ஒவ்வொன்றும் 1,000 பிரதிகள். மொத்தப் புத்தகங்களும் மழையில் ஊறி வீணாகிவிட்டன. ஏற்கெனவே இருந்த புத்தகங்களும் மொத்தமாகப் போயின. அச்சுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த 40 புத்தகங்களுக்கான பிரதிகளும் அடித்துக்கொண்டு போய்விட்டன” என்கிறார் இந்து பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் சீனிவாசன்.

ஜீவா பதிப்பகம், நர்மதா பதிப்பகம் மற்றும் நியூ புக் லேண்ட், மணிமேகலைப் பிரசுரம், அருணா பப்ளிகேஷன்ஸ், சாந்தி புக் ஹவுஸ், புக் வேர்ல்ட் லைப்ரரி, சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம், வானதி பதிப்பகம், சந்தியா பதிப்பகம், பரிசல் புத்தக நிலையம்,பொன்னி பதிப்பகம், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சேகர் பதிப்பகம், லிப்கோ என பாதிக்கப்பட்ட பதிப்பகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொருவரின் இழப்பும் பத்து லட்சம் முதல் ஒரு கோடி வரை நீள்கிறது.

புத்தகங்கள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பல்ல. அவை நேற்றின் வரலாற்றை, இன்றைய நிகழ்வை நாளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொக்கிஷங்கள்’என்பார்கள். அப்படிப்பட்ட வரலாற்றுப் புதையல்களான புத்தகங்களை வெளியிட்டு, சமூகத்துக்கான அடிப்படை சேவைப் பணியைச் செய்துகொண்டிருக்கும் பதிப்பாளார்களின் இழப்பைச் சரிசெய்ய அரசு முன்வர வேண்டும்.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட புத்தகங்களின் இழப்பு என்பது பதிப்புத் துறையின் இழப்பு மட்டுமல்ல; நம் சமூக வரலாற்றைப் பதிவுசெய்யும் மிக முக்கியமான சேவையின் முடக்கமாகும்.

பாதிக்கப்பட்ட பதிப்பாளர்கள் தங்களின் இழப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழக அரசின் சிறு கையசைப்புகூடப் பேருதவியாக அமையும்.

தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in