

வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில் மக்களால் வெளியே வர முடிகிறது. ரயில், பேருந்துச் சேவைகள் ஓரளவு கிடைக்கின்றன. இன்னமும் இயல்பு நிலை பல இடங்களில் சாத்தியப்படவில்லை. நிவாரணப் பணிகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இழப்பு எவ்வளவு என்பது இப்போது முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை.
இழப்பை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? சேதமான பயிர்கள், சிதிலமான பொதுக் கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதங்கள், பேருந்து முதலான அரசு வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் முதலானவற்றைக் கணக்கிட்டுவிடலாம்.
இவற்றைச் சீரமைப்பது, புதிதாக வாங்குவது ஆகியவற்றுக்கு நிதியை ஒதுக்கிவிடலாம். அரசு இயந்திரத்துக்கென்றே உள்ள அலாதியான வேகத்துடனும் புறங்கை நக்கல்களுடனும் இந்த நிதி செலவழிக்கப்படும் (தேனெடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா என்னும் பழமொழியைத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதிலாகச் சொன்னார் என்பதை இங்கு நினைவுகூர்க).
எல்லாம் சரி, இழப்பைக் கணக்கிட இந்த அளவீடுகள் போதுமா? பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை யார், எப்படிக் கணக்கிடுவது? உயிரிழப்புகளுக்குக்கூட ஏதேனும் இழப்பீடு வழங்கிவிட முடியும். ஆனால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருள்கள்?
வெள்ளத்தில் மூழ்கி முடங்கியிருக்கும் வாகனங்கள்? அடித்துச் செல்லப்பட்ட சான்றிதழ்கள்? இவற்றையெல்லாம் அளக்க ஏதேனும் வழிமுறை அரசிடம் இருக்கிறதா? எத்தனையோ வீடுகளில் தொலைக்காட்சி, கணிப்பொறி, அரிசி முதலான உணவுப் பொருள்கள், எரிவாயு சிலிண்டர்கள், அடுப்புகள், குளிர்பதனப் பெட்டிகள், துவைக்கும் இயந்திரங்கள், துணி மணிகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
பல குடிசைகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்குமா? மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் பணத்தில் இவர்களுக்கு ஒரு சிறிதளவேனும் இழப்பீடு கிடைக்குமா?
கணிப்பொறி, குளிர்பதனப் பெட்டி போன்ற பொருள்கள் வசதி படைத்தவர்களின் உடமைகள் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம். குடிசைகளிலும் இன்று சகஜமாகக் காணப்படும் பொருட்கள் இவை. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தரைத் தளத்தில் இருக்கும் வீடுகளில் இந்தப் பொருள்கள் மீட்க முடியாத அளவு நாசமாகியிருக்கின்றன.
வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ‘பாதுகாப்பாக’ வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரால் கடும் சேதத்துக்குள்ளாகியிருக்கின்றன.
மேற்கு மாம்பலத்தில் தரைத் தளத்தில் வசிக்கும் நண்பர் ஒருவரின் அனுபவம் இது: வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததில் கார், ஸ்கூட்டி, குளிர் பதனப் பெட்டி, எக்கச்சக்கமான புத்தகங்கள், மெத்தைகள் எனப் பலவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சில பொருள்களை மீட்கவே முடியாத நிலை. நஷ்டம் சுமார் பத்து லட்சம் இருக்கும் என்கிறார். இவர் பிறவிப் பணக்காரர் அல்ல. மாதச் சம்பளக்காரர். சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் வாங்கிய பொருள்கள் இவை. இவற்றை எல்லாம் மறுபடியும் வாங்க வேண்டுமென்றால் அவருக்கு மீண்டும் இளமை திரும்பி மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.
இதுபோன்ற நஷ்டங்களுக்கு என்ன பதில்? தரைத் தளத்தில் வசிக்கும் பலரது நிலையும் இதுதான். சென்னையில் இனி யாரும் தரைத் தளத்தில் வீடு கட்டவோ குடி புகவோ கூடாதா? ஏற்கெனவே தரைத் தளங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் எங்கே போவார்கள்?
கடைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும் மிக முக்கியமானது. பெரும்பாலான கடைகள் தரைத் தளத்தில் இருப்பவை. ஏரிகள் திறக்கப்பட்டு வெள்ளம் நகருக்குள் புகுந்தபோது அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவுகளில் இந்தக் கடைக்காரர்களும் அடங்குவார்கள்.
பல கடைகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. கடையில் இருந்த பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. கடைகள் வியாபார மையங்கள்தாம் என்றாலும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருள்களை விற்கும் சேவையை அவை செய்துகொண்டிருக்கின்றன. கடை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சொல்லத் தரமன்று.
இந்தச் சேதங்கள் வரலாறு காணாத மழையால் உருவானவை அல்ல. நீர்நிலைகளைத் திறந்துவிட்டதால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் உருவானவை. நீர்நிலைகளை முறையாகப் பராமரிப்பது, கடும் மழை குறித்த கணிப்புகளை அனுசரித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்வது முதலான எதையுமே உரிய விதத்தில் உரிய முறையில் செய்யாத நிர்வாகத்துக்கு இந்தச் சேதங்களில் பெரும் பங்கு உண்டு. ஹெலிகாப்டர் தரிசனங்களும் உணவுப் பொட்டல வினியோகமும் இவற்றுக்கெல்லாம் இழப்பீடு ஆகிவிட முடியாது.
சாலை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, ஆகியவற்றுடன் எந்தப் பொருளை வாங்கினாலும் செலுத்தும் மதிப்புக் கூட்டு வரி போன்ற பல விதமான வரிகளையும் வரிகளுக்கு அப்பாற்பட்ட ‘கப்பங்களையும்’ கட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நெருக்கடியின்போது அரசிடம் உதவி எதிர்பார்க்க முழு உரிமை உண்டு.
வெள்ளத்தால் சூறையாடப்பட்ட இடங்களை மறு நிர்மாணம் செய்வது என்பது சாலைகள், பாலங்களுடன் முடிந்துவிடும் விஷயமல்ல. சகல விதங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளுக்கு ஈடு செய்வதும்தான். இழந்த பொருள்களை மீண்டும் வாங்குவதற்கும் கடும் சேதமுற்ற வாகனங்களைச் சீரமைக்கவுமான செலவுகளை எல்லாராலும் சமாளிக்க முடியுமா?
உயிர்கள், பயிர்கள், வீடுகள் ஆகியவற்றைப் போலவே பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும் இழப்புதான். குப்பைகளாக மாறிய வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள், முடங்கிக் கிடக்கும் வாகனங்கள், சரக்குகளைப் பறிகொடுத்த கடைகள் ஆகியவற்றின் இழப்புகளைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் அரசு யோசிக்க வேண்டும்.
இழப்பு என்பதன் வழக்கமான வரையறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்த மக்களின் நம்பிக்கையைச் சிறிதளவேனும் புதுப்பிக்க இது உதவும்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in