எத்திசையும்

எத்திசையும்
Updated on
2 min read

நிஜ ‘லைஃப் ஆஃப் பை'

'லைஃப் ஆஃப் பை' படத்தில் நாயகன் பை, மூழ்கும் கப்பலிலிருந்து தப்பிக்க ஒரு படகில் ஏறிச் செல்வான். அப்போது ஒரு புலி அந்தப் படகில் ஏற முயலும். எவ்வளவு தடுத்தும் அது படகில் ஏறிவிடும். அதேபோன்ற ஒரு பயங்கர அனுபவம் சீனாவில் ஒரு மீனவருக்கு நடந்துள்ளது. அந்நாட்டின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் மிங்யூ என்ற அந்த நபர், சென்ற வாரம் உசுலி ஆற்றில் படகில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் நீந்திவந்த சைபீரியப் புலி ஒன்று, அவரது படகில் ஏற முயன்றுள்ளது. மிரண்டுபோன மீனவர், படகில் ஏற விடாமல் அதை விரட்டியிருக்கிறார். அதேசமயம், அதைக் காயப்படுத்தவும் இல்லையாம். தன் முயற்சியில் சற்றும் தளராமல் முயன்ற அந்தப் புலி கடைசியில், ‘சீச்சீ… இந்தப் படகு வழுக்கும்' என்று சலிப்புற்று, நீந்தியே கரையேறியது. அந்தக் களேபரத்திலும் புலியின் 'ஊடுருவல்' முயற்சியைப் படமெடுத்துள்ளார் ஜாங். துணிச்சல்காரர்தான்!

காதலின் வலிமை!

ஆப்கானிஸ்தானில் ஜாக்கியா (18) என்ற சன்னிப் பிரிவைச் சேர்ந்த பெண்ணும், முகம்மது அலி (21) என்ற ஷியா பிரிவைச் சேர்ந்த இளைஞரும் மார்ச் மாதம் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறிக் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆத்திரமடைந்த ஜாக்கியாவின் குடும்பத்தினர், ஜாக்கியா ஏற்கெனவே திருமணமானவர் என்று கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். உண்மையில், அவருக்கு நிச்சயதார்த்தம்தான் செய்யப்பட்டிருந்தது. ஆப்கன் பெண்கள் அமைப்பு மேற்கொண்ட முயற்சிக்குப் பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். “கைதுசெய்யப்படுவதற்கு முன்னால், 100 சதவீதம் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். விடுதலை எனக்கு 1,000 சதவீதம் ஆனந்தத்தைத் தருகிறது” என்று முகம் மலர்கிறார் முகம்மது அலி. வாழவைக்கும் காதலுக்கு ஜே!

ரூ. 57 கோடிக்கு ஏலம் போன ஸ்டாம்ப்

மலைக்க வைக்கும் செய்திதான். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கயானாவில் யாருக்கோ அனுப்பப்பட்ட செய்தித்தாளின் மேல் ஒட்டப்பட்ட அஞ்சல் தலை, சமீபத்தில் ரூ. 57 கோடி மதிப்பில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், முகம்காட்டாத ஒரு பில்லியனர்தான் தொலைபேசிமூலம் இதை ஏலத்தில் எடுத்துள்ளார். தென் அமெரிக்காவின் வட முனையில் உள்ள கயானா நாடு 1966 வரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. அதுவரை அது பிரிட்டிஷ் கயானா என்றே அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்த அஞ்சல் தலையின் மதிப்பு ஒரு சென்ட்தான். 1996-ல் ஸ்வீடன் நாட்டின் அஞ்சல் தலை ஒன்று ரூ. 10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. இன்றைய தேதிக்கு உலகிலேயே மதிப்பு மிக்க பொருள் இதுதான். பழசுக்கு கிராக்கி என்றுமே குறையாது போலும்!

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் ஆஸ்திரேலியர்கள்!

இராக்கில் உச்சத்தை அடைந்துள்ள கலகத்தில் ஆஸ்திரேலியர்களும் பங்கேற்றிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இராக்கிலும் சிரியாவிலும் ஆயுதமேந்தி சண்டையிட்டுவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற சன்னி பிரிவு பயங்கரவாதிகளுடன் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற சுமார் 150 பேர் சேர்ந்துகொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார். இவர்கள் ஆஸ்திரேலியா திரும்பினால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள் ரத்துசெய்யப்படும் என்று தெரிகிறது. ஆரம்பத்தில் மிதவாத மதக் குழுக்களின் அனுதாபிகளாக இருந்த இந்த ஆஸ்திரேலியக் குடிமக்களில் சிலர், அல்-கொய்தா பிரிவின் ஆதரவைப் பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவினருடன் இணைந்து போரிடத் தொடங்கியிருப்பது வருத்தமளிக்கும் விஷயம்தான். பயங்கரவாதத்துக்கு ஏது எல்லை?

கிழக்கு மெக்ஸிகோவில் பெரும் சவக்குழி

மெக்ஸிகோ நாட்டின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓக்ஸாகா மாநிலத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் தொலைபேசியில் இது குறித்துத் துப்புக்கொடுத்தார். தோண்டிப்பார்த்தபோது 28 சடலங்கள் கிடைத்தன. இன்னும் அதிக அளவில் சடலங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போதைப்பொருளுக்குப் புகழ்பெற்ற மெக்ஸிகோவில், இது அசாதாரணமான செய்தி அல்ல. ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் எதிரிகளின் சடலங்களைக் கொத்துக்கொத்தாகப் புதைத்துவைக்கும் வழக்கம் கொண்டவைதான். சமீபகாலமாக இப்படி போலீஸார் தோண்டும் இடங்களிலெல்லாம் நூற்றுக் கணக்கான சடலங்கள் கிடைக்கின்றன. இந்த கும்பல்களைத் தட்டிக்கேட்கும் அப்பாவிகளும் கொல்லப்படுகின்றனர் என்பதுதான் சோகம்.

அங்கோலாவில் அலங்கோலம்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒடேபிரெச் என்ற கட்டுமான நிறுவனம் அங்கோலாவில் ஒரு கட்டுமானப் பணிக்கு அழைத்துச் சென்ற 500 தொழிலாளர்களை, கொத்தடிமைகளாக நடத்தியிருக்கிறது. அங்கோலாவுக்கு இந்தத் தொழிலாளர்களை அழைத்துச் சென்றபோது சாதாரண விசா கோரி அந்த நிறுவனம் விண்ணப்பித்தது. சாதாரண விசாவில் 30 நாட்கள் மட்டுமே அங்கோலாவில் தங்க முடியும். அவர்கள் அங்கு வேலை செய்கிறார்கள் என்று தெரிந்தால் உடனே கைதுசெய்யப்படும் சூழல் வேறு. தொழிலாளர்கள் குறித்து, பி.பி.சி. செய்தியாளர் வெளியிட்ட செய்திக்குப் பின்னர் தாமதமாக விழித்துக்கொண்ட பிரேசில் அரசு, அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கெல்லாம் அந்த நிறுவனம் அசரவில்லை. அதிகாரபூர்வமாக நடவடிக்கைகள் தொடங்கட்டும் பார்க்கலாம் என்கிறது. உலகமெங்கும் தொழிலாளர்கள் நிலை இதுதான் போலும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in