

நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, சாலையோர தெய்வங்கள். இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு – ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன், ஆண்டிபட்டி கணவாய் தர்ம சாஸ்தா, இப்படிப் பல. இப்படித் தெருவோரம் நிற்கும் தெய்வங்கள் அனைத்தும் மரணத்தோடு தொடர்புடையவை. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ திரைப்படம், அப்படியொரு சாலை மரணத்தோடே ஆரம்பிக்கிறது. வாகனப் போக்குவரத்துக்கு நடுவே, ஒரு சிறுமி வலிப்பு கண்டு இறந்துபோகிறாள். ஒரு உயிர் போராடிக்கொண்டிருக்கிற பதற்றம் எதுவுமில்லாமல் வாகனங்கள் தன் போக்கில் போய்க்கொண்டிருக்கின்றன. அவள் ஏறக்குறைய அனாதையாய் இறந்துபோனாள். இறந்த மறுகணமே அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. அவளிடம் கன்னிதெய்வ இயல்புகள் தென்படத் தொடங்குகின்றன. அந்தச் சிறுமி எப்படி கன்னிதெய்வமானாள் என்பதை விலாவரியாய்ச் சொல்ல ஆரம்பிக்கிறது படம். தெய்வமாதல்தான் கதை.
நெல்லை வட்டாரத்தில் இப்படித் தெருதெய்வங்கள் ஏராளம் உண்டு. வண்டிமறிச்சியம்மன் என்பது அவற்றின் பொதுப்பெயர். சாலையில் செல்லும் வாகனங்களை மறித்துப் பயமுறுத்துவது அவற்றின் தொழில். நிறைமாதச் சூலோடு இறந்த பெண்கள், திருமணமாகாமல் இறந்த பெண்கள், பூப்படையாமல் இறந்த பெண்கள் என்று ஒவ்வொரு வண்டிமறிச்சிக்கும் ஒவ்வொரு அழுத்தமான காரணம் உண்டு. இறந்த பின்னும், அவர்கள் தொடர்ச்சியாக, சாலையில் செல்லும் வாகனங்களைக் கைகாட்டி மறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே வெகுஜன பயம். இதனால், வாகன ஓட்டிகள் அந்தந்த இடங்களில் பூடம் அமைத்து வழிபட ஆரம்பிக்கிறார்கள். இது நமக்குத் தெரிந்த கதை.
ஆனால் இந்தத் திரைப்படம், சாலையில் இறந்துபோன ஒரு பெண், அவ்வூர்க்காரர்களுக்கு எவ்வாறு தெய்வமாகிறாள் என்பதை விவரிக்கத் தொடங்குகிறது. இதுநாள் வரை வண்டிமறிச்சிகளைச் சாலையில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நமக்கு ஊருக்குள் அவை என்னவாக இருக்கின்றன என்பதை மாரி செல்வராஜ் சொல்ல ஆரம்பிக்கிறார். இறந்த பின் தெய்வமானவர்களை, ‘கொலையுண்ட தெய்வங்கள்’ என்று ஜோடிப்பது பழைய நாட்டார் அறிஞர்களின் இயல்பு. சாதி காழ்ப்புகளால் வன்கொலை செய்யப்பட்டுப் பின் தெய்வமானவர்கள் தமிழகத்தில் உண்டு. ஆனால், இப்படிக் கொல்லப்பட்டவர்களைவிடவும் தற்செயலாய் இறந்துபோனவர்களே நம்மூரில் அதிகம். நடைவழியில் இறந்தவர்கள், கிணறு போன்ற நீர்நிலைகளில் இறந்தவர்கள், வாகனம் மோதி இறந்தவர்கள், தவறி விழுந்து இறந்தவர்கள் என்று வரிசையாகச் சொல்ல முடியும். கவனிப்பாரின்றி இறந்தவர்கள்! இவர்கள் ஏன் தெய்வமாகிறார்கள், எப்படி ஆகிறார்கள் என்பதை ‘கர்ணன்’ திரைப்படம் விளக்குகிறது.
வலிப்பு வந்து இறந்த சிறுமி தெய்வமாவது எப்படி என்ற கேள்விக்குத் திரைப்படம் இன்னும் இரண்டு தரவுகளைச் சொல்கிறது. ஊரின் சுயமரியாதை பறிபோகிற இடத்திலேயே மிகச் சரியாக அந்தச் சிறுமியும் உயிர்நீத்தாள். இன்னொன்று, ஊர் மக்களின் போராட்டத்தை எவ்வாறு யாரும் பொருட்படுத்தவில்லையோ அதேபோல, அவளது உயிர்ப் போராட்டத்தையும் யாரும் பொருட்படுத்தியிருக்கவில்லை. இதனால், இயல்பாக ஒட்டுமொத்த ஊரின் பிரச்சினையையும் சுட்டுகிற குறியீடாக அந்தப் பெண்ணின் மரணம் உருமாறத் தொடங்குகிறது. அந்தப் பெண்ணின் மரணம் ஊர் மக்களின் நினைவுகளில் படியத் தொடங்குவதைக் கதைப்போக்கு நமக்குச் சுட்டுகிறது. ஒரு குடும்பத்தின் துக்கமாக மட்டுமே இருந்த மரணம் எல்லோரின் துயரமாகவும் மாறத் தொடங்குகிற புள்ளி முக்கியமானது. அதையும் இவ்விரு விஷயங்களே சாத்தியப்படுத்துகின்றன: நீத்த இடமும், பிறரின் பாராமுகமும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வூர் மக்கள் மீட்டெடுக்க விரும்பும் சுயமரியாதையின் பிம்பமாக அவள் உருமாறத் தொடங்குகிறாள்.
இந்த உருமாற்றம், அந்த நிலப்பரப்பில் நிலவும் சமூக உறவுகளில் ஏற்பட்ட கீறல்களை நமக்குத் தெளிவாகச் சுட்டுகிறது. பொடியன்குளத்தவர்களுக்கும் ‘பிறருக்குமான’ மரபான சமூக உறவில் நிகழ்கிற சேதம். வழக்கமாய் பேருந்துகள் அங்கே நிற்காது; அடுத்த ஊரில் (மேலூரில்) போய் ஏறிக்கொள்ளவும் முடியாது. இந்தச் சூழலில் ஏதாவதொரு வாகனத்தைக் கெஞ்சிக் கூத்தாடி நிறுத்தி, வாழ்ந்துவரும் சிறு நம்பிக்கையையும் அந்தப் பெண்ணின் மரணம் சிதைத்துவிடுகிறது. அடித்தள மக்களின் வாழ்க்கை சிறு நம்பிக்கைகளால் நெய்யப்பட்டது. பெரு வேட்கைகள் மறுக்கப்பட்ட சூழலில், கிடைக்கிற உதிரிகளைக் கொண்டு வாழும் வாழ்க்கை அது. வாழ்க்கை என்று சொல்வதை விடவும், உயிரோடு இருக்கும் உத்தி என்று சொன்னால் சரியாக இருக்கும். பேருந்துகள் மறுக்கப்பட்ட உலகில், பிற வாகனங்களை நிறுத்துவதற்கு நீங்கள் ஆயிரமாயிரம் பொய்களையும் பாவனைகளையும் வேடிக்கைகளையும் நவரசங்களையும் காட்ட வேண்டியிருக்கும். இவற்றுள் பிரதானம், நகைச்சுவை!
நகைச்சுவை, ஏதிலிகளின் ஆயுதம். எல்லா நகைச்சுவைக்கும் இரண்டு கதாபாத்திரங்கள் அவசியம். ஒரு நலிந்தவரும், ஒரு ஆண்டையும். நலிந்தவர் காட்டும் வேடிக்கையை, வேடிக்கை என்று உணர்வது ஆண்டையின் பணி. என்றைக்கு ஆண்டை இந்த வேடிக்கையைச் சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கிறாரோ அன்றைக்கு நலிந்தவர்களின் சிறு நம்பிக்கையும் பொய்க்க ஆரம்பிக்கிறது. துர்சம்பவங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன.
நகை, கொடுநகையாக மாற ஆரம்பிக்கிறது. அதுநாள் வரையில் ‘வேடிக்கை’யாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த விஷயம், அவலமாக மாறுகிறது. ஏராளமான நாட்டுப்புறத் தெய்வங்கள் கொடுநகையிலிருந்தும் அவல வேடிக்கையிலிருந்துமே தோன்றுகின்றன. வழக்கமாய், தவறி விழுவதுபோலப் பாவனை செய்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் கோமாளி, ஒருநாள் நிஜமாகவே தவறி விழுந்து துடிப்பதையும் வேடிக்கை என்றே சலிக்கும் அவலமானது வேறெந்த மரணத்தையும்விடக் கொடூரமானது.
மாரி செல்வராஜ் ஆவணப்படுத்தும் கன்னிதெய்வத்தின் கதை இப்படியொரு அவல வேடிக்கைக் கதை. வாகனங்கள் நிற்காத இடத்தில் அவற்றை நிற்கச் செய்வதற்காகக் கிராம மக்கள் செய்யாத சாதனைகள் இருந்திருக்காது. சாலையின் குறுக்கே நின்று தற்கொலைக்கு முயல்வது ஒரு சான்று. கர்ப்பிணி வயிற்றைக் காட்டி இரங்கச் சொல்வது இன்னொன்று. சில நேரங்களில் சாலை நடுவே வலிப்பு வந்ததுபோல நடிக்கக்கூடச் செய்திருக்கலாம். எல்லாமே, ஏதிலிகளின் வேடிக்கை ஆயுதங்கள். இந்த வேடிக்கைகளை உண்மை என்று நம்பி நின்ற வாகனங்களில் ஏறிய பின்பு, அந்தப் பொய்க்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடுகிறது. வாகனம் என்ற ஆண்டையை மசிய வைக்க அடித்தள மானுடர்கள் மேற்கொள்ளும் நலிந்த ஆயுதம் இது.
இதுவொரு சுழல். அதிகாரம் இத்தகைய பொய்களை ஒழுங்கீனமாக நினைப்பதில்லை; மாறாக, ரசிக்கிறது. ஆனால், எப்போது ஆண்டைகள் இந்த ‘ரசனை’யை இழக்க ஆரம்பிக்கிறார்களோ அன்றைக்கு நகை அவலமாகத் திரிகிறது. ‘வலிப்பு வந்ததுபோல நடிக்கிறார்கள்’ என்று தெரிந்தாலும்கூட வாகனத்தை நிறுத்துவதுதான் பாரம்பரிய ஆண்டைத்தனம். என்றைக்கு வாகனங்கள் நிற்கவில்லையோ அன்றைக்கு வேடிக்கை விபரீதமாகத் தொடங்குகிறது. இந்திய நவீனத்துவம் ஆண்டைகளை அழிப்பதை விட்டுவிட்டு, அவர்களது ரசனையை மட்டும் அழித்ததே இந்தக் கொடூரச் சூழலுக்கான காரணம்.
ரசனை இழந்த நவீன ஆண்டைகள், நலிந்தவர்களின் வேடிக்கையை மட்டுமல்லாது அன்றாடத்தையும்கூட சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள். அடித்தள மக்களின் ஒவ்வொரு நகர்வும் பாவனையே என்று கருதத் தொடங்குகிறார்கள். பாவனைகளைக் கொண்டாடும் உணர்வை அவர்கள் ஏற்கெனவே இழந்திருப்பதால் அத்தகைய வேடிக்கையிலிருந்து விலகிச்செல்ல ஆரம்பிக்கிறார்கள். வலிப்பு வந்து துடிக்கிற சிறுமியைக் கண்டு வாகனங்கள் ஒதுங்கிச் சென்றதன் பின்னணியில் செயல்படும் அவலநகை இது. இந்த விலகல்களே மிகப் பெரிய விபத்துகளைத் தோற்றுவிக்கின்றன. இப்போது மிகத் தெளிவாக இரு வேறு பிரிவுகள் துலக்கமாவதை நம்மால் அறிய முடியும். ரசனை இழந்த, நலிந்தவர்களை ஆதியோடு அந்தமாய் சந்தேகப்படும் பழைய ஆண்டைகள்; சிறு நம்பிக்கைகளும் பொய்த்துப்போனதால், சுயமரியாதை வேட்கை கொண்ட, பழைய அடித்தள மக்கள். பழைய ஆண்டைகள் எல்லாவற்றையும் கொடுநகையாகக் கணித்து விலகத் தொடங்குகிறார்கள். பழைய அடித்தள மக்களை அவலங்கள் சூழத் தொடங்குகின்றன. ஏன் தங்களது அவலம் பிறரின் கண்களுக்குத் தெரிவதில்லை; ஏன் அவர்கள் நம்மை நம்புவதில்லை; ஏன் இதைக் கொடூரம் என்று கருதுவதில்லை; அவல நகைச்சுவையாகக் கருதி இதையும் கடந்துபோக அவர்களால் எப்படி இயல்கிறது என்று தொடர்ச்சியாகக் கேள்விகள். இதற்கெல்லாம் விடை கிடைக்காதபோது தெய்வங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள். உண்மையில், தெய்வம் என்பது பதிலளிக்கப்படாத கேள்விகள் மட்டுமே!
இத்தகைய உடைசலுக்குப் பின், ஒரு குக்கிராமத்தில் நிகழும் அடுக்கடுக்கான சம்பவங்களை ‘கர்ணன்’ திரைப்படம் பதிவுசெய்யத் தொடங்குகிறது. அவ்வனைத்து சம்பவங்களும் ஒரே விஷயத்தை மையமிட்டுச் சுழல்கின்றன: சுயமரியாதை!
கிராமம் என்ற பாரம்பரியப் பிடியிலிருந்து வருந்தலைமுறை வெளியேறிவிட வேண்டும் என்பதே அவ்வூரின் சுயமரியாதை வேட்கையாக இருக்கிறது. கிராமம் என்பது கொடுங்கனவு. இதைச் சரியாக விளங்கிக்கொண்ட பாரம்பரிய அதிகாரம், வாகன வசதியைத் தடைசெய்கிறது. இதன் மூலம் கிராமத்தை ஒரு பெரும் சிறைக்கூடமாக மாற்றியமைக்க முடிகிறது. படம் நெடுக சுயமரியாதைக்கான வேட்கை கரைபுரண்டோடுவதை நீங்கள் பார்க்கலாம். எல்லாத் தளத்திலும் அவர்கள் தங்களுக்கான அந்தஸ்தை மட்டுமே கோருகிறார்கள்; சலுகைகள் அல்ல, மரியாதையே வேண்டும் என்பதுதான் ‘கர்ணன்’ படத்தின் ஆகப் பெரிய செய்தி!
– டி.தருமராஜ், ‘தமிழ் நாட்டுப்புறவியல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: dharmarajant@yahoo.co.in