Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

சட்டமியற்றும் அதிகாரம் எதுவரை?

கடந்த பிப்ரவரி 26 அன்று தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவசரம் அவசரமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்குத் தற்காலிகமாக 10.5% உள் இடஒதுக்கீட்டுக்கு வகைசெய்யும் அந்தச் சட்ட வரைவுக்கு அடுத்த இரண்டாவது நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்து, அதே நாளில் அரசிதழிலும் வெளியாகிவிட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் தேர்தல் அரசியலுக்கானது என்ற விமர்சனத்தை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தால் மாநிலச் சட்டமன்றங்கள் எந்தவொரு சட்டத்தையும் ஒருசில மணி நேரங்களில் இயற்றி நடைமுறைப்படுத்திவிட முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான்கு மாதங்களுக்கு முந்தைய நிகழ்வொன்றையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் அவ்வளவு எளிதில் ஒப்புதல் அளித்துவிடவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சி ஆளுநரை வலியுறுத்தியபோதும் பயனில்லை. ஒன்றரை மாத இழுத்தடிப்புக்குப் பிறகு நிர்வாகரீதியில் அந்த முடிவைச் செயல்படுத்துவதற்கு அரசாணை வெளியானது. உடனே, ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துக்காக ஆளுநர் காத்திருந்ததாகவும் கிடைத்தவுடன் அவர் உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் விளக்கம் தரப்பட்டது. சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், மாநில அரசு அரசாணை வெளியிட்டால் அது செல்லுபடியாகுமா என்பது மிக முக்கியமானதொரு அரசமைப்புச் சட்டக் கேள்வி. ஆனால், ஆளுநர் அலுவலகத்தின் விளக்கத்தால் அந்தக் கேள்விக்கு வாய்ப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டுவிட்டது.

தடைக்கல்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 162, மாநில அரசுக்கான வகைமைகளின் கீழ் சட்டம் இயற்றிக்கொள்வதற்கான அதிகாரத்தை முதல்வருக்கு அளிக்கிறது. ஆனால், பொதுப் பட்டியலில் அடங்கியுள்ள வகைமைகளைப் பொறுத்த அளவில், ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்துக்கும் மாநில அரசின் சட்டத்துக்கும் முரண்பாடுகள் எழுந்தால், ஒன்றிய அரசின் சட்டமே செல்லுபடியாகும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. மாநில அரசுக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தைக் கூறு 162 உறுதிசெய்தாலும், அதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கும் கூறு 200 ஒரு தடைக்கல்லாகவும் அமைந்திருக்கிறது.

மாநில அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர்களுக்கு நான்கு விதமாக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அச்சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு அனுப்பலாம். குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கலாம். மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டத்தைத் திருப்பியனுப்பலாம். விளக்கம் கேட்டு அனுப்பிவைக்கும்போது சில திருத்தங்களுடன் அந்தச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பிவைப்பது காலதாமதப்படுத்துவதற்கான சட்டரீதியான ஒரு வாய்ப்பு. ஒப்புதலுக்கான காத்திருப்புக் காலத்தில் சட்டத்தைத் திருப்பியனுப்புவது என்பது சட்டரீதியில் அந்தச் சட்ட வரைவு இறந்துவிட்டது என்பதையே குறிக்கும். மீண்டும் ஒரு முறை அது ஆளுநருக்குப் புதிதாகவே அனுப்பப்பட வேண்டும். ஆளுநரின் இந்தத் தன்விருப்புரிமை அதிகாரம் கேள்விக்கு உட்பட்டது அல்ல.

7.5% இடஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளில் ஒருவர் கிராமப்புற மாணவர்களின் நிலையைச் சொல்லிக் கண்கலங்கினார் என்பது செய்தியானது. அதற்கடுத்த விசாரணையில் கூறு 200-ஐ மட்டுமல்லாது கூறு 361-ஐயும் துணைக்கு அழைத்திருந்தார் அட்வகேட் ஜெனரல். கடமையிலிருந்து தவறியதற்காகக் குடியரசுத் தலைவரையோ ஆளுநரையோ நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது என்கிறது கூறு 361. எனவே, கூடியவரையில் விரைந்து முடிவெடுப்பதே கூறு 200-ன் உள்ளடக்கம் என்றும் அரசமைப்புச் சட்டப் பொறுப்புகளை ஏற்பவர்கள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்வார்கள் என்றே அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் நம்பினார்கள் என்றும் உரை விளக்கத்தை மட்டுமே உயர் நீதிமன்றத்தாலும் அளிக்க முடிந்தது. கேள்வி கேட்க இயலாவிட்டாலும் சுட்டிக்காட்டவேனும் முடிந்ததே என்றுதான் மனநிறைவு கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களில் தமிழ்வழி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் காலதாமதமாவது குறித்தும் அதே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதே நீதிபதிகள். முன்னுரிமை கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள் என்றாலும் உத்தரவிட முடியாது என்பதுதான் உண்மை நிலை.

தாமதங்கள்

குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பப்பட்ட சட்ட வரைவுகளுக்கு உடனடியாக அவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம். குறிப்புகளுடன் மீண்டும் திருப்பியனுப்பவும் செய்யலாம். குடியரசுத் தலைவரால் அவ்வாறு திருப்பியனுப்பப்பட்ட சட்ட வரைவுகளை ஆறு மாத காலத்துக்குள் மாநில சட்டமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, புதிய சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கால வரையறை என்பது சட்டமன்றங்களுக்குத்தானேயொழிய ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அல்ல. மறுமுறை இயற்றப்பட்ட சட்ட வரைவுகளுக்கான ஒப்புதல்களுக்கும்கூட இதே வழியில் தாமதங்கள் நேரலாம்.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது தமது கருத்து கேட்டு ஆளுநர்களிடமிருந்து வந்த சட்ட வரைவுகளில் சுமார் 80% வரைவுகளுக்கு அனுமதியளித்தார். ஒப்புதலை நிறுத்திவைத்துக்கொண்டது 10%, குறிப்புகளுடன் திருப்பியனுப்பியதும் உண்டு. பிரணாப் முகர்ஜியின் காலத்தில் அவ்வாறு கருத்து கேட்டு அனுப்பப்பட்ட மாநிலங்களில் முதலிடம் வகித்தது மஹாராஷ்டிரம், இரண்டாவது கர்நாடகம், மூன்றாவது தமிழ்நாடு. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட சட்ட வரைவுகள் எதுவுமே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல் போனது.

சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் விளக்கங்கள் கேட்டு அனுப்புவது அவ்வப்போது நடப்பதுண்டு. தங்களது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருப்பியனுப்புவது வழக்கமில்லை என்றாலும், அதுவும்கூட நடக்கத்தான் செய்கிறது. கடந்த 2018-ல் கேரளத்தில் தொழிற்கல்வி கல்லூரிகள் (மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளை வரன்முறைப்படுத்துதல்) சட்டத்தை ஆளுநர் தன்னுடைய விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருப்பியனுப்பிவிட்டார்.

அவசரச் சட்டம்

இந்த நேரத்தில் தமிழகம் தழுவிய அளவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டமும் அதையொட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டமும் நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி. ஒன்றிய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்துக்கு மாநில அளவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு உடனடியாக ஆளுநரும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தனர். ஆனால், அதற்காக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரின் ஆதரவையும் உள் துறை அமைச்சகத்தின் ஆதரவையும் பெற வேண்டியிருந்தது. 2014-ம் ஆண்டிலேயே இத்தகைய அவசரச் சட்டம் ஒன்றுக்கான முயற்சிகள் நடந்தாலும் அதற்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது நினைவுபடுத்தினார்.

இதுதான் மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தின் வரம்பு. நெருக்கடியான நிலைகளில் ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகவும் வேண்டியிருக்கும். அதற்கான சூழலை அரசமைப்புச் சட்டமே ஏற்படுத்திவைத்திருக்கிறது. மறுத்து நின்றால், பத்தரைகளை அல்ல, ஏழரைகளின் அனுபவங்களையே ஆளுநர்கள் ஏற்படுத்துவார்கள்.

(தொடரும்)

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x