Published : 04 Dec 2015 11:17 AM
Last Updated : 04 Dec 2015 11:17 AM

நிமிடக் கட்டுரை: சாப்பாடு முக்கியம்!

நீங்கள் விரைவிலேயே அப்பாவாகப் போகிறீர்களா, அப்படியானால் சில வினாடிகளை இந்த ஆய்வு முடிவைப் படிக்க ஒதுக்குங்கள். ஆஸ்திரேலியாவின் ‘ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ என்ற அறிவியல் ஆய்வுக் கழகம் உங்களிடம் சொல்ல சில செய்திகளை வைத்திருக்கிறது. அம்மாவின் உணவுப் பழக்கம், தூக்கம், மனநிலை ஆகியவை நல்ல நிலையில் இருந்தால் குழந்தை ஆரோக்கிய மாகவும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் அறிவுக்கூர்மையுடனும் இருக்கும் என்று ஆய்வு முடிவுகளில் இருந்து அறிந்திருந்தார்கள். முதல் முறையாக, குழந்தைக்குத் தகப்பன்மார்களையும் சில ஆய்வுகளுக்கு உள்படுத்தியபோது அவர்களுடைய சாப்பாட்டைப் பொறுத்தும் குழந்தையின் மனநிலை அமையும் என்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்திருக் கிறார்கள். அன்டோனியோ பவ்லோனி என்ற அறிஞரின் தலைமையிலான ஆய்வுக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆண் எலிகளை இரண்டு பிரிவாகப் பிரித்து ஒரு குழுவுக்கு அளவுக்கு அதிகமாக உணவைக் கொடுத்தார்கள். மற்றொரு குழுவுக்கு 25% கலோரிகள் குறைவாக இருக்கும் உணவைக் கொடுத்தார்கள்.

தகப்பன் எலிகளுக்குத் தங்களுடைய குட்டி எலிகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். தாய் எலியின் உணவையும் குணங்களையும் மாற்றாமல் பராமரித்தார்கள்.

கலோரிகள் குறைவாக உண்ட ஆண் எலிகள் மூலம் பிறந்த குட்டிகள் உடல் எடைக் குறைவாகவும், பதற்றம் அல்லது அச்ச உணர்வு சற்றே குறைவாகவும் காணப்பட்டன. இன்னொரு வகைக் குட்டிகள் சாதாரணமாகக் காணப்பட்டன. ஒரு தலைமுறையின் உணவுப் பழக்கம் இன்னொரு தலைமுறையைப் பாதிப்பதை இதிலிருந்து அறிய முடிகிறது என்றார் பவோலினி. உணவுக் குறைவால் எலிகளின் உணர்ச்சிகளிலும் மாற்றம் தெரிவது எச்சரிக்கை தரும் அறிகுறியாகும். சிறு வயதிலேயே குழந்தைகள் உடல் பருமனடைவது போன்றவை அக் குழந்தையின் தனிப்பட்ட உணவுப் பழக்கத்தால் அல்ல; அதன் தாய் மற்றும் தந்தையின் உணவுப் பழக்கத்தாலும் என்பது புரிகிறது.

உணவில் கலோரி குறையும்போது - அது குழந்தையோ, எலியோ - தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை அதிகம் பெறுகிறது. சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக் கிறது. உண்ணக்கூடியது என்று தோன்றுவதை எடுத்து உண்டுவிடுகிறது. இதற்காகச் சிறிய சாகசங்களைக்கூட செய்யத் தயங்குவதில்லை. ஆபத்தான இடத்தில் விளையும் கனிகள், கிழங்குகள் போன்றவற்றைத் தேடிச் சாப்பிடுவது, உடலுக்கு அல்லது உயிருக்கு நல்லதா, கெட்டதா என்று தெரியாததைக்கூடச் சாப்பிட்டுப் பார்த்துவிடுவது என்று தீர்மானிப்பது என்று இடர்களைச் சந்திக்கவும் தயாராகிறது.

இப்போதைய உலகில் உணவு அபரிமிதமாக இருக்கிறது. விதம் விதமாகவும் பல்வேறு சுவை களிலும் கிடைக்கிறது. உணவு நிறைய இருக்கிறது, அது நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியுள்ள குழந்தைகளின் மன நிலையும், அடுத்த வேளைக்குச் சாப்பிட எது கிடைக்குமோ என்று அஞ்சும் குழந்தை களின் மனநிலையும் வெவ்வேறானவை. உணவு கிடைப்பது நிச்சயம் இல்லை என்றால் அக் குழந்தை பதற்றத்துக்கு ஆளாகிறது. இவ்வகைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சமுதாயத்துக்கும் நல்லதல்ல. ஒரு சிறிய ஆராய்ச்சி சமூகத்துக்கே பெருத்த எச்சரிக்கையான முடிவு களைக் கொண்டு சேர்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x