Last Updated : 12 Apr, 2021 03:18 AM

Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

அரசு நிர்வாகத்துக்கு விடுமுறையா?

தஞ்சை விவசாயிகளின் சமீபத்திய போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பெருமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக, மார்ச் 29-ல் விவசாயிகள் அறிவித்திருந்தனர். சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அதற்குப் பிறகு ஏப்ரல் 9-ல் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்த நிலையில், அரசுத் தரப்பிலிருந்து வேளாண் துறை அதிகாரிகள், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வராததால் ஏப்ரல் 16-க்கு மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அன்றைக்கும்கூட அதிகாரிகள் வருவார்களா என்பது சந்தேகம்தான். வந்தாலும், அவர்கள் இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகளைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள் தேர்தல் முடிவு வெளிவரும் வரைக்கும் முடிவெடுப்பதை ஒத்திப்போடவே செய்வார்கள். மழையால் பாதிக்கப்பட்டு, நிவாரணத்துக்குக் கையேந்தி நிற்கும் விவசாயி அதுவரையிலும் காத்துக்கிடக்க வேண்டியதுதான். தேர்தல் முடிவுக்கான நீண்ட காலக் காத்திருப்பு இப்படி ஒவ்வொரு சாமானியரின் வாழ்க்கையிலும் விளையாடிக்கொண்டிருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் தலைமைச் செயலகம் தொடங்கி ஒரே ஒரு ஊழியரைக் கொண்ட உள்ளூர் அலுவலகம் வரை பெரும்பாலான பணிகள் ஸ்தம்பித்திருக்கின்றன.

ஒத்துழைப்பு தராத ஊழியர்கள்

ஓர் உதாரணம். சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் இயங்கும் அரசு இயக்குநரகம் ஒன்றில் 67 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் 7 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். அவர்களில் இரண்டு பேர் தட்டச்சர்கள், ஏனைய ஐவருமே அலுவலக உதவியாளர்கள். முக்கியப் பணிகளைச் செய்யும் 60 பேரும் அயல்பணி ஒப்படைப்பு முறையில் (அவுட்சோர்ஸிங்) தற்காலிக அடிப்படையில் பணிபுரிபவர்கள். இவர்களையெல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரோ மற்றொரு துறையின் இயக்குநர். கூடுதல் பொறுப்பாக அவருக்கு இத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை அவரை அலுவலகத்தில் பார்ப்பதே ஆச்சரியம். அவசரமாக ஏதேனும் கையெழுத்து வாங்க வேண்டும் என்றால், அவரது அலுவலகத்துக்குக் கோப்புகளைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல, பெரும்பாலான அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

ஊழியர்களே வலியப்போய்ப் பணிபுரிவதற்குத் தயாராக இருந்தாலும், தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் அவர்களுக்கு அலுவலக உதவியாளர்களிடமிருந்தே ஒத்துழைப்பு கிடைக்காது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே இந்த நிலையில் இருந்துவந்த அலுவலகங்கள், தேர்தலுக்குப் பின்பு முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன. ஐஏஎஸ் நிலையில் இருக்கும் உயர் அதிகாரி சொன்னாலுமேகூட, அலுவலகப் பொறுப்பில் இருப்பவர்கள் உடனடியாக எதையும் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால், அவருக்குத் தோதாக ஒரு பதிலைச் சொல்வதற்காகக் கோப்புகளைப் புரட்டிப்பார்க்க மட்டும் செய்வார்கள்.

அரசு உயர் அதிகாரிகளிடமும்கூட இதே அணுகுமுறைதான். அமைச்சர் அவரது துறைசார்ந்த அதிகாரிக்கு ஏதேனும் குறிப்புகள் சொன்னால், உடனடியாகக் கேட்டுக்கொள்வார்கள். நிச்சயமாக எதற்கும் மறுப்புத் தெரிவிக்க மாட்டார்கள். கோப்புகளைத் தேடிப் பிடித்துப் படிக்கவும் செய்வார்கள். பரிசீலிப்பதாகவும் பதில் வரும். ஆனால், எதுவும் நடக்காது. இந்த நிலைமை அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்பதால், அவர்களும் பரிந்துரைக்கும் பணிகளைத் தவிர்க்கிறார்கள்.

ஏன் இந்நிலை?

தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடுகின்றன; இந்த நாட்களில் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி முதல்வர் வரை கிட்டத்தட்ட எல்லோருமே பெயரளவிலேயே பதவியில் நீடிக்கின்றனர். நிதி ஒதுக்கும் அதிகாரம் கிடையாது என்பதால், புதிய திட்டங்களை அவர்கள் அறிவிக்க முடியாது. சட்டமன்றம் கூடவில்லை என்பதால் சட்டமியற்றவும் முடியாது. அமைச்சரவைக் கூட்டங்கள் நடக்காது என்பதால் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் அரசு நிர்வாகப் பணிகள் அதே போக்கில் நடந்துகொண்டிருக்க வெறும் பார்வையாளர்களாக மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். காலத்தின் தேவை கருதி அதிகாரிகள் எடுக்கிற அவசர கால முடிவுகள் அமைச்சரவை வாயிலாக அறிவிக்கப்படும் வழக்கம் இன்னும் தொடர்கிறது என்றாலும் அந்த முடிவுகளில் தலையிடுவதற்கான அதிகாரமும்கூட பொதுவாக விரும்பப்படுவதில்லை.

பதிலற்றுப்போன அரசுத் தரப்பு

கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும்கூட அரசு தொடர்புடைய வழக்குகள் இணையவழி விசாரணைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பணியில் தொடர்ந்தாலும் அவர்கள் அரசின் தரப்பைச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இருந்தால், கொள்கை முடிவுகளிலும் மாற்றங்கள் வரலாம், வழக்குகளைக் கையாளும் முறைகளிலும் மாற்றங்கள் வரலாம். எனவே, கரோனாவால் ஏற்கெனவே தடைபட்டு நிற்கும் நீதிமன்ற விசாரணைகள் தேர்தல் முடிவுக்கான காத்திருப்புக் காலத்தில் மேலும் தடைபடவே நேரும். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசு வழக்கறிஞர்களும் மாறுவார்கள் என்பதால், அரசுத் தரப்பு என்பது தற்போது வெறும் பெயரளவுக்கே. அரசிடம் கேட்டுப் பெற முடியாததை, நீதிமன்றத்தை அணுகி உத்தரவிடச் சொல்லவும் வாய்ப்பில்லாத நிலை.

ஆட்சிப் பணித் துறை, காவல் பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பணியிடங்கள் மாறும் சூழல் ஏற்படலாம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு மாதங்களில் பணியிட மாற்றங்களைச் சந்தித்தவர்கள், அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு மாறுதலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில், எப்படிச் செயலாற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? ஆட்சிப் பணி அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணிபுரியும் துறைகளுமேகூட மாறக்கூடும்.

காவல், கல்வி, சுகாதாரம்

தேர்தலுக்குப் பிந்தைய காத்திருப்புக் காலத்தில் ஓய்வெடுக்காமல் செயல்பட்டாக வேண்டிய நிலையில் இருப்பது காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவுகள்தான். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அமைச்சர்கள் தலையீடுகள் இன்றி அதிகாரிகளே சுயமாக முடிவெடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அதன் சாதக பாதகங்கள் அதிகாரிகளைப் பொறுத்தது. கரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் ஏற்கெனவே இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த அதிகாரி ஒருவர் செயலராக இருப்பது நல்லதாகிவிட்டது. இரண்டாம் அலையால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சென்னைப் பெருநகரத்தின் ஆணையருக்கும்கூட ஏற்கெனவே நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவங்கள் வழிநடத்தக்கூடும். ஒருவேளை தேர்தல் காலத்தில் இத்தகைய அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டிருந்தால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும்கூட கேள்விக்குள்ளாகியிருக்கக் கூடும்.

மாற்றம் தேவை

தேர்தல்கள் அறிவிப்புக்கும் முடிவுக்குக்கும் இடையிலான கால அவகாசம் குறைக்கப்பட வேண்டும்; தேர்தலின் பெயரால் அரசு நிர்வாகம் பாதிக்கப்படாத நிலையை நாம் உருவாக்க வேண்டும். மேலும், பதிவுக்கும் முடிவுக்கும் இடையிலான தாமதம் மக்களின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உலகின் மூத்த ஜனநாயகமான அமெரிக்காவில் 2020 தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தாமதமானது உலகளவில் பேசுபொருளானது. இத்தனைக்கும், வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். பெருந்தொற்றுக் காலம் என்பதால் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை அதிகமானது வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்திவிட்டது. அதற்கும் முந்தைய ஆண்டில், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவில் தேர்தல் முடிவு தாமதமாவதன் காரணமும்கூட உலகளவில் விவாதிக்கப்பட்டது. நியாயமான காரணங்கள் நிறையச் சொல்லப்பட்டன. ஆனால், காரணங்களுக்கு வெளியே தாமதத்தைக் குறைப்பதற்கு நாம் தேர்ந்தெடுத்திருக்கும் இயந்திர வாக்குப்பதிவு முறையும் வளர்ந்துகொண்டேயிருக்கும் தகவல் தொழில்நுட்பமும் இன்று பெரிய சாத்தியங்களை நமக்கு அளிக்கிறது. நம்முடைய தேர்தல் ஆணையம் இன்னும் திட்டங்களைத் துல்லியமாக்க வேண்டும்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x