Published : 11 Apr 2021 03:15 am

Updated : 11 Apr 2021 05:46 am

 

Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 05:46 AM

‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை!

temples

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிப்பதற்காக ஒரு இயக்கத்தை ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். அதற்கு ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற புதிய நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இந்து சமயத் தலைவர்கள் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்துக் கோயில்கள் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற ஒரு தொனி இவ்வியக்கத்தால் எழுப்பப்பட்டுள்ளது.

கோயில்கள் இந்து சமய அறநிலைய வாரியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்துக்களுடைய மதவுரிமை பறிக்கப்படுவதாகப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்து சமயக் கோயில்களில் சீர்திருத்தங்கள் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சிலவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருந்து அறநிலைய வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது ரத்துசெய்யப்பட்டது (சுப்பிரமணியன் சுவாமி, 2014). ஆனால், அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் சட்டப்படி தவறு என்ற காரணத்தைவிட, ஏற்கெனவே இந்தப் பிரச்சினையில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்போது, மீண்டும் அதற்கு விரோதமாக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தொனியில்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.


அனைத்துத் தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்ற அறநிலையச் சட்டத்தின் திருத்தத்தை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், ஆகம விதிகளின்படியே நியமங்கள் இருக்க வேண்டும் என்றும், அதன்படி பரம்பரையாகப் பூஜைசெய்யும் அர்ச்சகர்களை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பளித்தது (சிவாச்சாரியார் வழக்கு 2015). கோயில் சிலைகள் கடத்தல் வழக்கின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில், பலரும் இதற்குக் காரணம் கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் என்று கூற முற்பட்டனர்.

அரசின் நிர்வாகத்தில் ஆலயங்கள்

இந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பிடித்த கிழக்கிந்திய கம்பெனி, 1789-ல் வருவாய் வாரியத்தை உருவாக்கியது. அதன் கீழ், VII-வது ஒழுங்குமுறை விதிகள் 1817-ல் உருவாக்கப்பட்டு, இந்துக் கோயில்கள் நிர்வாகமானது வருவாய் வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இம்முறை 1839 வரை நீடித்தது. 1858-ல் விக்டோரியா மகாராணியிடம் கிறித்துவ அமைப்புகள் புகார் அளித்த பிறகு, கிறித்துவ மதம் சாராத மற்ற விஷயங்களில் கம்பெனியாரும் தங்களது அதிகாரிகளும் தலையிடக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. அதன் பின்னரே, பல கோயில்களின் நிர்வாகத்தைப் பல்வேறு உள்ளூர் குழுக்களின் பொறுப்புகளில் ஒப்படைத்துவிட்டு ஆங்கிலேய நிர்வாகம் ஒதுங்கிக்கொண்டது. தர்மகர்த்தாக்களின் செயல்பாடுகளில் சிக்கல்கள் எழும்போதெல்லாம் சிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, நிர்வாக அமைப்பு சீரமைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பல திருக்கோயில்கள் அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்களும் சொத்துக்களும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன. கோயில்களுக்கு உண்டான சம்பிரதாயங்கள் (அனுஷ்டானங்கள்) முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. 1925-ல் நீதிக் கட்சி அரசு, இந்து அறநிலைய மசோதாவை உருவாக்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர் 1951-ல் இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்டது. 1956-ல் மாநிலங்கள் சீரமைப்புக்குப் பின்னர் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டபோது, அங்கு மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் நிர்வாகங்கள் அரசுப் பொறுப்புக்கு வந்தன. கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட பிறகு, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தில் இருந்த கோயில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன.

1959-ல் புதிய இந்து அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்டுக் கோயில் நிர்வாகங்கள் அறநிலைய வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1951-ம் வருடத்திய சட்டத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது (சிரூர் மட வழக்கு, 1954) என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சடங்குகளில் தலையிட முடியாது

மன்னர்கள் கோலோச்சியதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சியைத் தொடர்ந்து, இன்று வரை அரசாங்கக் கட்டுப்பாட்டில்தான் இந்துக் கோயில்களின் நிர்வாகங்கள் இருந்துவந்துள்ளன. அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சமயம் சார்ந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் நடத்துவது பற்றித் தலையிடுவதற்கு அரசுக்கு அதிகாரமில்லை.

தற்போது சுமார் 44,000 கோயில்களை அறநிலையத் துறை நிர்வகித்துவருகிறது. கோயில்களை நிர்வகிப்பதற்கான நிதி, உண்டியல் காணிக்கைகளிலிருந்துதான் கிடைக்கிறது. தற்போது கிட்டிய தகவல்படி 300 பெரிய கோயில்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேலும், 650 கோயில்களில் ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரையும், 35,000 கோயில்களில் ரூ.10,000 வரையும் வருமானம் கிட்டுகிறது. கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் (நஞ்சை, புஞ்சை, மானாவாரி) 5 லட்சம் ஏக்கர்களும், அதற்குச் சொந்தமான 22,600 கட்டிடங்களும், 33,655 மனைகளும் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் செயல் அலுவலர்களின் ஊதியத்தை அளிப்பதற்கு இயலாது. இது தவிர, கோடிக்கணக்கில் கோயில் உற்சவங்களுக்கும் பூஜைகளுக்கும் செலவிட வேண்டியுள்ளது.

இந்துக்கள் மட்டுமே ஊழியர்கள்

இந்துக்கள் அல்லாதவர்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்பதால், இந்து அறநிலைய வாரியத்தின் ஆணையர் தொடங்கி, செயல் அலுவலர்கள் வரை அனைவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் விதிவிலக்கு உண்டு (கூறு 16(5)).

இந்து அறநிலையச் சட்டத்தின் 34-ம் பிரிவின்படி அரசு ஒப்புதல் இல்லாமல் கோயில் நிலங்களை விற்பதோ (அ) நீண்ட காலக் குத்தகைக்கு விடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், கோயில் நிலங்களுக்கு நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோயில் மனைகளில் நிரந்தரமாகக் கூடாரமிட்டிருப்பவர்களை வெளியேற்றும் வகையில், நகர்ப்புறக் குத்தகைக்காரர் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இருக்கும் குடித்தனக்காரர்கள் வெளியேறாமல் வழக்குத் தொடுப்பதைத் தடுக்கும் விதமாக வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதால், இந்து அறநிலையத் துறை ஆணையர்களுக்கே கோயில் சொத்துக்களிலிருந்து வெளியேற்ற உத்தரவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கோயில்களில் நியமனக் காரியங்களைக் கவனிப்பதற்கான அறங்காவலர் குழு செயல்படாதபோது, செயல் அலுவலரையே தக்காராகச் செயல்பட சட்டம் வழிவகுத்துள்ளது. மேலும், நியமிக்கப்படும் அறங்காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்படுகின்றனர். கோயில்களை நிர்வகிப்பதற்கான செலவீனமாகக் கோயில் வருமானத்திலிருந்து 2 - 8% வரை நிர்வாகச் செலவுத் தொகை வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, ரூ.10,000 ஆண்டு வருமானம் வரக்கூடிய 80% கோயில்களில் நிர்வாகச் செலவுக்கான தொகை ரூ.200 மட்டுமே. இதற்காகவே சிறிய கோயில்களாக இருப்பினும் அவற்றில் ஒரு வேளை விளக்கேற்ற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.1 லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதன் வட்டியில் அந்தக் கோயில்கள் நடத்தப்பட்டுவருகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள்

இந்தச் சூழ்நிலையில், 2020-ம் வருட இறுதியில் இரண்டு உயர் நீதிமன்றங்களில் இந்துக் கோயில்கள் பற்றி கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. முதல் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு (செப்டம்பர் 2020). இது பழனி முருகன் கோயிலில் தூய்மைப் பணி ஆற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் செயல் அலுவலரின் அறிவிக்கையை எதிர்த்த வழக்காகும். கடந்த 9 வருடங்களாக அறங்காவலர்களை நியமிக்காமல், அறநிலையத் துறை அதிகாரி ஒருவரே செயல் அலுவலராகவும், கோயிலின் தக்காராகவும் செயல்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அறங்காவலர்களை நியமிக்காததைப் பற்றிக் கண்டித்ததோடு, கோயிலுக்கான தூய்மைப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிக்கையையும் ரத்துசெய்தது.

இந்த வழக்கில், இந்துக் கோயில்கள் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் நிர்வாகத்தில் செயல்பட்டுவருவது தவறு என்றும், அதனால் கோயில்களின் புனிதம் கெட்டுப்போவதாகவும், விரைவில் கோயில்களை இந்து மதத்தில் நம்பிக்கை இருக்கும் நேர்மையானோர்களின் பொறுப்பில் விட்டுவிடுவது நல்லது என்றும் அறிவுரை வழங்கினார் நீதிபதி. இந்தத் தீர்ப்பை முதலில் வரவேற்ற சுப்ரமணியன் சுவாமி, தனது ட்விட்டரில் இவ்வாறு தெரிவித்திருந்தார்: “உயர் நீதிமன்றத் தீர்ப்பு அற்புதமானது. மற்ற இந்துக் கோயில்களை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான அஸ்திவாரத்தைப் போட்டுள்ளது”.

தமிழ்நாட்டில் இந்து சமயக் கோயில்கள் பற்றிய நடவடிக்கைகளில் அதி தீவிர ஈடுபாட்டைக் காட்டிய சுப்பிரமணியன் சுவாமி, இமயமலை சூழ்ந்த மாநிலமான உத்தராகண்டிலும் ஒரு வழக்கைத் தொடுத்தார். உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள நான்கு முக்கியக் கோயில்கள் ‘சார் தாம்’ என்று அழைக்கப்படும். அவை: கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி. இவற்றுடன் மேலும் 51 கோயில்களையும் சேர்த்து, ஒன்றாக நிர்வகிக்க அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்தியது. அந்தச் சட்டத்தின் பிரிவுகள் கிட்டத்தட்ட தமிழ்நாடு அறநிலையச் சட்டத்தின் பாணியில்தான் அமைந்தது. இதுவரை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொண்டதை எதிர்த்து சிலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளோடு தன்னையும் பிணைத்துக்கொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமி மனு போட்டார்.

இவற்றை விசாரித்த தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, 2019-ம் வருடத்திய உத்தராகண்ட் ‘சார் தாம்’ தேவஸ்தானங்கள் நிர்வாகச் சட்டம் செல்லும் என்று அறிவித்தது. (ஜூலை 2020). இந்துக் கோயில்கள் எந்தத் தனிநபருக்கும் சொந்தமல்ல என்றும், அவை எப்போதும் அரசுக் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளன என்றும், கங்கோத்ரி, யமுனோத்ரி என்று புனித நீர்நிலைகளை மக்கள் வழிபடும்போது அந்த நதிகளுக்கு எவரும் சொந்தக்காரர்கள் இல்லை என்றும், மேலும் கோயில்கள் ஆண்டுக்கணக்காக நிர்வாகமின்றிச் சீரழிந்துபோவதையும் அதிலுள்ள வருமானங்களைச் சிலர் அபகரிப்பதையும் பக்தர்களுக்கு வழிபட மேலும் மேம்பாடுகள் செய்வதற்கு ஒரு நிர்வாக அமைப்பை அரசு உருவாக்குவது தவறில்லை என்றும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு செய்தபோதும், அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.

சங்க பரிவார அமைப்புகளுக்கு உள்ளே அரசின் முடிவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பின் விளைவாக இப்போது பாஜக அரசு தன்னுடைய முடிவைத் திரும்பப் பெற்றிருப்பது வேறு விஷயம். ஆனால், கோயில்கள் நிர்வாகத்தை அரசே ஏற்பது எந்த அளவுக்கு நியாயமானது என்பதை நீதிமன்றம் தீர்க்கமாகச் சொல்கிறது.

இந்துக் கோயில்களை விடுவிக்க புதிய ‘விமோசன சமர’த்தை (விடுதலைப் போராட்டம்) ஆரம்பிக்க விழைவோர் உத்தராகண்ட் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதனின் தீர்ப்பை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

- கே.சந்துரு,

மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.அடிமைக் கோயில்‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை!Templesஇந்து சமய அறநிலையத் துறைஜக்கி வாசுதேவ்கோயில் அடிமை நிறுத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x