Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

உரிமைகளுக்காக வாக்களியுங்கள்! 

வாக்களிப்பு ஒரு பேறு

கொடிக்கால் ஷேக் அப்துல்லா, எல்லைப் போராட்ட வீரர்.

நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் மக்கள் கைகளுக்கு வந்தது. வாக்குரிமையின் முக்கியத்துவத்தைத் தற்போதைய தலைமுறையினர் தீவிரமாக உணரவில்லை. நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தீண்டாமை நிலவியது. தாழ்த்தப்பட்ட மக்கள் முற்படுத்தப்பட்ட சாதியினரின் தெருவில் நடந்து செல்ல முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் பார்வை பட்டாலே தீட்டு என்றாக இருந்தது. அப்படியான தீண்டாமை இருந்த சூழலில், அனைவருக்கும் ஓட்டு என்பது இந்தியா ஜனநாயக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வு. ஆனால், தற்போது பாருங்கள்... வாக்குக்குப் பணம் கொடுப்பது தமிழ்நாட்டின் தேர்தல் கால நடைமுறையாக மாறியிருக்கிறது. எவ்வளவு பெரிய துரோகம் இது. ஜனநாயகத்தைத் தொடரச் செய்யும் கருவிதான் வாக்குரிமை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வாக்குதான் வழிமுறை!

முருகன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.

இந்தியாவில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டபோது சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ‘கல்வியறிவு இல்லாத பாமர மக்களுக்கும் ஓட்டுரிமை வழங்குவது சரியா, அரசியல் விழிப்புணர்வு இல்லாத மக்கள் எப்படிச் சரியான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பார்கள்?’ என்று. இதைப் பற்றி நான் என் கல்லூரி ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள். ‘இதன் பெயர்தான் ஜனநாயகம். கல்வி அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை என்று இருந்தால், அதாவது, அதிகாரத்தைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் ஒருசாராருக்கு மட்டும் போகும்பட்சத்தில், அது பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிடும். அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது ஒரு பெரும் முன்னகர்வு’ என்று சொன்னார்கள். அரசியல் கட்சியினர் மோசமாக இருக்கலாம், ஊழலில் திளைப்பவர்களாக இருக்கலாம், உங்களுக்கு அவர்களில் யாரையும் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக சர்வாதிகார ஆட்சி முறையையா கொண்டுவருவது? ஜனநாயகம் என்பது ஒரு தொடர் பயணம். அதில் நமது பங்களிப்பு அவசியம். அந்தப் பங்களிப்பின் வழியேதான் சமூகத்தை நம் முன்னகர்த்திச் செல்ல முடியும். அதற்கு வாக்குதான் நமக்கு இருக்கும் ஒரே வழிமுறை.

வாக்கே அறம்!

அ.வெண்ணிலா, எழுத்தாளர், ஆசிரியர்.

யாருக்கு வாக்கு என்பதைத் தீர்மானிக்க, கடந்து போகும் ஒவ்வொரு ஐந்தாண்டும் நம் கண்முன் நிற்க வேண்டும்.சாதிய, பொருளாதார, அரசியல், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பும் சம உரிமையும் கொடுப்பது வாக்குரிமை மட்டுமே. தேர்தல் என்ற மாபெரும் யானையின் அங்குசம் வாக்குதான். வாக்கு நம்மிடம் இருப்பதால்தான், அரசியலில் ஜனநாயகம் இன்னும் நிலைகொண்டிருக்கிறது. வாக்களிக்கச் செல்லும் நாம் எல்லோரும் ஒரு கணம், நம் சார்பின்மைகளையும் சார்புகளையும் எண்ணிப்பார்த்துக்கொள்வோம். நம் வாக்கு நம் சாதியை உயர்த்திப் பிடிப்பதற்காக அல்ல. நம் வாக்கு பணத்தால் வாங்கிவிடக் கூடியதல்ல. நம் வாக்கு ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டதல்ல. நம் வாக்கு நான் மேல், நீ கீழ் என்று சொல்பவர்களுக்கான அனுமதிச் சீட்டல்ல. நம் வாக்கு யார் வெல்ல வேண்டும் என்பதோடு, யார் வெல்லக் கூடாது என்பதற்குமானது. ஜனநாயக நாட்டில் வாக்கே அறம்.

என் வாக்கு என் குழந்தைக்காகவும்தான்!

திவ்யா, ஐடி ஊழியர்.

அரசியல் என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னுடைய வாழ்க்கையைப் பெரிய அளவில் தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறது. என்னுடைய, என் குழந்தையுடைய எதிர்காலம், என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சியைப் பொறுத்தும் இருக்கிறது. என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சியோ என்னை யார் ஆளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. எனவே, வாக்களிப்பது என்பது ஒவ்வொருவருடைய தவிர்க்க முடியாத கடமை ஆகிறது. நான் எனக்காக மட்டும் வாக்களிக்கவில்லை; வாக்குரிமை இல்லாத என் குழந்தைக்காகவும்தான் வாக்களிக்கிறேன்.

உரிமைகளுக்காக வாக்களியுங்கள்!

எஸ்.ஜனகராஜன், பேராசிரியர், நீரியல் நிபுணர்.

வாக்களித்தல் என்னும் மிக முக்கியமான ஜனநாயக உரிமையை மக்கள் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமக்கு என்ன மாதிரியான அரசாங்கம் அமைய வேண்டும், அவர்கள் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதை எந்த வேட்பாளர் நிறைவேற்றுவார் அல்லது அரசியல் கட்சி நிறைவேற்றும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும். இது எல்லாத் தேர்தல்களுக்கும் பொதுவானது. இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமையவிருக்கும் அரசு, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதைத் தாண்டி, வாக்களிப்பவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் எது என்றும் மக்களால் விவாதிக்கப்படுகிறது. தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம், தமிழ்நாட்டின் வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கக்கூடியவர்கள் யார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விவாதம் மக்களிடையே பரவலாக நடப்பதை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தெரிந்துகொள்ள முடிகிறது. இதைப் போல பெண்கள், உழைக்கும் மக்கள், உரிமைகளுக்காகப் போராடுகிற மக்களின் பிரச்சினைகளும் தேர்தல் விவாதப் பொருளாகியிருக்கின்றன. அமையவிருக்கும் அரசு இதையெல்லாம் பூர்த்தி செய்யுமா? என்பதை வாக்காளர்கள் யோசிக்க வேண்டும்.

முதன்முறை வாக்களிக்கப்போகிறேன்!

அஃப்ஷான் ஷெரின், கல்லூரி மாணவி.

நான் ‘2கே கிட்ஸ்’ தலைமுறை. இதுதான் நான் வாக்களிக்கப்போகும் முதல் தேர்தல். ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது. முதன்முறையாக வாக்களிக்கப்போகிறேன் என்பதற்காக மட்டுமல்ல, வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்கும் நடைமுறையை நேரடியாகக் காண இருக்கிறேன் என்பதற்காகவும்தான். வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதற்கு மேலாக, ஒரு இந்தியக் குடிநபர் என்பதன் அடிப்படையில் எனக்குத் தரப்பட்ட உரிமையாக இதைப் பார்க்கிறேன். நாட்டின் அரசியல் போக்கில் எனது பங்களிப்பும் இருக்கப்போகிறது என்பதை வாக்குரிமை உணர்த்துகிறது. சினிமாவை விடவும் அரசியலானது இளைஞர்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்தத் தேர்தல் என்னைப் போல் முதன்முறையாக வாக்களிக்கப்போகும் என் தலைமுறையினர் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x