Published : 03 Apr 2021 03:13 am

Updated : 03 Apr 2021 06:02 am

 

Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 06:02 AM

பெருந்தொற்றுக் காலத்தில் தேர்தல்கள்

pandemic-elections

அபினவ் குமார்

ஆபிரகாம் லிங்கனின் ‘மக்களால் மக்களுக்காக மக்களின் அரசு’ என்ற குறிப்பு எப்போதுமே சவாலானதுதான் என்றாலும் தற்போதைய கரோனா பெருந்தொற்றுக் காலம் இன்னும் அதைக் கடினமானதாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக, இந்தியா இந்தப் பெருந்தொற்றால் மிகப் பெரும் அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், தடுப்பூசி தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா உருவாகியிருப்பதால் நிலைமை சற்றே மேம்பட்டிருக்கிறது. இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்திலும் ஐந்து பிராந்தியங்களுக்குத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.

ஏற்கெனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் கரோனா பாதிப்பு உச்ச நிலையில் இருந்தபோதே 2020-ல் பிஹார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 57.05%-ஆக இருந்தது. கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 56.66% வாக்குகளைக் காட்டிலும் சற்றே இது அதிகமானதுதான்.


அஸாம், கேரளம், தமிழ்நாடு, வங்கம், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் ஆகிய ஐந்து பிராந்தியங்களில் தற்போது நடக்கும் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்துக்குச் சவாலான ஒன்றாகத்தான் இன்னமும் இருக்கிறது. குறிப்பாக, கரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில்.

தேர்தல் ஆணையத்தின் முன்னிற்கும் சவால்கள்

பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தும்போது தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்கு இடமின்றி பெரும்பாலான நாடுகளின் வெற்றிகரமான தேர்தல் அனுபவங்களால் உத்வேகம் பெற்றிருந்தது. குறிப்பாக, பெருந்தொற்றின் நடுவே தென்கொரிய நாடு தேசிய அளவில் தேர்தலை நடத்தியிருந்தது.

கிருமிநாசினியைப் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட வழக்கமான விதிமுறைகளைத் தாண்டி தேர்தல் ஆணையம் மேலும் சில வழிகாட்டும் நெறிமுறைகளை அளித்துள்ளது. அதன்படி, கூட்டம் சேர்வதைத் தவிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளும் வாக்குப் பதிவு இயந்திரங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாக வாக்குகள் சேகரிப்பதற்கு ஐந்து பேருக்கும் மேல் கூட்டாகச் செல்வதற்குக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு குறைவதற்கு வாய்ப்புள்ள நிலையில் அதைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் மூத்த குடிமக்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அஞ்சல் வாக்கு வசதியை அளித்துள்ளது. தவிர, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கும் பிரபலமான ‘ஸ்வீப்’ (முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு) திட்டத்தையும் பயன்படுத்திவருகிறது. மேலும், சமூக ஊடகத் தளங்களுடன் சேர்ந்து தன்னார்வ அடிப்படையில் நெறிமுறைகளின் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் நேரத்தில் பிரச்சினைகளுக்குக் காரணமான பதிவுகள் குறித்த பொறுப்புணர்வை இரு தரப்பும் இணைந்து ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

குடிமக்களின் அறிக்கை

‘துணிவு என்பது பயமற்ற தன்மை அல்ல, அந்தப் பயத்தை வெற்றிகொண்ட நிலை. வீரன் என்பவன் பயமறியாதவனும் அல்ல, அந்தப் பயத்தை வெற்றிகொண்டவன்’ என்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளைத் தேர்தல் ஆணையம் நிரூபித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் தாம் ஒரு சுயாட்சி பெற்ற அமைப்பு என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருக்கிறது. வாக்குரிமைக்கான வயதைக் குறைத்தது, 1988-ல் வாக்குப் பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது, தேசிய நன்மதிப்புச் சட்டம் 1971-ஐ மீறியதற்காகத் தண்டிக்கப்பட்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்தது, இரண்டு தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட முடியாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது, தேர்தல் செலவுகளுக்கு உச்ச வரம்பு நிர்ணயித்தது, வாக்காளர்கள் முன்முடிவுக்கு ஆளாகவும் தவறாக வழிகாட்டப்படவும் வாய்ப்புள்ளது என்பதால், 2019-ல் வாக்குச்சாவடிகளில் கருத்துக்கணிப்பு நடத்தக் கட்டுப்பாடுகளை விதித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் அது கடந்த காலங்களில் மேற்கொண்டிருக்கிறது.

தேர்தல்கள் பற்றிய குடிமக்களின் ஆணையத்தின் (சிசிஇ) ‘இந்தியாவின் தேர்தல் முறை குறித்த ஒரு விசாரணை’ என்ற தலைப்பிலான அதன் இரண்டாவது அறிக்கையானது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி குறித்துக் கேள்விகளை எழுப்புவதோடு தற்போதுள்ள நடைமுறையில் உள்ள சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவில் தேர்தல்கள் ‘சுதந்திரமாகவும் நேர்மையாகவும்’ நடத்தப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி.லோகூர் கேள்வியெழுப்பியிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் மீது இத்தகைய கேள்விகள் எழுப்பப்பட்டபோதிலும், 1950-ல் தொடங்கி சுதந்திரமாகவும் நேர்மையான முறையிலும் அது தேர்தல்களை நடத்தியே வந்திருக்கிறது.

அரசியல் வன்முறைகள்

வங்க மாநிலத் தேர்தல்களின்போது எப்போதுமே வன்முறைகளைப் பார்க்க முடிகிறது. இடதுசாரிக் கட்சிகளாலும் காங்கிரஸாலும் அவை தொடங்கிவைக்கப்பட்டு, இடதுசாரிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அது தொடர்ந்து, தற்போது பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலானதாக அது மாறியிருக்கிறது. சுட்டுவிரலை யாரை நோக்கியும் காட்டாமல், ‘ரத்தக் களரியிலிருந்து உங்களால் வாக்குகளைப் பெற்றுவிட முடியாது’ என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி. அரசியலில் குற்றவாளிகள் தொடர்வது இன்னும் சீர்திருத்தம் வேண்டியிருக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினையாகும். அரசியலில் குற்றவாளிகள் ஈடுபடுவதைக் குறித்து சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ல் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 324-329 ஆகியவற்றின்படி, தேர்தல் ஆணையமானது நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மட்டுமின்றி குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல்களையும் முழுமையாக நடத்தி முடிக்கவும் கண்காணிக்கவும் அதிகாரம் பெற்ற அரசமைப்புச் சட்ட அமைப்பாகும். டி.என்.சேஷன், ஜே.எம்.லிங்டோ ஆகியோரின் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையம் மிகப் பெரும் வளர்ச்சி நிலைகளை அடைந்தது. அவர்களது பதவிக் காலங்களில் மக்கள் தங்களது வாக்குகளின் வலிமையை அறிந்துகொண்டதோடு ஜனநாயக நடைமுறையையும் மக்களது உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கு அது உதவுவதையும் உணர்ந்துகொண்டனர்.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை (நோட்டா), வாக்காளர் தான் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் வாய்ப்பு (விவிபேட்) ஆகியவை நாட்டின் தேர்தல் சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள் ஆகியோருக்கு அஞ்சல் வாக்கு அளிக்கும் வசதி போன்ற சில தேர்தல் சீர்திருத்தங்களைக் குறித்தும் தேர்தல் ஆணையம் சட்டமியற்றும் துறைகளுடன் விவாதித்துள்ளது.

முன்னோக்கிய பயணம்

முக்கியமான மற்ற விஷயங்களைப் பொறுத்தவரையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, பாதுகாப்பு நடைமுறைகள், வன்முறையைக் கட்டுப்படுத்துவது, சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்துவது, தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சியளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் இன்னும் வலுவாகச் செயல்பட வேண்டும்.

இப்படியொரு பெருந்தொற்றுக் காலத்தில் இவை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தலின் போதும் அதற்குப் பின்பும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கான வாய்ப்பிருக்கும் சூழலில், வாக்காளர்களின் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்துவதன் வாயிலாகவே ஜனநாயகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையை வலுப்படுத்த முடியும்.

- அபினவ் குமார், டெல்லியைச் சேர்ந்த சட்டம் மற்றும் கொள்கை முடிவுகள் வல்லுநர்; ரோஹின் தேவ், அரசியல் வியூகவியலாளர்

பிஸினஸ் லைன், தமிழில்: புவிபெருந்தொற்றுக் காலத்தில் தேர்தல்கள்தேர்தல்கள்Pandemic elections

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x