Published : 19 Nov 2015 09:52 AM
Last Updated : 19 Nov 2015 09:52 AM

ஒரு நதியின் படுகொலை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன.

புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி என்று அர்த்தம். வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலைப் பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சி அழைக்கிறது கொல்லி மலை. இவை எல்லாம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் நீராதாரம் இந்த மலைகள்தான். ஒருகாலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அரு விகள் இருந்தன.

சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் தண்ணீருக்கும் இருக்கிறது. மொரப்பூரில் ஓடும் பொன்னையாறும் ஓமலூர் அருகே ஓடும் சர்பந்தா நதியும் சேர்வராயன் மலை கொடுத்த கொடைகள்தான். இவை தவிர, கல்வராயன் மலையில் இருந்து வசிஷ்ட நதியும் கொல்லி மலையில் இருந்து சுவேதா நதியும் உற்பத்தியாகின. ஒருகாலத்தில் சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகளுடனும் நடுவே ஐந்து ஆறுகளுடன் கூடிய பசுமைப் பள்ளத்தாக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள்!

திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அது அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று,

‘சேலம் மணிமுத்தா நதியின்

ஒரு திவலை நீர் உண்டால்

உடல் பாதகங்கள் அகலும்

பரம ஞானம் உண்டாகும்’

என்கிறது.

சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு அருகே பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. அன்றைய திருமணிமுத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க் கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என எட்டு வாய்க்கால்கள் இருந்தன. நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, ஜருகுமலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என ஆறு துணை ஆறுகள் இருந்தன. திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் 25 அணைகள் கட்டப்பட்டன. 290 சங்கிலித் தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது. 1889-ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.

மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை. நிகழ் காலத்தில் கண்முன்னே துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டது அது. இதுவரை வெளியே சொல்லப்படாத சோகக் கதை அது. ஆரம்பத்தில் நதியில் சாக்கடையைக் கலந்தார்கள். வழியின்றி ஏற்றுக்கொண்டது நதி. ஆனால், அதன் பின்பு 2000-களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டது ஒரு படு கொலைத் திட்டம். அந்தப் படு கொலைக்கு ‘திருமணிமுத்தாறு அபிவி ருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.

கொலையைத் தொடங்கும் முன்பாக ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி பூமி பூஜை செய்தார்கள். எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். முதலில் நதிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடங்கியது கொலை. முதலில் கரைகள் எங்கும் சிமெண்ட் கலவையைப் பூசினார்கள். பின்பு அணைமேடு தொடங்கி கொண் டலாம்பட்டி வரை நதியின் படுகை யெங்கும் கான்கிரீட் கலவையை அடைத்தார்கள்.

மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது. மூச்சுவிட வழியில்லாமல் முனகித் துடித்தது நதி. வாயிருந்தால் கதறியிருக்கும் அது. உலகில் எங்கேனும் இதுபோல கொடுமை நடந்தது உண்டா? இது நடந்தபோது மக்கள் மகிழ்ச்சிப் பொங்க கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. சூழலியாளர்கள்கூட குரல் கொடுக்கவில்லை. அரசியல்வாதி கள் ஊர்தோறும் இந்தப் படுகொலை யைப் பற்றிப் பெருமையாக பறைச்சாற் றினார்கள். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளே தனக்கு உயிரோடு சமாதி கட்டியது கண்டு வேதனை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்தது நதி. முன்பு சாக்கடை ஓடினாலும் மழைக் காலத்தில் ஆற்றில் பெருகிய நீரால் சேலத்தின் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருந்தது. நதியைப் புதைத்தப் பின்பு சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். இப்போது பார்க்க சகிக்கவில்லை அந்த பெரிய சாக்கடையை.

மரணித்தது நதி மட்டும்தானா? அது உருவாக்கிய ஏரிகளும்தான்!

(நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x