

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்துக்கொண்டிருக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவ அழைப்பு விடுத்திருந்தோம். இதற்கு தமிழகமெங்கும் இருந்து அபரிமிதமான ஆதரவு கிடைத்துவருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாய்கள், போர்வைகள், லுங்கிகள், பனியன்கள், ஸ்டவ்கள் என்று பல்வேறு உதவிகளை கே.பி.என். போக்குவரத்து நிறுவனம் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் நம் வாசகர்கள்.
திருச்சி சுரேஷ் குடும்பத்தினரிடமிருந்து 3 ஸ்டவ்கள், சற்குரு சம்காரமூர்த்தி தொண்டர்கள் சார்பில் ஒரு பண்டல் போர்வை, ஆண்ட்ரூஸ் தரப்பில் போர்வைகள், பாய்கள், சீனிவாசன் தரப்பிலிருந்து போர்வைகள் மற்றும் ஸ்வெட்டர் ஆகியவை வந்திருக்கின்றன. கும்பகோணம் திருபுவனம் கே.பி.ராகவன் போர்வைகள் அனுப்பியிருக்கிறார்.
புதுச்சேரி விஜயரங்கம் 3 போர்வைகளை அனுப்பி வைத்துள்ளார். சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ‘தி விண்ட் பிளவர் ஸ்பா- ரிசார்ட்’டில் பணிபுரிவோர் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து 25 போர்வைகள், மருந்துகளை வாங்கி அனுப்பியிருக்கிறார்கள். ரகமத்பீ அனிஷா போர்வை மற்றும் பாய்களை அனுப்பியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த நடராஜ் 2 போர்வை, 2 பாய் அனுப்பியுள்ளார்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் கோபால் மண்ணெண்ணெய் ஸ்டவ் மற்றும் பாய் ஆகியவற்றை அனுப்பியிருக்கிறார். சேலம் விநாயகா மிஷன் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் டொமினிக், 20 மண்ணெண்ணெய் ஸ்டவ், 30 போர்வைகள் ஆகியவற்றை வாங்கி அனுப்பி உள்ளார். இதன் மதிப்பு ரூ. 23,000. செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது உறவினர் மோகன் ஆகியோர் இணைந்து 22 புடவைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் 25 ஆகியவற்றை அனுப்பி உள்ளனர்.
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வித்யபிரபாகரன், கணேசன் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேதியப்பன், சேரன் தமிழரசன் ஆகிய 4 இளைஞர்களும் தங்கள் சேமிப்பிலிருந்து ரூ. 2,300-க்கு 7 ஸ்டவ்களை வாங்கி அனுப்பியிருக்கிறார்கள்.
வாசகர்கள் அனுப்பியிருக்கும் பொருட்கள் கடலூர் மக்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன. நேற்று கொட்டும் மழையிலும் பூதம்பாடி கிராமத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. வாசகர்கள் வழங்கும் உதவிகளை கொண்டுசேர்க்கும் பணிகள் தொடர்கின்றன.
நன்றி வாசகர்களே… உதவிகள் தொடரட்டும்!
சொந்த ஊரிலேயே அகதிகளைப் போல நிற்பவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகள் நிறைய. வாசகர்களோடு கைகோத்து அடுத்தடுத்து, செய்ய வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து யோசிக்கிறோம். சேர்ந்தே திட்டமிடுவோம். இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்!
- ஆசிரியர்