Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

ஒரு சாமான்யனின் காந்திய தேர்தல் அறிக்கை

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளன. ஆனால் ஒரு சாமான்ய மனிதனின் எதிர்பார்ப்புகள், அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கிய காந்திய பார்வையிலான தேர்தல் அறிக்கை வருமாறு:

1. உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்பட, கூடுதல் நிதி நிர்வாக அதிகாரம்.

2. உடனடியாக முழு மதுவிலக்கு.

3. அரசின் அனைத்து மட்ட நிர்வாகத்திலும் முழு வெளிப்படைத்தன்மை.

4. அரசுத் துறைகளில் கதவுகள் இல்லா அலுவலர் அறைகள்.

5. அரசு செலவில் கண்டிப்பான சிக்கனம். தேவையற்ற வீண் செலவு செய்தல், குற்றச் செயலாகக் கருதப்பட்டு அதற்குப் பொறுப்பானவர் மீது துறைசார் விசாரணை, தண்டனை.

6. அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உட்பட அனைவருக்கும், அரசுப் பணியின்போது, கதர், கைத்தறி உடைகளுக்கு மட்டுமே அனுமதி.

7. அரசின் எல்லாத் துறைகளிலும் எல்லா மட்டங்களிலும் சீருடை உடனடியாக அறிமுகம்.

8. மருத்துவம், காவல், தீயணைப்பு தவிர்த்த பிற துறை வாகனங்களில் அரசு வாகனம் என்கிற பெயர்ப் பலகை பயன்படுத்தத் தடை.

9. பொதுவாக மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள், 24 மணி நேரமும் இயக்கம்.

10. ஊழல் குற்றச்சாட்டு, ஓர் ஆண்டுக்கு உள்ளாக விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் உடனடி பதவி நீக்கம் மற்றும் சட்டப்படியான தண்டனை.

11. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அரசியல் சார்பற்ற அறிஞர் குழு உடனடி நியமனம்.

12. பொதுத் தேர்வுகள் (பணியாளர் தேர்வு உட்பட) தொடர்பான ஆலோசனைகள், சர்ச்சைகள், புகார்கள், குற்றச்சாட்டுகளை நடுநிலையுடன் விரைந்து விசாரித்து மேல் நடவடிக்கைகளை பரிந்துரைக்க, தகுதியானவர்களைக் கொண்ட குழு அமைப்பு.

13. மேல்நிலைக் கல்வி வரை, அனைத்து பொதுத் தேர்வுகளிலும், பாடப் புத்தகங்கள் அனுமதி (பார்த்து எழுதலாம்).

14. பள்ளிகளில் விளையாட்டு நேரம் கட்டாயம் ஆக்கப்படும்; மனித விழுமிய வகுப்புகள் கல்வி திட்டத்தின் அங்கம் ஆக்கப்படும்.

15. பள்ளி, கல்லூரி உட்பட, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், கல்வி / ஒழுக்கம் சாரா பிற நிகழ்ச்சிகள் நடத்தத் தடை.

16. அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பட்டப் படிப்பின்போது, அரசு அலுவலகப் பணிகளில் பயிற்சி அளிக்கப்படும்.

17. அரசுப் பணியாளர் தேர்வுகள் உட்பட அனைத்துப் பொதுத் தேர்வுகளுக்கும் ஒரு மாதத்துக்குள் முடிவுகள் வெளியீடு.

18. சாதி சமய நல்லிணக்கம் செழிக்கப் பாடுபடும் அமைப்புகள், தனி நபர்களுக்கு விருது, பாராட்டு.

19. நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த சிறந்த தொழில் முனைவோருக்கு மாவட்ட வாரியாக விருது, பாராட்டு.

20. நீர் நிலைப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் நடுதல் போன்ற பணிகளில் திறம்பட செயல்படும் தனி நபர், நிறுவனங்களுக்கு விருதுகள், சலுகைகள், முன்னுரிமைகள்.

21. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு.

22. அனைத்துப் பள்ளிகளும் இருபால் பள்ளிகளாக மாற்றம் (co-education schools), (முதல் வகுப்பு தொடங்கி 12 ஆண்டுகள் படிப்படியாக அமல்).

23. பள்ளி / கல்லூரி வேலை நாட்கள் (ஆண்டுக்கு) தொடக்கப் பள்ளி 200; நடுநிலைப் பள்ளி 240;

உயர்நிலைப் பள்ளி 260; மேல்நிலைப் பள்ளி 280. கலை அறிவியல் தொழிற் கல்லூரிகள்: 300 நாட்கள்.

24. அரசுப் பள்ளிகளில் படிப்போருக்கு அரசுக் கல்லூரி சேர்க்கையில் முன்னுரிமை; அரசுக் கல்வி நிறுவனங்களில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.

25. தமிழ் வழியில் பயின்றால் மட்டுமே தமிழக அரசுப் பணிக்கு அனுமதி.

26. முதல் தலைமுறைப் பட்டதாரிப் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

27. கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த ஐந்து ஆண்டுகளுக்குள் தொழில் முனையும் இளைய பட்டதாரிகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடனுதவி.

28. பணி நிமித்தம் வெளியூரில் இருந்து வரும் இளம் பெண்களுக்கு மாநகரங்களில் குறைந்த கட்டணத்தில் அரசு தங்குமிடம்.

29. அனைத்து நகரங்களிலும் பெண்களுக்கு என்று தனியே விளையாட்டு மைதானங்கள்.

30. நகரங்களில் காவலர் பாதுகாப்புடன் இரவு நேர மகளிர் பேருந்து.

31. எல்லா ஊராட்சிகளிலும் மேம்படுத்தப்பட்ட நவீன இலவச நூலகங்கள்.

32. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத, பொது நலனுக்குக் குந்தகம் விளைவிக்காத அரசியல் மதம் சமூகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அரசுத் துறையின் முன் அனுமதி தேவையில்லை.

33. நடைபாதைக் கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் இயங்க அனுமதி.

34. கிராம கூட்டுறவு சங்கங்கள் வலுவூட்டப்படும்.

35. கிராம கைத்தொழில்கள் ஊக்குவிக்கப்படும்.

36. கிராமப் பகுதிகளின் வளங்களுக்கு ஏற்ப தொழிற் பட்டறைகள் அமைக்கப்படும். உள்ளூர் மக்கள் (மட்டுமே) பணியமர்த்தப்படுவர்.

37. விவசாயம், நெசவு, மீன் பிடித்தல் உள்ளிட்ட மரபுத் தொழில் செய்வோர்க்கு முதுமைக் கால, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

38. கொடும் குற்றங்கள் தவிர்த்து பிறவகை தவறுகளுக்கு, காவல் துறை விசாரணை – பொது வெளியில் அல்லது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும்.

39. நீர் நிலைகள், அவ்வப் பகுதி மக்களின் நிர்வாகம், மேலாண்மையின் கீழ் கொண்டுவரப்படும்.

40. ஆறு வயதுக்கு உடபட்ட, அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை.

41. எண்பது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வீட்டில் இருந்தபடி அரசுச் சேவைகளைப் பெறும் வசதி.

42. எண்பது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநிலம் முழுவதும் போக்குவரத்து இலவசம்.

43. சித்த மருத்துவம் எனப்படும் தமிழ் மருத்துவம், மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லப்படும். தனியே, தமிழ் மருத்துவ அமைச்சகம் உருவாக்கப்படும்.

44. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகள் ஊக்குவிக்கப்படும். பாரம்பரியக் கலைஞர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

45. காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா, பாடகி கே.பி.சுந்தராம்பாள் போன்ற தமிழ்நாட்டுச் சாதனையாளர்களின் புகழ் பரப்பப்படும்.

46. தமிழ் ஞானிகளான அருட்பிரகாச வள்ளலார், பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர்கள் வலியுறுத்திய உயரிய தத்துவங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

47. இயற்கைப் பேரிடர் காலங்களில் உதவும் இளைஞர் தன்னார்வக் குழுக்கள் ஆங்காங்கே அமைக்கப்படும்.

48. இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சட்டங்கள், விதிமுறைகள் இன்று உள்ளவாறே பின்பற்றப்படும்.

49. பொதுமக்களின் குறைகள்/ புகார்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்க்கப்படும் / முறையாக அணுகப்படும்.

50. பொதுவாக அரசின் செயல்பாட்டில் மக்களின் நேரடிப் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், உறுதி செய்யப்படும்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x