Last Updated : 30 Mar, 2021 03:14 AM

 

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

பினராயி விஜயன் சந்திக்கும் சவால்கள்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடப்பது போன்றே கேரளத்திலும் ஏப்ரல் 6 அன்று சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கேரளச் சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 140. எனவே, ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தபட்சத் தேவை 71 இடங்கள். தேர்தல் களத்தில் முதன்மைப் போட்டியாளர்களாக நின்று மோதிக்கொள்வது தற்போது ஆட்சியில் இருக்கும் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் எதிர்க் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும்தான்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியில் சிபிஐ(எம்) தவிர, சிபிஐ, கேரள காங்கிரஸ்(எம்), தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் கட்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோஷலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மூன்றாவதாக, பாஜக தலைமையில் பாரத் தர்ம ஜன சேவா உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியும் களத்தில் நிற்கிறது. இந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை பாஜக வெல்லக்கூடும் என்றும் வாக்கு சதவீதத்தைக் கணிசமான அளவில் கைப்பற்றக்கூடும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கேரளத்தில் சிபிஐ(எம்) கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் அங்கு 40 ஆண்டு கால நடைமுறை. எனவே, 2020-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் தற்போது நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்குமா, சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் தொடருமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவான எதிர்பார்ப்பு அப்படியாகவே இருக்கிறது. சிபிஐ(எம்) ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த கட்சி என்ற பெருமை அதற்கு உண்டு. அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் மிகக் கடுமையான சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.

மூத்த தலைவர்களுக்கு ஓய்வு

முதலில், கட்சிக்குள்ளேயே மூத்த தலைவர்களை பினராயி விஜயன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அவர் கொண்டுவந்த புதிய விதிமுறையால் 34 பேர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அவர்களில் 5 மூத்த அமைச்சர்களும் உள்ளடக்கம். எனவே, தேர்தலுக்கு முன்பே அனுபவம் வாய்ந்த அமைச்சரவைக்கு வாய்ப்பில்லை என்றாகிவிட்டது ஒரு பெருங்குறையாகவும் பார்க்கப்படுகிறது. இளைஞர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சியளிப்பதற்குச் சட்டமன்றத் தேர்தலைக் களமாகப் பயன்படுத்துவது கட்சியைப் பலவீனப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

கட்சியில் இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், பினராயி விஜயன் இந்தச் சவாலை எளிதாக எதிர்கொண்டுவிடுவார். ஆனால், கட்சி வெற்றிபெற்ற தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்கியது தொடர்பாக சிபிஐ(எம்) உறுப்பினர்களிடத்தில் எழுந்துள்ள அதிருப்தி தொடரக் கூடும். வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபோதே கட்சித் தொண்டர்கள் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, சாம்பல் பூத்துக் கிடக்கும் சபரிமலை விவகாரத்தை அவ்வப்போது ஊதிப் பெருக்க முயன்றுவருகிறது பாஜக. சில வாரங்களுக்கு முன்பு தேவஸ்தானம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் கேரள அரசு முடிவெடுத்ததாக ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் விளக்கம் சொல்லப்போக, மீண்டும் இந்தப் பிரச்சினை சூடுபிடித்துவிட்டது. அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே, அரசு இது குறித்து முடிவெடுக்கும் என்று பினராயி விஜயன் அறிவித்த பிறகே இந்தப் பிரச்சினை சற்றே தணிந்திருக்கிறது. எனினும், சபரிமலை விவகாரத்தில் சிபிஐ(எம்) கட்சியின் இந்து சமய வாக்கு வங்கி குறைய ஆரம்பித்திருக்கிறது. அதே நேரத்தில், சிறுபான்மையினரின் வாக்கு வங்கி காங்கிரஸ் கட்சியை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற பாஜகவும் தீவிர முயற்சியில் இருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்துவந்த கேரள காங்கிரஸ் (எம்) கட்சிக்கு 12 இடங்கள் கொடுத்து இடதுசாரி முன்னணியில் சேர்த்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், மலபார் பகுதியில் கிறிஸ்தவ வாக்குகளைப் பெறுவதற்காகவே என்றும் கூறப்படுகிறது.

தங்கக் கடத்தல் விவகாரம்

2018-ல் நிபா தொற்று, அதே ஆண்டிலும் அதற்கடுத்த ஆண்டிலும் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு, 2020-ல் கரோனா பெருந்தொற்று என்று முந்தைய கேரள முதல்வர்கள் சந்திக்காத சவால்களிலிருந்தும் வெற்றிகரமாக மீண்டுவந்திருக்கிறார் பினராயி விஜயன். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு நாள் மாலையும் முதல்வரே பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தொற்று பாதிப்புகள் குறித்த தினசரி அறிக்கைகளை வெளியிட்டதும் எதிர்க் கட்சித் தலைவருக்கு அன்றன்றே சுடச்சுட பதில் சொன்னதும் மக்களிடம் அவர் மீது நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கியிருக்கின்றன.

கட்சியிலும் ஆட்சியிலும் பினராயி விஜயன் ஒருசேர செல்வாக்கு பெற்றிருந்தாலும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு உள்ள தொடர்பும் அது குறித்து நடந்துவரும் விசாரணைகளும் அவரது ஆட்சியின் மீது நீங்காப் பழியாக அமைந்துவிட்டது. ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது விவகாரத்தை எதிர்க் கட்சிகள் தங்களது வலுவான அஸ்திரங்களில் ஒன்றாகவே கையாள்கின்றன. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரே அணியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் கேரளத்தில் மட்டும் எதிரெதிராகப் போட்டியிடுவதையும்கூட பாஜக ஒரு குறையாகச் சுட்டிக்காட்டிவருகிறது.

பினராயி விஜயன் தேர்தலையொட்டி புதிதாக எதிர்கொண்டிருக்கும் மற்றொரு பிரச்சினை, ஒரே நபருக்கு வெவ்வேறு இடங்களில் வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பானது. 2019-க்குப் பிறகு இவ்வாறு 69 லட்சம் பேர் கண்டறியப்பட்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது நேமம், திருவனந்தபுரம், வட்டியூர்க்காவு ஆகிய தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இத்தகைய போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் காங்கிரஸ்தான் என்கிறார் பினராயி விஜயன். ஆனால், தவறு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தும் எதிர்க் கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா அது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தொடுத்திருக்கிறார்.

விதிமுறை மீறல்கள்

முதியோர் இல்லங்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் நேரடியாக விநியோகிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியபோது, பின்னணியில் அவர் கட்சியின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருந்தது. நடத்தை விதிமுறைகளை முதல்வர் மீறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பினராயி விஜயனிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருக்கிறார்.

கொன்னியிலும் திருவனந்தபுரத்திலும் பிரதமர் மோடியை வைத்துப் பேரணிகள் நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்தக் கூட்டங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கும் பின்னணியில் பினராயிதான் காரணம் என்கிறது பாஜக. காங்கிரஸும் சிபிஐ(எம்) கட்சியும் கேரளத்தில் கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருப்பதாக பாஜக தொடர்ந்து சொன்னாலும், தற்போதைக்குப் போட்டி என்னவோ அந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான். அதிலும், பினராயி முந்திக்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸும் சிபிஐ(எம்) கட்சியும் கேரளத்தில் கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருப்பதாக பாஜக தொடர்ந்து சொன்னாலும் தற்போதைக்குப் போட்டி என்னவோ அந்த இரண்டுகட்சிகளுக்கு மட்டும்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x