

தமிழகச் சட்டமன்றத்துக்கு 1977-ல் நடந்த தேர்தல் முக்கியமானது. அந்தத் தேர்தல் முடிவுகள் எம்ஜிஆரை முதல்வராக்கியது. அது நான்கு முனைப் போட்டியாக இருந்தது. தேர்தல் ஜூன் முதல் வாரம் நடந்தது. கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்த எங்களுக்குக் கோடை விடுமுறையானது தேர்தல் கோலாகலத்துடன் கழிந்தது. அந்தத் தேர்தலில் பலரும் கவனிக்கும் தொகுதியாக காரைக்குடி இருந்தது.
முன்னதாக, 1977 மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்குத் தனது செல்வாக்குதான் காரணம் என்பது எம்ஜிஆருக்குத் தெரிந்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்கும் அது தெரிந்திருந்தது. ஆனால், தங்களால் பிரதான எதிர்க்கட்சியாக வர முடியும் என்று காங்கிரஸ் நம்பியது. எதிர்முனையில் ஜனதா கட்சிக்கும் அதே நம்பிக்கை இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவைவிட அதிக இடங்களைப் பெற்றதுதான் காரணம். இப்படியாக, 1977 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவானது.
அந்த நான்கு பேர்
காரைக்குடியில் அதிமுக சார்பாக பொ.காளியப்பன் போட்டியிட்டார். புதுமுகம். இந்திரா காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டவர் ப.சிதம்பரம். அதுதான் அவருக்கு முதல் தேர்தல். அவர் போட்டியிட்ட ஒரே சட்டமன்றத் தேர்தலும் அதுதான். கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த சித.சிதம்பரத்தைக் களம் இறக்கியது திமுக; தொகுதி மக்களுக்கு அவர் சீனா தானா. ஜனதா கட்சியின் வேட்பாளர் பழ.கருப்பையா. தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் சுற்றிவந்தார். கருணாநிதியும் அவருக்கு ஈடுகொடுத்தார். மொரார்ஜி தேசாய் அவருக்குப் பரிச்சயமில்லாத தமிழ் மண்ணில் ஜனதா கட்சிக்கு வாக்கு கோரினார். காரைக்குடிக்கும் வந்தார். ஜனதா கட்சி வேட்பாளர் பழ.கருப்பையா உள்ளூர் பிரச்சினைகளில் குரல் கொடுத்துவந்தவர். அந்த அறிமுகம் அவருக்கு இருந்தது.
ப.சிதம்பரம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், மாநிலப் பொதுச் செயலராகவும் இருந்தார். இந்தப் பின்னணி அவருக்குக் கைகொடுத்தது. தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் சீனா தானா. காட்சிக்கு எளியவர். அவரது வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். காளியப்பன் இளைஞர். அரசியலுக்கும் புதியவர். பல அதிமுக வேட்பாளர்களும் புதியவர்கள்தான். எம்ஜிஆர், ‘எல்லாத் தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர். எனக்கு வாக்களியுங்கள்’ என்று கோரினார். பெருவாரியான மக்கள் செவிசாய்த்தார்கள்.
அதிமுக 129 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களோடும் ஜனதா 10 இடங்களோடும் சமாதானமடைய வேண்டிவந்தது. திமுக 48 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி ஆனது. அப்போது முதல் தமிழகத் தேர்தல் களம் திமுக அல்லது அதிமுக என்கிற இருமைக்குள் வந்தது. அது இன்றளவும் தொடர்கிறது.
அந்தத் தேர்தலில் கணிசமான முடிவுகள் குறைந்த வித்தியாசத்தால்தான் தீர்மானிக்கப்பட்டன. காரைக்குடியும் அவற்றுள் ஒன்று. வித்தியாசம் 240 வாக்குகள். வென்றவர் காளியப்பன் (27,403 வாக்குகள்). இந்தியத் தேர்தல்களில் வெற்றிக் கோட்டை முதலில் கடக்கிறவருக்கே மாலை விழும். தங்கப் பதக்கம் மட்டுமே வழங்கப்படும். வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் இருந்திருந்தால், அவை முறையே ப.சிதம்பரத்துக்கும் (27,163), சீனா தானாவுக்கும் (18,228), கிடைத்திருக்கும். பழ.கருப்பையா நான்காவதாக வந்தார் (12,763). அந்தத் தேர்தலில் காளியப்பன் வெற்றி பெற்றார். ஆனால் காலம் காளியப்பன் மீதல்ல, வெற்றிவாய்ப்பை இழந்த மற்ற மூன்று வேட்பாளர்களின் மீதுதான் கருணை காட்டியது.
தோற்றவர்கள் வென்றார்கள்
பழ.கருப்பையாவின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் காலம் வெளிக்கொண்டுவந்தது. அதே வேளையில், அவரால் எந்தக் கட்சியிலும் நிலைகொள்ள முடியவில்லை. ஜனதாவிலிருந்து 1988-ல் திமுகவுக்கு மாறினார். பிறகு மதிமுக, பிறகு காங்கிரஸ், பிறகு அதிமுக, அங்கே சட்டமன்ற உறுப்பினர், பிறகு திமுக என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு இப்போது மய்யமான இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!’ என்று சொன்ன கண்ணதாசனின் வரிகள் அவருக்கு ஆதர்சமாக இருக்கக்கூடும். அடுத்த சட்டமன்றத் தேர்தல் 1980-ல் நடந்தது. காரைக்குடி வாக்காளர்கள் சீனா தானாவைத் தேர்ந்தெடுத்தார்கள். அடுத்து, அவர் காரைக்குடி நகராட்சித் தலைவராகவும் ஆனார். 1989-ல் திரைப்பட இயக்குநர் இராம.நாராயணனுக்கு டிக்கெட் கொடுத்தது திமுக. மக்களின் ஐயப்பாட்டை நீக்க, எல்லா விளம்பரங்களிலும் தனது பெயருக்கு முன்னால், ‘சீனா தானாவின் ஆதரவு பெற்ற’ என்கிற முன்னொட்டைச் சேர்த்துத்தான் பரப்புரை செய்தார் இராம.நாராயணன். வெற்றியும் பெற்றார். 1994-ல் சீனா தானா காலமானார். ஆனால், கட்சி அவரை மறக்கவில்லை. சமீபத்தில், சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சிப் பிரமுகர்களை மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். எஸ்.எஸ்.தென்னரசுக்கு அடுத்து அவர் குறிப்பிட்டது சீனா தானாவைதான்.
ப.சிதம்பரம் 1980-ல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். கட்சியில் மூத்தவரான ஆர்.வி.சாமிநாதனுக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. அடுத்த தேர்தல் 1984-ல் வந்தது. ப.சிதம்பரத்துக்கு டிக்கெட்டும் கிடைத்தது, வெற்றியும் கிடைத்தது. அது முதல் 2014 வரை (1999-2004 நீங்கலாக) சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இரண்டு முறை துணை அமைச்சர், நான்கு முறை நிதி அமைச்சர், ஒரு முறை உள்துறை அமைச்சர் என ஒன்றிய அமைச்சரவையில் உயர் பதவிகளை வகித்தார். இப்போது மேலவை உறுப்பினராக எதிர்க்கட்சிகளின் குரலை ஒலித்துவருகிறார். அதே வேளையில், அவரைச் சுற்றிக் குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லை.
இந்தத் தேர்தலில் பல அரசியலர்களுக்கு டிக்கெட் கிடைத்திருக்காது. கிடைத்தவர்களிலும் 234 பேர்தான் வெற்றி பெறுவார்கள். டிக்கெட் வாய்ப்பையும் வெற்றி வாய்ப்பையும் இழந்தவர்களில் பலர் மீது வருங்காலம் கருணையோடு நடந்து கொள்ளக்கூடும். காரைக்குடியில் அப்படித்தான் நடந்தது.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com