Published : 26 Mar 2021 03:15 am

Updated : 26 Mar 2021 06:05 am

 

Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 06:05 AM

அஸாமின் கள நிலவரம் என்ன சொல்கிறது?

assam-elections-2021

சுஷாந்தா தாலுக்தா

அஸாம் சட்டமன்றத்துக்கு 2016-ல் நடந்த தேர்தலின்போது அஸாம் உடன்படிக்கையை உள்ளது உள்ளபடியே செயல்படுத்தப்படும் என்று பாஜக அளித்த வாக்குறுதி அஸாமிய வாக்காளர்களில் பெரும் பகுதியினரிடம் அதற்குப் பெருத்த ஆதரவைத் திரட்டித்தந்ததுடன் அந்தக் கட்சியை அதிகாரத்திலும் அமர்த்தியது. தற்போதைய தேர்தலில் அஸாமைத் தனது அரசியல் செயல்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள பாஜக எதிர்நோக்கியிருக்கிறது; மொழி, கலாச்சாரம் அடிப்படையிலான அஸாமின் இணை தேசிய அபிலாஷைகளை இந்துத்துவச் செயல்திட்டத்தின் அடிப்படையிலான தேசியம் என்னும் சித்தாந்தத்துக்கு அடிபணியச் செய்யும் முயற்சியில் அது இருக்கிறது.

பல முனைகளைக் கொண்ட சொல்லாடல்


காங்கிரஸ் தலைமையிலான மஹாஜோத் (மகா கூட்டணி) வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படைப் பொருட்களின் விலை உயர்வு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை மையமிட்டுத் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. அதனால், பிளவுபடுத்தும் ஒற்றைச் சொல்லாடலை மையமாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் இயங்குவதை அது தடுத்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 மீதான எதிர்ப்புதான் இந்த மகா கூட்டணியை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறது. எதிர்க் கட்சிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள ஆளும் கூட்டணியானது மாநிலத்தின் வளர்ச்சியை முக்கியமான விஷயமாகக் கையில் எடுத்திருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. இவற்றில் மூன்று கட்சிகள் இடதுசாரிகள் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ-எம்.எல்., கூடவே அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யு.டி.எஃப்.), அஞ்சலிக் கண மோர்ச்சா (ஏ.ஜி.எம்.), போடோலாந்து மக்கள் முன்னணி (பி.பி.எஃப்.), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), ஜிமோசயன் (தியோரி) மக்கள் கட்சி (ஜே.டி.பி.பி.), ஆதிவாசி தேசியக் கட்சி (ஏ.என்.பி.) ஆகிய கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இருக்கின்றன.

மௌலானா பத்ருதீன் அஜ்மலும் அவருடைய ஏ.ஐ.யு.டி.எஃப். கட்சியும் ‘வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்களின் பாதுகாவலர்கள்’ என்று தேர்தல் பிரச்சாரச் சொல்லாடலைப் பிளவுபடுத்தும் வண்ணம் பாஜகவும் அஸாம் கண பரிஷத்தும் (ஏ.ஜி.பி.) சித்தரிக்கின்றன. தனது சொல்லாடலுக்கு ஏற்ற விதத்தில் எதிர்த் தரப்பின் மகா கூட்டணியை வெறுமனே ‘காங்கிரஸ்-ஏ.ஐ.யு.டி.எஃப்.’ கூட்டணி என்று சித்தரிக்க ஆளும் கட்சிக் கூட்டணி முயல்கிறது. பி.பி.எஃப். கட்சி போடோலாந்து ஆளுகைப் பிரதேசத்தில் (பி.டி.ஆர்.) கடந்த தேர்தலில் 12 இடங்களை வென்றது. சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் அக்கட்சியும் சமீப காலம் வரை பங்குவகித்திருந்தது. அரசமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் தன்னாட்சிப் பகுதியாக இருந்த போடோலாந்து ஆளுகைப் பிரதேசத்துக்குக் குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பாஜக, பி.பி.எஃப். கட்சியை உதறிவிட்டு போடோலாந்து பகுதியில் தங்களுக்குக் கிடைத்த புதிய கூட்டாளியான ‘யு.பி.பி.எல்’ கட்சியைச் சேர்த்துக்கொண்டது. போடோலாந்து ஆளுகைப் பிரதேசத்தை ஆளும் கவுன்சிலின் அதிகாரத்தை பாஜகவும் யு.பி.பி.எல். கட்சியும் பகிர்ந்துகொள்கின்றன.

இந்தத் தேர்தலின் மூலம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயலும் காங்கிரஸ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ரூ.365-ஆக உயர்த்தி வழங்குவோம் என்ற வாக்குறுதி தாங்கள் இழந்த அந்தத் தொழிலாளர்களின் ஆதரவை மீட்டுத் தரும் என்று நம்புகிறது. கூடவே, 2016 தேர்தலின்போது அந்தத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ரூ.351-ஆக உயர்த்துவோம் என்று வாக்களித்த பாஜகவுக்கு எதிராக அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. அஸாமிலுள்ள 126 தொகுதிகளுள் 25 தொகுதிகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் செல்வாக்கு அதிகம்; அந்தத் தொகுதிகளில் காங்கிரஸின் ஆதரவுத் தளத்தை பலவீனப்படுத்தி பாஜக தனது ஆதரவை அதிகரித்திருக்கிறது.

தேர்தல் பிரச்சாரங்களின்போது பாஜக தன்னுடைய சித்தாந்தரீதியிலான உள்நோக்கத்தை அது பயன்படுத்தும் மொழியில் மறைப்பதற்கு முயலவில்லை. ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அது குறிப்பிட்டால் முன்னாள் பாகிஸ்தானிலிருந்தும் இந்நாள் வங்கதேசத்திலிருந்தும் வந்திருக்கும் முஸ்லிம்களைத்தான் அது குறிப்பிடுகிறது; ‘அகதி’ என்று அது சொல்லும்போது அதே இடத்திலிருந்து எந்த காலத்தில் வேண்டுமானாலும் புலம்பெயர்ந்து வந்திருக்கும் இந்துக்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும்தான் அது குறிப்பிடுகிறது.

அஸாம் உடன்படிக்கையின் முக்கியக் கூறு ‘சட்டவிரோதமாகக் குடிபெயர்பவர்’களை மதரீதியில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை; அது ஒரு தேதியைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது – மார்ச் 24, 1971. மேலும் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களைக் கண்டறியவும் நீக்கவும் இந்தத் தேதி பயன்படுத்தப்படும் கூடவே, இந்தத் தேதிக்குப் பிறகு போதிய ஆவணங்களின்றி வங்கதேசத்திலிருந்து அஸாமில் நுழைந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்படுவார்கள்.

அஸாம் உடன்படிக்கையின் மதச்சார்பற்ற அடிப்படைக் கூறானது குடியுரிமைச் சட்டங்களில் சேர்க்கப்பட்டு, அது பாஜக, சங் பரிவாரங்களின் இந்துத்துவக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அஸாமிய மொழி பேசுவோரும் பிற மொழிகள் பேசுவோரும் வங்கதேசத்திலிருந்து அஸாமுக்கு வந்தவர்களும் வங்க மொழி பேசுவோர்களுமாக ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

மூன்றாவது கூட்டணி

‘அஸாம் ஜாதிய பரிஷத்’ (ஏ.ஜே.பி.), ‘ராய்ஜோர் தளம்’ ஆகிய இரண்டு புதிய பிராந்தியக் கட்சிகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான இயக்கத்தின்போது பிறந்தவை. இந்த இரண்டு கட்சிகளும் அஸாமின் இணை தேசியத்தைப் புதிய பாதையில் செலுத்தியிருக்கின்றன, இது தேர்தல் அபிலாஷைகளுடன் முடிந்துவிடாது.

இந்த இரண்டு கட்சிகளும் இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கின்றன; காங்கிரஸும் மகா கூட்டணியின் மற்ற உறுப்பினர்களும் தங்களுடன் இணைந்துகொள்ள விடுத்த அழைப்பை அந்தக் கூட்டணியில் ‘வகுப்புவாத’ ஏ.ஐ.யு.டி.எஃப். கட்சி இருப்பதைக் காரணம் காட்டி மறுத்துவிட்டன. பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்துவதற்குப் பொதுவான ஒரு வேட்பாளரை எல்லா எதிர்க் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து நிறுத்தலாம் என்று ராய்ஜோர் தளத்தின் அகில் கோகோய் முன்வைத்த யோசனையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. தேசியக் கட்சிளையும் ‘வகுப்புவாத பாஜக, ஏ.ஐ.யு.டி.எஃப்.’ ஆகிய கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏ.ஜே.பி. உறுதியாக நிற்கிறது. இதன் காரணமாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வாக்குகள் பிரிந்துபோய், அது ஆளும் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரச்சாரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பாஜக ஏதும் பேசுவதில்லை. இந்தத் தொகுதிகளுள் 35 தொகுதிகளை வென்றது 2016-ல் பாஜக அஸாமில் முதன்முதலாக ஆட்சியமைப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தத் தொகுதிகளுள் காங்கிரஸ் 9-ஐயும் ஏ.ஐ.யு.டி.எஃப். இரண்டையும் வென்றன. ஆளும் கூட்டணியைப் பொறுத்தவரை தான் வெற்றிபெற்ற தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதும் அல்லது அதைவிட அதிகமாக வெல்வதும் மறுபடியும் ஆட்சியமைப்பதற்கு அவசியமாகும். இப்போதைய மகா கூட்டணியின் கட்சிகள் அப்போது தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்து பாஜக கூட்டணி பல தொகுதிகளை 2016-ல் வெல்வதற்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது.

மோதல்

முன்னாள் கிழக்கு பாகிஸ்தான், இந்நாள் வங்கதேசத்திலிருந்து தஞ்சம் புகுந்த முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்ற பிரச்சாரத்தை அஸாமில் பாஜக முன்னெடுத்துள்ளது. இது அஸாமில் உள்ள இந்துக்களுக்கும் பிற பூர்வகுடி மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று பாஜக பிரச்சாரம் செய்துவருகிறது. இந்தத் தேர்தலை ‘இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல்’ என்று பாஜக சித்தரித்துவருகிறது. அதாவது, மக்கள்தொகையில் 35% உள்ள சமூகத்துக்கும் மீதமுள்ள 65% சமூகத்துக்கும் இடையிலான மோதல். (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அஸாமின் மக்கள்தொகையில் 34.22% முஸ்லிம்கள், மீதமுள்ள மக்கள்தொகை இந்துக்களையும் மற்ற மதங்களையும் உள்ளடக்கும்.)

தேசியத்தையும், மண்ணையும், அஸாமிய சமூகங்களையும் ஏனைய பூர்வகுடிகளையும் காப்பதாக பாஜக திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. ஏ.ஐ.யு.டி.எஃப்பையும் மௌலானா பத்ருதீன் அஜ்மலையும் சுற்றியே தேர்தல் சொல்லாடல் அமைந்திருப்பது மொழியை அடிப்படையாகக் கொள்ளாமல் மதத்தை அடிப்படையாகக் கொண்டு அஸாமியர்கள் தங்கள் அடையாளங்களை வரையறுத்துக்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

- சுஷாந்தா தாலுக்தார், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த இதழாளர்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசைஅஸாமின் கள நிலவரம்அஸாம்Assam elections 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x