முகமூடிகளுக்கு வரலாற்றிடமிருந்து ஒரு சேதி!

முகமூடிகளுக்கு வரலாற்றிடமிருந்து ஒரு சேதி!
Updated on
4 min read

அரசியல் சித்தாந்தி என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட என். கோவிந்தாசார்யா தனது பிரபலமான ஒரு கூற்றால் கிட்டத்தட்ட அஞ்ஞாத வாசம் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக இருந்த இவர், பின்னணியிலிருந்து கட்சியை இயக்கிய மூளையாகக் கருதப்பட்டஅவர், தான் சொன்ன ஒரு வார்த்தைக்கு விலையாகத் தன் அரசியல் வாழ்வைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர் உதிர்த்த ‘முகமூடி’என்னும் வார்த்தை அத்தனை மோசமானதல்ல என்று தோன்றலாம். ஆனால் ஒரு பிரதமரை அவர் சார்ந்த கட்சியின் சித்தாந்தி அப்படி வர்ணித்தால்?

அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை முகமூடி என்று வர்ணித்த கோவிந்தாச்சார்யா அதன் பிறகு பொது வாழ்வில் சன்னியாசம் வாங்காத குறையாக மறைந்துபோனார். ஒரு சில சர்ச்சைகள் அவரைச் சூழ்ந்தாலும் இந்த முகமூடி என்னும் வார்த்தைதான் அவரது பொது வாழ்வுக்கு முடிவு கட்டியது என்று சொல்லலாம். அவரே விரும்பி ஏற்றுக்கொண்ட சன்னியாசம் இது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லக்கூடும். என்றாலும்‘முகமூடி’ என்னும் வர்ணனைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். இன்று அதே வார்த்தை சூட்சுமமான தன் இருப்பால் அரசியல் அரங்கில் தன் வலிமையை நிரூபித்துவருகிறது. இந்த முறையும் பிரதமரோடு அதற்குத் தொடர்பு இருக்கிறது.

வாஜ்பாயின் முகமூடியும் மோடியின் முகமூடியும்

அப்போது வாஜ்பாய் முகமூடி அணிந்தவராகக் கருதப்படவில்லை. அவரே முகமூடியாகக் கருதப்பட்டார். கட்சியின் கடும் போக்கை மறைக்கும் மிதவாத முகமூடி. வாஜ்பாய் காலத்தில் மக்களுக்கு அவரைப் பிடித்த அளவுக்குத் தீவிரத் தொண்டர்களுக்கு அவரைப் பிடிக்காது. தீவிரத் தொண்டர்களுக்குப் பிடித்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு வாஜ்பாய் அளவுக்கு மக்களிடையே செல்வாக்கு கிடையாது. மக்களைக் கவர அன்று கட்சிக்கு வாஜ்பாய் என்னும் முகமூடி தேவைப்பட்டது.

இன்றும் தேவைப்படுகிறது. ஆனால் முகம், முகமூடி இரண்டையும் இனிமேலும் பிரித்து வைக்கக் கட்சி விரும்பவில்லை. தொண்டர்களின் ஆதரவு பெற்றவரையே மக்கள் ஆதரவு பெறவைக்க என்ன செய்யலாம் என யோசித்தது. தங்கள் கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு முகமூடி போட அது முடிவுசெய்தது. அவர்தான் நரேந்திர மோடி. கட்சிக்குள் நிலவும் கடும் போக்கின் பிரதிநிதியாகத் தொண்டர்களால் பார்க்கப்பட்ட அவர், தனது முகத்தை அப்படியே காட்டினால் பரவலான மக்களிடம் அது எடுபடாது என்பதை உணர்ந்து ஒரு முகமூடியைஅணிந்துகொண்டார். அதுதான் வளர்ச்சி / வல்லரசு நாயகன் என்னும் முகமூடி.

நரேந்திர மோடி மீதான எதிர்ப்பின் மையம் அவரது தீவிர இந்துத்துவப் போக்கில் நிலைகொண்டுள்ளது. குஜராத் கலவரங்களையும் அதன் பிறகான அவரது நடவடிக்கைகளையும் முன்னிறுத்தி அவரது போக்கின் அபாயம் விமர்சிக்கப்படுகிறது. அவரை எதிர்ப்பவர்கள் கொள்கை அடிப்படையில் மட்டும் எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் தலைமை மீதான பெரும் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். பா.ஜ.க.வில் கிட்டத்தட்ட அனைவருமே இந்துத்துவக் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள்தான் என்றாலும் அந்தப் பிடிப்பு எல்லோரிடமும் ஒரே அளவில் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, வாஜ்பாயும் இந்துத்துவக் கொள்கையை ஏற்றவர்தான் என்றாலும் அதைத் தன்னுடைய மிதமானஅணுகுமுறையோடு தகவமைத்துக்கொண்டார். பரந்ததொரு பொருளில் அதற்கு விளக்கமளித்தார். அத்வானி, ஜோஷி, உமா பாரதி போன்றவர்கள் அதே இந்துத்துவத்தில் மேலும் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர்களாகக் கட்சியினராலும் பொதுமக்களாலும் பார்க்கப்பட்டனர். இவர்கள் வழியில் வந்த மோடியும் அவ்வாறே பார்க்கப்படுகிறார். இதுவே கட்சிக்குள் அவரது வலிமையாகவும் பொதுமக்கள் மத்தியில் அவரது பலவீனமாகவும் பார்க்கப்பட்டது. பிரதமர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்படுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தபோது அவர் நாடு முழுவதும் பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக இருக்க மாட்டார் என்று சொல்லப்பட்டது.

இதை மீறி அவரால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வெல்ல முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர் அணிந்த முகமூடிதான். அவரது தீவிர இந்துத்துவமுகத்தை மறைத்த வளர்ச்சி / வல்லரசு முகமூடி. குஜராத்தின் முதல்வராக இருந்தபோதே இந்தப் படிமம்அவர் மீது ஒட்டிக்கொண்டது. குஜராத் கலவரம் குறித்த தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதில் சொல்வதைப் பெருமளவில் தவிர்த்துவந்த மோடி, குஜராத்தின் ‘வளர்ச்சி’யை இந்த விமர்சனங்களுக்குப் பதிலாக முன்வைத்தார். நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் மாநிலம் குஜராத் என்னும் தோற்றத்தை உருவாக்கிய அவர், தன் மீது படிந்த கலவர நிழலை அந்தத் தோற்றத்தின் மூலம் விலக்க முயன்று அதில் பெருமளவு வெற்றியும் கண்டார்.

பிரச்சார உத்திகள் கொடுத்த வெற்றி

பன்முகத்தன்மை கொண்ட அதி நவீன விளம்பர உத்திகள் மூலம் இந்தப் பரிசோதனையைத் தேசிய அளவில் கொண்டு சென்றது அவரது அணி. கலவரங்களை ஊக்குவித்தவர் என்னும் பிம்பத்தின் மேல் வளர்ச்சி நாயகன் என்னும் பிம்பத்தை வெற்றிகரமாகப் பொருத்தியதற்கு அபாரமான பிரச்சார உத்திகள்தான் காரணம். ஐ.மு.கூட்டணியின். இரண்டாம் பதவிக்காலத்தின் மீதான கடும் அதிருப்தியை மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தப் பிரச்சார வியூகம், இந்துத்துவ நாயகன் என்னும் முகத்தின் மீதுவல்லரசு நாயகன் என்னும் முகமூடியைக் கச்சிதமாகப் பொருத்திவிட்டது. இந்துத்துவ எதிர்ப்பாளர்களையும் அவரது அணியில் சேர்க்க உதவியது இந்த முகமூடிதான். பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றிபெற்றதும் இந்தமுகமூடியால்தான்.

மோடியின் தீவிரப் போக்கைப் பற்றியும் கலவரங்களில்அவர் பங்கு பற்றியும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது அவரது புதிய ஆதரவாளர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. “அதெல்லாம்பழங்கதை. அதையே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? இன்று அவர் குஜராத்தில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். நாளை அவர் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதை ஏற்படுத்துவார். அதுதான் இப்போது முக்கியம்” என்றார்கள். வேறு எதை விடவும் வளர்ச்சியை, இந்திய வலிமையை முக்கியமானதாக நினைக்கும் மக்களை முற்றிலுமாக வசியம் செய்தது மோடி அணியின் பிரச்சாரம்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், மதநல்லிணக்கத்தை மட்டுமல்ல; விவசாயிகளின் நலனுக்கும் பெருவணிக நிறுவனங்களை நம்பும் வளர்ச்சி வியூகத்துக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றியும் பலர் கவலைப்படத் தயாராக இல்லை. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் காலங்காலமாகப் பேசிக்கொண்டிருந்த சுதேசி உணர்வைப் பற்றியும் கவலைப்படத் தயாராக இல்லை. தேசத்தின் ஆன்மாவை அடகுவைக்காத வளர்ச்சி என்பதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மோடி வந்து விட்டால் சுபிட்சம் என்று நம்பினார்கள். உள்நாட்டு உற்பத்தி பெருகும், வெளிநாட்டு முதலீடு பன்மடங்காகும், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கறுப்புப் பணம் இந்தியாவுக்குத் திரும்பி வரும், பாகிஸ்தான் வழிக்கு வரும்... மக்களின் இத்தகைய நம்பிக்கைகளை நன்றாகப் புரிந்துகொண்டு வகுக்கப்பட்ட வியூகத்தின் புற அடையாளம்தான் இந்தமுகமூடி.

வளர்ச்சி / வல்லரசு என்னும் இந்த முகமூடியை மோடி இன்னும் பகிரங்கமாகக் கழற்றிவைக்கவில்லை. அவரது வெளிநாட்டுப் பயணங்கள், அவர் செய்யவிருப்பதாகச் சொல்லப்படும் சீர்திருத்தங்கள் எல்லாவற்றிலும் இந்த முகமூடியின் முத்திரைகள் பதிந்துள்ளன. ஆனால் அதன் மாய சக்தி இப்போது எடுபடாமல் போய்விட்டது. அதைச் சுற்றி இருந்த ஒளிவட்டம் விலகிவிட்டது. நினைத்த சட்டங்களைப் போட முடியவில்லை. சொன்ன சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியவில்லை. பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கறுப்புப் பணம் இன்னும் வந்தபாடில்லை. அண்டை நாடுகளுடனான உறவு மேம்படவில்லை.

விளைவு, முகமூடியின் பளபளப்பு மங்குகிறது. மக்களின் முகங்களில் ஏமாற்றம் படர்கிறது. மோடியைத் தீவிரமாக முன்னிறுத்தி பா.ஜ.க. களமிறங்கிய இரண்டு மாநிலத் தேர்தல்கள் இந்த ஏமாற்றத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. 18 மாதங்களுக்கு முன்பு இதே மோடியின் பிம்பம் இதே மாநிலங்களில் வெற்றியைத் தேடித்தந்தது. இன்று நிலைமை மாறியிருக்கிறது. பிரச்சாரம் மாறவில்லை. உத்திகள் மாறவில்லை. முன்னிறுத்தப்பட்ட பிம்பங்கள் மாறவில்லை. ஆனால், அவற்றின் மீதான மக்களின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது.

வேறொரு தளத்தில் வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. கட்சிக்காரர்கள் இந்த முகமூடியை என்றுமே தீவிரமாகஎடுத்துக்கொண்டதில்லை. அவர்களைப் பொறுத்தவரை மோடி கொள்கைப் பிடிப்புள்ள உறுதியான தலைவர். பெரும் எதிர்ப்பைச் சமாளித்துத் தான் நினைத்ததைச் சாதித்தவர். அவரது தலைமையில் கட்சியின் கனவுகள் நிறைவேறும். இனியும் அத்வானி போன்றவர்களை நம்பிப் பலனில்லை. அவர்களுக்கு வயதாகிவிட்டது. தவிர, அவர்களது தீவிரப் போக்கும் தணிந்துவிட்டது.மோடிதான் நம்பிக்கை நட்சத்திரம். எதிரிகளை உறுதியோடு எதிர்கொண்டு பதிலடி கொடுக்கக்கூடியவர். மோடிதான் எதிர்காலம்.இத்தகைய உணர்வு நிலையைக் கொண்டகட்சிக்காரர்கள், சங்கப் பரிவார இயக்கங்களைச் சேர்ந்த தீவிரக் கொள்கைப் பிடிப்பாளர்கள், மோடியின் ஆட்சியைப் பொற்காலமாகப் பார்க்கிறார்கள்.

மோடி இப்போதெல்லாம் வெளிப் படையாக இந்துத்துவம் பேசுவதில்லை. நியூட்டனின் விதியைச் சொல்லி வன்முறையை நியாயப்படுத்துவதில்லை. இன்னமும் அவரது மொழி வளர்ச்சியின் மொழிதான். அவர் முன்வைக்கும் கனவு வல்லரசுக் கனவுதான். ஆனால் இந்துத்துவ இயக்கங்களின் தீவிரப் போக்காளர்கள் இதையெல்லாம் சட்டைபண்ணுவதில்லை. குஜராத் பரிசோதனை நாயகனின் ஆட்சி அவர்களைப் பொறுத்தவரை வாராது வந்த வரம். இதுதான் நல்ல சந்தர்ப்பம். வாஜ்பாயின் ஆட்சி அவர்களைப் பொறுத்தவரை சமரசங்களின் ஆட்சி. இன்று ஆட்சியில் இருப்பவர் சமரச வாதி அல்ல. இன்றுள்ள வலிமையில் சமரசத்துக்குத் தேவையும் இல்லை.

இந்த உணர்வால் உந்தப்பட்டவர்கள் மோடியின் முகமூடியைப் பார்ப்பதில்லை. முகத்தையே பார்க்கிறார்கள். முகமூடி வாக்காளர்களுக்கு. முகம் எங்களுக்கு. உற்சாகமடைந்த அவர்கள் தங்கள் அசல் முகங்களைக் காட்டுகிறார்கள். அவர்கள் பேச்சிலும் செயலிலும் அனல் பறக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் மதக் கலவரம் நடக்கிறது. மாட்டுக் கறி சாப்பிடுவது தேசியப் பிரச்சினையாகிறது. மாற்றுக் கருத்தாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். பாகிஸ்தானுக்குச் சவால் விடப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் கஜல் பாடகர் திரும்பிச் செல்லும் நிலை உருவாகிறது. எழுத்தாளரின் முகத்தில் கரி பூசப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் குறித்த ஆலோசனை நடக்கும் இடத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. உடை விஷயத்தில் சுதந்திரம் கோரும் பெண்கள் நிர்வாணமாகத் திரியட்டும் என்று ஒரு முதல்வர் அறிவுரை சொல்கிறார். மாட்டுக் கறி சாப்பிட்டால் மாநில முதல்வரின் தலையை வெட்டுவேன் என்று ஒரு தலைவர் அறிவிக்கிறார்.

இவர்கள் அத்தனை பேருமே பாஜகவினர் அல்ல. இவை அனைத்தையும் ஏற்பாடு செய்ததும் பாஜக அல்ல. ஆனால் இவை அனைத்தும் தங்களை அரங்கேற்றிக் கொள்ளச் சிறந்த தருணமாக நடப்புக் காலத்தைத் தேர்ந்தெடுத்துள்ள பொருத்தத்தை நாம் காணாமல் இருக்க முடியாது. இதுபோன்ற பேச்சுக்களும் செயல்களுக்கான தூண்டுதல்களும் இன்று உருவானவை அல்ல. ஆனால் இன்று அதிகமாக வெளிப்படுகின்றன. காரணம், இது அவர்கள் பார்வையில், தாங்கள் நினைத்ததைச் செய்வதற்கான காலம். அவர்களுடைய செயல் நாயகன் அரியணையில் வீற்றிருக்கும் சமயத்தை விட்டால் வேறு எப்போது வாய்ப்பு கிடைக்கும்?

இவர்கள் தங்கள் உற்சாகத்தில் வேறொரு மாற்றத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அல்லது அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள். வாக்குறுதிகளின் தோல்விகள் ஏமாற்றத்தை அதிகரிக்கின்றன. நேற்று பார்த்த அதே கண்ணோட்டத்துடன் மோடியை இன்றும் பார்க்க மக்கள் தயாராக இல்லை. குன்றாத உற்சாகத்துடன் பிரதமர் முழங்கும்போது விரக்தியுடன் முகத்தைத் திருப்பிக்கொள்பவர்களின் கண்களில் வெறித்தனமான காட்சிகள் படுகின்றன. இதற்குத்தானா வாக்களித்தோம் என்று அவர்கள் பொருமுகிறார்கள். தேர்தல் களத்தில் தங்கள் அதிருப்தியை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்கள்.

முகமூடிதான் பாதுகாப்பானது, முகம் அல்ல என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை சங்கப் பரிவாரங்களுக்குச் சொல்கிறது. வளர்ச்சிக்கான வாக்குறுதியை அளித்துதான் ஆட்சியை பிடித்தார் மோடி. மாட்டிறைச்சியைத் தடை செய்வோம், மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குவோம் என்று சொல்லி அல்ல. தனது நிஜ முகத்தை விரும்புவர்களிடமும் இதைத் தெளிவாக அவர் சொல்ல வேண்டும். நாடாளுமன்றம் என்பது நாகபுரியில் நடக்கும் கட்டுக்கோப்பான விஜயதசமி விழா அல்ல. பல விதமான கொள்கைளும் கண்ணோட்டங்களும் அணுகுமுறைகளும் கொண்ட இந்தியாவின் அடையாளம் அது என்பது இந்நேரம் மோடிக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். அவருடைய ஆதரவாளர்களுக்கும் அதைப் புரியவைக்கட்டும்!

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in