Published : 23 Mar 2021 03:13 am

Updated : 23 Mar 2021 05:28 am

 

Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 05:28 AM

அதிமுக தேர்தல் அறிக்கை: வாக்குகளைப் பெற்றுத்தருமா வாஷிங் மெஷின் வாக்குறுதி?

admk-election-manifesto-2021

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முன்னமே, எதிர்க்கட்சியான திமுகவின் தரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. எங்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பெரும்பாலான திட்டங்களை அதிமுக காப்பியடித்துவிட்டது என்பது திமுகவின் முக்கியக் குற்றச்சாட்டு. ஆனால், விவாதத்துக்குரிய அந்த வாக்குறுதிகளைக் காட்டிலும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், வீட்டுக்கொரு வாஷிங் மெஷின் என்பதுதான் மக்களை ஆரவாரமாகச் சென்றடைந்திருக்கிறது.

திமுகவின் அறிக்கையைப் போலவே அதிமுகவும் நீதிக் கட்சி பாரம்பரியத்திலிருந்துதான் தனது அறிக்கையைத் தொடங்கியிருக்கிறது. ஆனால், தலைவர்களுக்கிடையே எழுபதுகளில் எழுந்த கசப்பை இன்னும் அது தக்கவைத்துக்கொண்டிருப்பதன் நியாயம்தான் புரியவில்லை. ஆளுங்கட்சியாகக் கடந்த பத்தாண்டுகளாகப் பொறுப்பு வகித்த ஒரு கட்சி, எதிர்க்கட்சியின் மீதான கடந்த காலப் புகார்களை மீண்டும் நினைவூட்டி, ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதற்கு ஒரு தனித் துணிச்சல் வேண்டும்.


திமுகவைப் போலவே அதிமுகவும் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் 40% கொடுக்க முன்வந்திருக்கிறது. ஆனால், சட்டமன்ற வேட்பாளர்களில்கூட அந்தப் பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க அக்கட்சி முன்வரவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்துத் தொடர்ந்து பேசிவரும் திமுகவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 150 நாட்களுக்கு விரிவுபடுத்தவும் ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்தவும் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் அதை நடைமுறைப்படுத்தவும் ஒன்றிய அரசிடம் கோரி முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறிக்கை கூறுகிறது. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.273 என்ற அளவுக்கு இப்போதே ஒன்றிய அரசு உயர்த்திவிட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இயல்பாகவே அது உயர்ந்துவிடவும் கூடும். இன்றைய விலைவாசியில், அதன் பயன்மதிப்பு என்னவாகும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

ஆட்சிமொழியாகத் தமிழையும் அறிவிக்க வேண்டும் என்ற விஷயத்தில் திமுகவின் கொள்கையையே அதிமுகவும் ஆதரிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யவும் முயற்சிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பக்கத்திலிருந்து புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தையும் உள்ளடக்கியதாகத்தான் சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. எனவே, தமிழ்நாடு தனியுரிமை கோருவதற்கு வாய்ப்பில்லை. முதலில் இன்னும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்று ஆங்கிலத்திலேயே தொடரும் அதன் பெயரை சென்னை உயர் நீதிமன்றமாக்குவது பற்றியே யோசிக்க வேண்டும்.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தனது ஆட்சியின் தனிப்பெரும் சாதனைகளில் ஒன்றாக அதிமுக தேர்தல் அறிக்கை முன்வைக்கிறது. ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டமும் தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டமும் திமுக அரசால் தொடங்கப்பட்டவை என்று நினைவுபடுத்தப்பட்டுள்ளது. தொடங்கியது யாராக இருந்தாலும் இத்திட்டங்கள் வெகு நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற அதிமுக அரசின் வாக்குறுதி பாராட்டுக்குரிய ஒன்று. அரசுப் பள்ளிகளில் மதிய உணவு கொண்டுவருவதற்கு வாய்ப்பில்லாமல் பசியோடு வகுப்பில் அமர்கிற மாணவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதைப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து கவனப்படுத்திவந்ததை அதிமுக தாமதமாகவேனும் புரிந்துகொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அனைத்திந்தியத் தேர்வுகளுக்கு மாறாக, அந்தந்த மாநிலப் பணியிடங்களுக்குத் தனியாகத் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் என்று அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கோரிக்கை வைக்கப்பட்டு, அது நிறைவேற்றப்படும் எனில், நிச்சயம் இந்தியக் கூட்டாட்சியின் அரசு நிர்வாகத்தில் அது ஒரு புரட்சியாக அமையும். அதே நேரத்தில், தமிழ் தெரியாத மற்ற மாநிலத்தவர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்கு ஏற்றவகையில் விதிமுறைகளைத் திருத்தியது அதிமுக என்ற விமர்சனமும் நினைவில் எழுகிறது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசே நிர்ணயிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கடைசி நேரத்தில் வெளிவந்த மேனிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவிக்கையின்படி இணையவழி விண்ணப்பம் செய்வதற்கான தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதும்தான் எதார்த்தமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான ஊதியம், தனியார் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி வழியாக மட்டுமே பணி நியமனங்கள் நடைபெறும் என்று அதிமுக தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது. டிஆர்பி மூலமாக அரசுக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிட்டு இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அதற்கிடையில், பணி வரன்முறைப்படுத்துவதற்கு அவசியம் என்ன என்ற கேள்வியும்கூட எழுகிறது. எழுத்துத் தேர்வு இல்லாமல் எந்தவொரு நியமனமும் இருக்காது என்று ஏன் அதிமுகவால் சொல்ல முடியவில்லை?

சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவுவதில் திமுக போலவே அதிமுகவும் ஆர்வம் காட்டுகிறது. தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகள் சர்வதேச ஆய்வுலகுக்கு எத்தகைய பங்களிப்புகளை அளித்துள்ளன என்ற கேள்வியும் உடனெழுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கை துறைவாரியாகத் தனது வாக்குறுதிகளைப் பட்டியலிடுகிறது என்றால், அதிமுகவின் அறிக்கை குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்றும் வயதுரீதியாகவும் பாலினரீதியாகவும் பட்டியலிடுகிறது. தலைவர்களுக்கான நினைவுச் சின்னங்கள், புனிதப் பயணங்களுக்கான உதவித்தொகைகள் என்று சாதிரீதியாகவும் மதரீதியாகவும் அணுகுகிறது. எனினும், சுய உதவிக் குழு கடன்களுக்காக மகளிர் வங்கி என்பது போன்ற யோசனைகள் வரவேற்கத்தக்கவையாகவும் உள்ளன.

தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் ரூ.6,000 ஆக உயர்த்தப்படும் என்ற அதிமுகவின் வாக்குறுதி பெருந்தொற்றுக் காலத்தில் வாழும் நமக்குக் குற்ற உணர்வையே பரிசளிக்கிறது. சுகாதாரத் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இன்னும் மாதம்தோறும் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதுதான் நடைமுறையாக இருக்கிறது. நாளைக்கு ரூ.200-க்கும் குறைவான ஊதியத்துக்காகத்தான் ஒருவர் துர்நாற்றத்தின் நடுவே வேலைபார்க்கிறார் என்பதற்காக அரசு மட்டுமல்ல குடிமக்களாகிய நாமும் வெட்கப்படத்தான் வேண்டும்.

மதுவிலக்கு குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கை ஏதும் பேசாத நிலையில் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற வாக்குறுதியும் சம்பிரதாயமான முறையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பத்தாண்டு காலம் ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சி இத்தகைய வாக்குறுதியை அளிக்கும்போது தமது ஆட்சிக்காலத்தில் அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பதையும் விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறது.

எதிர்க்கட்சிகள் தங்கள் கனவுகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாகச் சொல்லலாம். ஆனால், ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் அதன் கடந்த கால ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சூழலை உருவாக்கிவிடுகிறது. அதிமுகவுக்கு நிச்சயம் இது சவால்தான். ஆனால், அனைவருக்கும் வீடு, அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,500, நகரப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணச் சலுகை, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே வந்து விநியோகிக்கும் திட்டம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறு சிலிண்டர்கள், வாஷிங் மெஷின், கல்விக் கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா என்று தொடரும் வாக்குறுதிகளின் பட்டியலில் அந்தக் கேள்விகள் எல்லாம் அடிபட்டுப்போய்விடுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்து இலவசப் பொருட்களைக் கொடுப்பதைத் தொடங்கிவைத்த திமுகவே இலவசங்கள் அறிவிப்பதை நிறுத்திக்கொண்டாலும் அதிமுக இதில் பத்தடி பாய்ந்திருக்கிறது.அதிமுக தேர்தல் அறிக்கைவாஷிங் மெஷின்Admk election manifesto 2021திமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x