

பிஹார் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாகவே, அசோகச் சக்ரவர்த்தியின் படங்களுடன் கூடிய பதாகைகளை வைத்து இடைவிடாமல் பிரச்சாரம் செய்தது பாரதிய ஜனதா. அசோகர் பிறந்த சாதியைத் தவிர, வேறெதுவும் பெரிதாகச் சொல்வதற்கு இல்லை என்பதைப் போலவே பதாகைகள் வடிக்கப்பட்டிருந்தன. மே மாதத்தில் பாட்னா நகரெங்கும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில், வாட்ட சாட்டமான அசோகர் - மீசை வைத்த அசோகர் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. அவர் சார்ந்த குஷ்வாஹா சாதியையும் சங்கத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தனர். அந்தப் பதாகைகள் மூலம் தாங்கள் சொல்லவரும் செய்தி என்ன என்பதை பாஜகவின் தலைவர் சுசில்குமார் மோடி சிறிதும் வெட்கமின்றி வெளிப்படுத்தியிருந்தார். மாநிலத்தில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் குஷ்வாஹா சாதியினரைத் தூண்டில் போட்டு இழுக்கத்தான் இத்தனை மெனக்கெடல்களும்!
அசோகரின் வரலாற்றை நன்கு ஊன்றிப் படித்தவர்களுக்குத் தெரியும், அவர் தன்னைச் சக்ரவர்த்தியாக எப்படி வெளிப்படுத்திக்கொண்டார் என்று. அசோகரின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சம்பவம் எதிலும் அவர் குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர் என்பதைத் தூக்கி நிறுத்தும்படியான குறிப்புகள் எதையும் பார்க்க முடியாது.
இட்டுக்கட்டப்பட்ட வரலாறு
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான கல்வெட்டுகளிலிருந்துதான் அசோகரைப் பற்றி நாம் அறிந்துகொள்கிறோம். தன்னுடைய மக்களுடன் அவர் நேரடியாகப் பேசும் வகையில்தான் கல்வெட்டுகளில் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அதில், தான் சார்ந்த சாதி இன்னதென்று அவர் சொல்லவில்லை. மாறாக, பவுத்தத்தைத் தழுவிய பிறகு தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களைத்தான் தெரிவித்திருக்கிறார். வெளிப்படையான உண்மைகள், உணர்வுபூர்வமான அனுபவங்கள், இறப்பு, அழிப்பு பற்றிய விளக்கங்கள், வாழ்க்கை பற்றிய நேர்மையான ஒப்புதல்கள், அவருடைய ஆதிக்கத்தைப் பறைசாற்றும்படியான உத்தரவுகள் என்று பலவும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. பாட்னாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் இருந்தவை இட்டுக்கட்டப்பட்ட வரலாறாக மட்டுமல்ல, அவருடைய உருவத்தைச் சுற்றி வரைந்திருந்த சூழ்நிலையும் பொருத்தமின்றியே இருந்தன. அசோகர் காலத்திய கல்வெட்டுகளில் அவர் பெண்களுடன் இருப்பதுபோலச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். அதில் அவர் இளகிய மனதுடன் அல்லது கவலைதோய்ந்த முகத்துடன்தான் இருப்பார். மீசை வைத்துக்கொண்டோ, ஆக்ரோஷமாகப் பார்த்துக்கொண்டோ காட்சிதர மாட்டார்.
அசோகரின் கருணை
அசோகரின் சிறப்புகளாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கும்போது, அவர் சார்ந்த சாதியைப் பற்றி மட்டும்தானா பாஜகவினர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. கருணையுள்ள அரசு மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது உட்பட, நாட்டு மக்களுக்கு அசோகர் சொன்ன செய்திகள் எத்தனையோ இருக்கும்போது, பாஜக ஏன் இதை மட்டும் பிரதானப்படுத்தியது என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டேன். பிற மதங்களையும் சகித்துக்கொண்டு அவற்றின் போதனைகளில் உள்ள நல்ல அறங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் பெற்று, தன்னுடைய வரலாற்றையே திருத்திக்கொண்டிருந்திருக் கலாம் பாஜக.
தன்னுடைய சாம்ராஜ்யத்தில் எல்லா மதத்தாரும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்பதை 7-வது பிரகடனத்தில் தெரிவித்திருக்கிறார் அசோகர். அனைத்து மதங்களையும் சித்தாந்தங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை 12-வது பிரகடனத்தில் தெரிவித்திருக்கிறார். இவ்விரு பிரகடனங்களின் சாராம்சம் என்னவென்றால், ஒரு நாட்டில் எல்லாவித மதத்தாரும் சம உரிமையுடன் வாழ உரிமையுண்டு, ஒருவருடைய மதக் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கற்று மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்பதாகும்.
அசோகரின் வழிகாட்டல்
இதை எப்படிக் கடைப்பிடிப்பது? அசோகரே வழிகாட்டுகிறார். “பேச்சில் நிதானம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தன்னுடைய மதமே அல்லது சித்தாந்தமே சிறந்தது என்று பெருமை பாராட்டிக்கொள்ளக் கூடாது. பிற மதங்களின் அல்லது சித்தாந்தங்களின் கருத்துகள் சரியல்ல என்று அவமதிப்பாகப் பேசக் கூடாது. பிற மதங்கள் குறித்தோ, சித்தாந்தங்கள் குறித்தோ பேச வேண்டிய இடத்தில்கூட மிதமான முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் பிற பிரிவினருக்கு உரிய கவுரவங்களை அளிக்க வேண்டும்.
சமரசமும் சமத்துவமும்
இதன்படி ஒருவர் நடந்தால், அவர் தன்னுடைய மதத்தை அல்லது சித்தாந்தத்தை மட்டுமல்ல, எல்லாவற்றையும் வாழவைக்க முடியும். அப்படியல்லாமல் ஒருவர் நடந்துகொண்டால், அவர் தன்னுடைய மதத்துக்கும் பிற மதங்களுக்கும் தீங்கு செய்தவர் ஆகிவிடுவார். தன்னுடைய மதத்தின் மீதுள்ள அபிமானம் காரணமாக பிற மதங்களை ஒருவர் கடுமையாக நிந்தனை செய்தால், அவர் தன்னுடைய மதத்துக்குத்தான் அதிக கேடுகளை ஏற்படுத்துவார். எனவே, எல்லா மதங்களுக்கிடையிலும் சமரசமும் சமத்துவமும் நிலவுவதே மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்” என்கிறார் அசோகர்.
இந்தக் கல்வெட்டுகள் குஜராத் மாநிலத்தின் கிர்னார் என்ற இடத்தில் உள்ளன. இவை தவிர, இந்தியாவின் சில இடங்களிலும் பாகிஸ்தானில் சில இடங்களிலும் இத்தகைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குஜராத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடிக்கும் இதில் பாடம் இருக்கிறது!
(டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரான நயன்ஜோத் லஹிரி, பழங்கால இந்தியாவில் அசோகர் என்ற நூலை எழுதியவர்).
தமிழில்: சாரி, ©: தி இந்து (ஆங்கிலம்).