என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- கே.கே.என்.ராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சம்மேளன (ஏஐடியுசி) கௌரவத் தலைவர்

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- கே.கே.என்.ராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சம்மேளன (ஏஐடியுசி) கௌரவத் தலைவர்
Updated on
2 min read

ஆறுகள் மீது அக்கறை: தமிழகத்தில் 17 பெரிய ஆறுகளும், 34 சிற்றாறுகளும் ஓடுவதாக ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால், நேரில் சென்று பார்த்தால் பல ஆறுகளைக் காணவில்லை. அந்த ஆறுகளை மீட்டெடுப்பதற்குத் தனித் திட்டம் தேவை. மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஆற்றுக்குள்ளேயே சாலையை அமைக்கிறார்கள். ஆற்று ஆக்கிரமிப்புகளை நியாயமாக அகற்றுவதற்குத் தனி அமைப்பு தேவை.

மணல் விலை நிர்ணயம்: ஆற்றைக் காக்க வேண்டும் என்றால் மணல் அள்ளுவதை முறைப்படுத்தியே ஆக வேண்டும். இணையம் வழியாக மணல் விற்பனை செய்யும் தமிழக அரசின் டிஎன் சேண்டு இணையதளத்தில் ஒரு யூனிட் மணல் ரூ.540 என்றுதான் விலையிடப்பட்டிருக்கிறது. ஆனால், வெளியில் ஒரு லோடு மணல் ரூ.20 ஆயிரத்துக்கும், ரூ.30 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் மணல் வாங்குவதற்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும். நியாயமான முறையில் இந்த இணையதளத்தை இயக்கினாலே தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு குறைந்துவிடும். விலையும் மட்டுப்படும். அரசு சார்பில் சிமென்ட் விற்பனை செய்வதைப் போல, மணலையும் மூட்டை மூட்டையாக விற்கலாம். உள்ளாட்சி நிறுவனங்களில் கட்டிட அனுமதி பெறுகிறபோதே, அதற்குரிய அரசானது மணல் பெறுவதற்கான கடிதத்தையும் வழங்கினால், குளறுபடியில்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். மணல் தட்டுப்பாடு குறையும்போது, எம் சாண்டு எனப்படும் மாற்று மணலின் விலையும் குறையும்.

உடனடித் தேவை தண்ணீர் பட்ஜெட்: தண்ணீர்ப் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் நம்மிடம் எந்த விதமான கணக்கும் இல்லை. சிற்றூர்கள் முதல் பெருநகரங்கள் வரையில் அந்தந்த ஊரின் நீர்த் தேவை என்ன என்பது குறைந்தபட்சம் அந்த ஊரை நிர்வகிக்கிற உள்ளாட்சி அமைப்புக்காவது தெரிந்திருக்க வேண்டும். தண்ணீர் மதிப்பீட்டுக் குழு அமைத்து, இதுகுறித்து முறைப்படி ஆய்வுசெய்ய வேண்டும். ஒவ்வொரு ஊருக்குமான நீர் ஆதாரங்கள் எவை, அரசு ஆவணங்களில் உள்ள அதே அளவுகளின்படி ஆறு, குளம், வாய்க்கால் போன்றவை உள்ளதா என்றெல்லாம் மதிப்பிட வேண்டும். அந்த ஊரின் மக்கள்தொகை, தண்ணீர் அதிகமாகப் பயன்படுகிற பள்ளி, விடுதி, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தண்ணீர்த் தேவை துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும். குழாய் வாயிலாகத் தண்ணீரை வீட்டுக்கே கொண்டுபோய்க் கொடுத்தாலும், மக்கள் ஏன் கார்ப்பரேஷன் தண்ணீரைக் குடிக்கத் தயங்குகிறார்கள் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். குடிநீர் வழங்கல் மட்டுமல்ல; பராமரிப்பு, தரப் பரிசோதனை போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருப்பதையே இது காட்டுகிறது. ஒருவரின் அளவு கடந்த நுகர்வு இன்னொருவருக்குத் தண்ணீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்பதால், அதற்கும் ஒரு கட்டுப்பாடு தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக, தண்ணீர் பட்ஜெட் கொண்டுவருவது அவசியம்.

குடிநீர் லாரிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்: தமிழகத்தில் குழாய் மூலம் விநியோகிக்கும் தண்ணீருக்கு மட்டும் தட்டுப்பாடு நிலவுவதையும், லாரி மற்றும் கேன் தண்ணீர் தங்குதடையின்றிக் கிடைப்பதையும் பார்க்கிறோம். இதன் பின்னணியில் சகித்துக்கொள்ள முடியாத தவறுகள் நடக்கின்றன. இன்னொரு புறம், லாரிகள் எங்கிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றன, அது குடிக்கத் தகுந்ததுதானா? தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? இது பற்றியெல்லாம் எந்த விவரமும் இல்லை. இது முறைப்படுத்தப்பட வேண்டும். எங்கே தண்ணீர் எடுக்கப்படுகிறது, எங்கே தரப் பரிசோதனை செய்யப்படுகிறது, எந்த வழியாகக் கொண்டுவரப்படுகிறது போன்ற அனைத்து விவரங்களையும் தண்ணீர் லாரிகளில் எழுத வேண்டியதைக் கட்டாயப்படுத்துவதுடன், அந்த வாகனங்களை ஜிபிஎஸ் கருவியால் கண்காணிக்க வேண்டும்.

கழிவுநீர் அகற்றலில் அலட்சியம் வேண்டாம்: நகரங்களைப் போலவே இப்போது கிராமங்களிலும் தண்ணீர்ப் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. விளைவாக, சாக்கடைக் கால்வாய்கள் வற்றாத ஜீவநதிபோல் ஓடிக்கொண்டிருக்கின்றன. பெருநகரங்களைப் போல இங்கெல்லாம் கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான சிந்தனைகளே இல்லை. விளைவாக, அந்தக் கழிவுநீரெல்லாம் இயல்பாகப் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து, உள்ளூர் நீர்நிலைகளிலேயே கலக்கின்றன. கடைசியில், உள்ளூரின் நிலத்தடி நீர் மாசுபட்டுப் போகிறது. விளைவாக, பெருநகரங்களைப் போல இவ்வூர்களுக்கும் வெளியூர்களிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தும்போதே, கழிவுநீரையும் அகற்றும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும், இல்லையென்றால் கொசு ஒழிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பல மடங்கு செலவிட வேண்டிவரும் என்றும் 1960-களிலேயே லூர்து அம்மாள் சைமன் அறிக்கை எச்சரித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் வடிகால் வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அடுத்தடுத்த அரசுகள் குடிநீர் வழங்கலில் காட்டிய அக்கறையைக் கழிவுநீர் அகற்றுவதில் காட்டவில்லை. இனியேனும் கழிவுநீர் அகற்றுவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in