

எதிர்க்கட்சியினரை எதிரிகளாகவே பார்க்கும் கலாச்சாரம் தற்போது தமிழக அரசியலில் வேரூன்றியிருக்கிறது. அண்ணா இதிலிருந்து மாறுபட்டவர். 1967 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்தார் அண்ணா. அதுவரை அண்ணாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்த பெரியாரோ அண்ணாவை முழு மனதாக வரவேற்று அவருக்குத் தனது வாழ்த்துகளைக் கூறினார்.
பெரியாரை மட்டுமல்ல; முன்னாள் முதல்வர்களான காமராஜர், எம்.பக்தவத்சலம் போன்றோரையும் மரியாதை நிமித்தமாக அண்ணா சந்தித்தார். காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சி.சுப்பிரமணியத்தைச் சந்தித்தபோது, அவரிடம் அண்ணா இப்படிக் கூறினார்: “இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த நீங்கள் எதிர்க்கட்சியாக நாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தீர்கள். இனி, அதனை நாங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம்.” இதைக் கேட்டு சி.சுப்பிரமணியம் புன்னகையுடன் அண்ணாவை வாழ்த்தி அனுப்பினார்.