Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

தண்ணீருக்கு உரிய மதிப்பைக் கொடுப்போம்!

அ.நாராயணமூா்த்தி

உலகத் தண்ணீா் தினத்தின் (மார்ச் 22) இந்த ஆண்டுக்கான தலைப்பு ‘நீருக்கு உரிய மதிப்பைக் கொடுப்போம்’. உணவு, பண்பாடு, மனித நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் இயற்கைச் சூழலோடு நீா் பின்னிப் பிணைந்திருப்பதால் நீருக்குக் கொடுக்கப்படும் விலையைவிட, அதன் மதிப்பு மிகப் பெரியது எனவும், இதனை மறந்தால் நாம் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் தண்ணீர் தினத்துக்கான செய்தியில் ஐநா எச்சரித்துள்ளது.

இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில், சமீப காலமாகத் தண்ணீா் பற்றி வெளிவரும் செய்திகள் பயத்தை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் தண்ணீா் தேவை படு வேகமாக உயா்ந்துவரும் சூழலில், அதனுடைய அளிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. தொடா்ந்து குறைந்துவரும் நன்னீரினால் உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகக் கடுமையான நீா்ப் பிரச்சினையை வரும் 2025-க்குள் சந்திக்க வேண்டியிருக்கும். நிதி ஆயோக் 2018–ல் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 60 கோடி இந்திய மக்கள் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்திப்பது மட்டுமல்லாமல், சுத்தமான குடிநீா் கிடைக்காத காரணத்தால், சுமார் இரண்டு கோடி மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது எனவும் கூறியுள்ளது.

மக்கள்தொகையாலும் பொருளாதார வளா்ச்சியாலும் நீரின் தேவை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. 2001-ல் தனிநபருக்குச் சராசரியாகக் கிடைத்த நீரின் அளவு 1,816 கனமீட்டர். 2050-ல் 1,219 கனமீட்டராகக் குறையும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தனிநபர் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் நீா் 1,700 கனமீட்டருக்குக் குறைவாக இருந்தால் அங்கு தண்ணீா்ப் பஞ்சம் உள்ளதென வரையறை செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு

தண்ணீா்ப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்ப தால் இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை உள்ள நாட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசால் கொடுக்கப்படும் நீர் உரிய அளவு கிடைக்காத நிலையில், ஏழை மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். இது ஏழை விவசாயிகளையும் கூலித் தொழிலாளா்களையும் பாதிக்கும். பாசனத்துக்கான நீரின் அளவு குறைந்தால், ஏழை விவசாயிகள் பயிர்ச் சாகுபடி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். நீா்ப் பாசனப் பற்றாக்குறையால் விவசாயிகள் நகரங்களை நோக்கிக் குடிபெயா்ந்துவருவது அதிகரித்திருக்கிறது.

குடிநீா்ப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்படுபவா்கள் பெண்கள். பல மணி நேரம் விரயம் செய்து நீரைத் தேடி அலைவதாலும், காத்துக்கிடப்பதாலும் 15 கோடி வேலை நாட்களை ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் இழப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.1,000 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. நீா்ப் பற்றாக்குறையால் சில நாடுகளில் பொருளாதார வளா்ச்சி 6% அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளதாக உலக வங்கியின் ஓா் அறிக்கை (2016) கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த மாற்றங்களால் கிராமப்புற வறுமை அதிகரித்துவிடும்.

அலட்சியம் வேண்டாம்

ஏறக்குறைய 85% அளவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயத் துறையில் நீரின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும். நீரை அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய பயிர்களான நெல், கரும்பு, வாழை மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடிப் பரப்பளவைக் குறைக்க வேண்டும். ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்வதற்கு 3,000 முதல் 5,000 லிட்டா் தண்ணீரும், ஒரு கிலோ கரும்புக்கு 1,500 முதல் 3,000 லிட்டா் தண்ணீரும் தேவைப்படுகிறது. அதிகம் தேவைப்படுகின்ற பருப்புப் பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள் உற்பத்தி செய்வதற்கு மிகவும் குறைவான நீா் போதும். தண்ணீா் அதிகம் தேவைப்படும் பயிர்களைச் சாகுபடி செய்வதை நீா்ப் பற்றாக்குறையுள்ள மாநிலங்கள் தவிர்க்க வேண்டும். பழங்காலப் பாசன முறையை மாற்றிப் புதிய பாசன முறைகளான சொட்டுநீர், தெளிப்பு நீா்ப் பாசனம் மூலமாக நீரை விரயம் இல்லாமல் உபயோகப்படுத்த முடியும்.

நீர்த் தேவையைக் குறைப்பதோடு, நீரின் அளிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2.20 கோடிக்கும் கூடுதலான பம்புசெட்டுகள் தற்போது இந்தியாவில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மொத்தமுள்ள 5,842 வட்டங்களில், சுமார் 1,494-ல் நிலத்தடி நீா் பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இது ஏழை விவசாயிகளைப் பெரிதும் பாதிப்பதோடு, சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் சிறப்பு நீா்க் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

தமிழகத்தில் 41,127 குளங்களும் ஏரிகளும் உள்ளன. இவை நம் மாநிலத்தின் உயிர்நாடியாகப் பல ஆண்டுகள் இருந்துள்ளன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு (347 டிஎம்சி), தமிழகத்திலுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவைவிட (243 டிஎம்சி) அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் ஆக்கிரமிப்புகளாலும், அடுத்தடுத்த அரசுகளின் அலட்சியப் போக்காலும் சீரழிந்துவருகின்றன. இவற்றைக் காப்பாற்றி நீரின் அளிப்பை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால், மழையின் அளவு குறைந்து தண்ணீா்த் தேவையிலும் அளிப்பிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ‘ஐபிசிசி’ (IPCC) என்ற உலக பருவநிலை கண்டறியும் அமைப்பு கூறியுள்ளது. இது இந்தியா போன்ற நாடுகளில் தண்ணீா்ப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கும். எனவே, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து, தண்ணீா்தானே என்று அலட்சியம் செய்யாமல், அனைவரும் ஒன்றுசோ்ந்து நீரைப் பாதுகாத்துப் பொருளாதார மற்றும் சமூக வளா்ச்சிக்கு வித்திட வேண்டும்.

- அ.நாராயணமூா்த்தி, முன்னாள் உறுப்பினா், விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம், இந்திய அரசு, புதுடெல்லி.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x