

முதலாவது சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.ராமமூர்த்தி.
மதுரை சட்டமன்றத் தொகுதியிலிருந்து அவர் வெற்றிபெற்றிருந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அரசியல் சதி வழக்கு ஒன்றின் காரணமாக அவர் மதுரையில் சிறைவைக்கப் பட்டிருந்தார். எனவே, சிறையிலிருந்தே ப.ராமமூர்த்தி வேட்பு மனு தாக்கல்செய்தார். அவருக்காகக் கட்சியின் மற்ற தலைவர்களான கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, ஐ.மாயாண்டிபாரதி ஆகியோர் தேர்தல் பணிகளைச் செய்தார்கள்.
அன்றைய மதுரை நகரம் விசைத்தறித் தொழிலகங்களின் மையமாக இருந்தது. தொழிலாளர்களின் ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சிக்கே கிடைத்தது. 1967-ல் அதே மதுரையிலிருந்து சிபிஐ(எம்) சார்பில் மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார் பி.ராமமூர்த்தி. 1967 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) சார்பில் மதுரை கிழக்கு மற்றும் மேற்குத் தொகுதிகளிலிருந்து கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.